சென்னை: டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை பாதிப்பில் இருந்து, மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர, காவல்துறையினர், பிற அரசு துறையினர், இரவு, பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தருணத்தில், சில சமூக விரோதிகள், சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாக்கி, மக்களிடையே, மழை, வெள்ளம் குறித்து அச்சத்தையும், பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து, பொய் பிரசாரம் செய்கின்றனர். அரசு நிர்வாகத்திற்கு அவப்பெயர் உருவாக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக, சிலர் இதுபோன்ற அவதுறான கருத்துகளை திட்டமிட்டு பரப்பி வருவது சட்டப்படி குற்றம்.

எனவே, இதுபோன்ற சமூக பொறுப்பின்றி, உண்மைக்கு புறம்பான இடுகைகளை பதிவிடுவோர், எவராயினும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களது சமூக வலைதள கணக்கும் முடக்கப்படும். இவ்வாறு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.