முதல் முறை!11 சுரங்கப்பாதைகள், 20 சாலைகள் மூடல்; சென்னையில் 523 இடங்களில் வெள்ளம்

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021 | |
Advertisement
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால், 523 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நகரில், 11 சுரங்கப்பாதைகள், 20 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், பல சாலைகளில் தத்தளித்த படியே வாகன போக்குவரத்து நடந்தது.குடிநீர் ஏரிகளில் இருந்து பெரிய அளவில் உபரி நீர் திறக்கப்படாத நிலையில், இத்தனை இடங்களை வெள்ளம் சூழ்ந்தது இதுவே
 முதல் முறை!11 சுரங்கப்பாதைகள், 20 சாலைகள் மூடல்; சென்னையில் 523 இடங்களில் வெள்ளம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால், 523 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. நகரில், 11 சுரங்கப்பாதைகள், 20 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், பல சாலைகளில் தத்தளித்த படியே வாகன போக்குவரத்து நடந்தது.

குடிநீர் ஏரிகளில் இருந்து பெரிய அளவில் உபரி நீர் திறக்கப்படாத நிலையில், இத்தனை இடங்களை வெள்ளம் சூழ்ந்தது இதுவே முதல்முறை.வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து, சென்னையில் அக்., 25ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் வரை, 49.55 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, 6ம் தேதி, ஒரே நாளில் ௨௦ செ. மீ., மழை பெய்தது. மயிலாப்பூரில் அதிகபட்சமாக 23 செ.மீ., பதிவானது. மாநகரில் 317 இடங்களில் மழை நீர் வெள்ளமாக தேங்கியது. மழை நீர் தேங்கியதால் ஆறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. பின், படிப்படியாக நீர் தேங்கிய இடங்களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வந்தனர். மழை தொடர்ந்ததால், வெள்ளம் சூழ்ந்த இடங்கள், 400 ஆக அதிகரித்தது.இதில், 240 இடங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் அகற்றப்பட்ட நிலையில், 160 இடங்களில் வெள்ள நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை, 13.6 செ.மீ., மழை வெளுத்து வாங்கியதால், மாநகரில் 502 இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. மாதவரம், வியாசர்பாடி, தி.நகர், அயனாவரம் கொன்னுார் நெடுஞ்சாலை, எழும்பூர் கன்னிமாரா நுாலகம், கே.கே.நகர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ௫ அடி உயரத்திற்கு மேல் மழைநீர் தேங்கியது.

மழை நீர் வெள்ளம் மூழ்கடித்ததால் 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை என, பிரதான சாலைகள் உட்பட, உட்புற பேருந்து சாலைகளிலும் மழை நீர் ஆறாக ஓடியது.இதனால், 20க்கும் மேற்பட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளும் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டன. மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் இயங்கின.பெரும்பாலான அலுவலகங்கள் மூடப்பட்டதால், பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆனாலும், எச்சரிக்கையை மீறி, புகைப்படம் எடுக்க, சுற்றிப்பார்க்க வந்தவர்களில் பலர் மரக்கிளைகள் உடைந்து விழுந்தும், சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்தும் காயமடைந்தனர். இவர்களில், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தொடர்ந்து, மழை நீர் தேங்கிய பகுதிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், 412 ராட்சத மோட்டார் பம்புகள் வாயிலாக நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 46 ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக, அடைப்புகள் சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

மழை நீர் தேங்கியது, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றுக்காக, 13 ஆயிரம் பேர், மாநகராட்சியை அழைத்துள்ளனர். இதில், 5,500 பேரின் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.கடந்த 2015 பெருமழைக்கு பின், சென்னையில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது செம்பரம்பாக்கம் உள்ளிட்ட குடிநீர் ஏரிகளில் இருந்து, அதிகளவில் உபரிநீர் திறக்கப்பட்டதால், நகர் முழுதும் வெள்ளத்தில் மூழ்கியது.

ஆனால், தற்போதைய வெள்ளம் அப்படியில்லை. நான்கு குடிநீர் ஏரிகளில் இருந்து, மொத்தமாகவே 16 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, 2,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.அப்படியான சூழலில், நகரில் பெய்த மழையால் மட்டுமே, 523 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவே முதல்முறை.காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து, மழை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஓரிரு தினங்களில் இந்த நீர் வடியும் என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.253 மரங்கள்சாய்ந்தன!


சென்னையில் நேற்று ஒரே நாளில், 116 மரங்கள் சாய்ந்தன. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் உடனடியாக அகற்றினர். அக்., 25ம் தேதி முதல் நேற்று வரை, 253 மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன.


மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்


*வியாசர்பாடி சுரங்கப் பாதை
* வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதை
* திருவொற்றியூர் அஜாக்ஸ் சுரங்கப் பாதை
* எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப் பாதை
* தி.நகர் மேட்லி சுரங்கப் பாதை
* தி.நகர் துரைசாமி சுரங்கப் பாதை
*பழவந்தாங்கல் சுரங்கப் பாதை
* தாம்பரம் சுரங்கப் பாதை
* சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப் பாதை
* வில்லிவாக்கம் சுரங்கப் பாதை
* மூலக்கொத்தளம் காக்கன் சுரங்கப் பாதை


மாநகர பேருந்துகள் மாற்றம்


பெரம்பூர் பேரக்ஸ் சாலை - அஷ்டபுஜம் சாலை சந்திப்பில், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாநகர பேருந்துகள் செல்ல முடியவில்லை. இதனால், டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் பேருந்துகள், பிரிக்கிளின் சாலை, ஸ்டிராஹன்ஸ் சாலை வழியே புளியந்தோப்பு சென்றடையும். அதேபோல், புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள், ஸ்டிராஹன்ஸ் சாலை, பிரிக்கிளின் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும்.போக்குவரத்து தடை செய்யப்பட்ட சாலைகள்


* கே.கே.நகர் - ராஜ மன்னார் சாலை
* மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை
* ஈ.வி.ஆர்., சாலை - காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை
* செம்பியம் - ஜவஹர் நகர்
* பெரவள்ளூர் - 70 அடி சாலை
* புளியந்தோப்பு - டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் சாலை, பட்டாளம் மணி கூண்டு
* வியாசர்பாடி - முல்லை நகர் பாலம்
* பள்ளிக்கரணை - 200 அடி சாலை காமாட்சி மருத்துவமனை முதல் ஈச்சங்காடு சந்திப்பு வரை மாநகர பேருந்துகள் மட்டும் இயங்க அனுமதி
* சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமை செயலகம் செல்லும் வழி.போக்குவரத்து மாற்றம்!


*மாதவரம் எம்.ஆர்.எச்., சாலை, மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும், ரெட்டேரி நீர், வெஜிடேரியன் வில்லேஜ் சாலை வழியாக புழல் கால்வாயை அடைவதால், எம்.ஆர்.எச்., சாலையில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. எனவே, ஒரு பக்க சாலை மூடப்பட்டுள்ளது.உள்வரும், வெளிசெல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையின் ஒரேபக்கத்தின் வழியாக செல்கிறது
*குமணன்சாவடி - குன்றத்துார் சாலை ஒருபுறம் மூடப்பட்டுள்ளது
* வடபழநி முதல் கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன
* திருமலைப்பிள்ளை சாலை, காமராஜர் இல்லம் முன் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வள்ளூவர்கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணிமஹால் - பெஜ்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை சாலையில் செல்லலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X