செஞ்சி-செஞ்சி பகுதியில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்து சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் தடுப்பணை இல்லாததால் பல ஆயிரம் கனஅடி நீர் வீடூர் அணையில் இருந்து கடலுக்கு வீணாக திறந்து விடப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் வெளி மாவட்ட ஆறுகள், வாய்க்கால்கள் ஏதும் இல்லாத பகுதியாக செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாக்கள் உள்ளன. செஞ்சி தாலுகாவில் உள்ள பாக்கம் மலை, காடுகளில் உற்பத்தியாகும் வராகநதியே செஞ்சியை செழுமைப் படுத்தி வருகிறது.பாக்கம் மலை காடுகளை அடுத்துள்ள, சிறுவாடி காடுகளும் வராக நதியின் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. இங்கிருந்து கிடைக்கும் மழை நீர் மேல்மலையனுார் பெரிய ஏரியில் துவங்கும் சங்கராபரணியில் கலந்து வீடூர் அணைக்கு வருகிறது. வராக நதியின் குறுக்கே சிறுவாடி வனப்பகுதியில் கூடப்பட்டு என்ற இடத்தில் 1915ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து மேலச்சேரி, சிங்கவரம், குப்பம், சிறுகடம்பூர், நாட்டேரிக்கு தண்ணீர் செல்கிறது. மேலச்சேரியில் 100 ஏக்கர் நிலம் நேரடி பாசனம் பெறுகிறது.வராக நதியில் இரண்டாவது அணையாக செவலபுரையில் 1979ல் கட்டிய அணை உள்ளது. இதில் இருந்து வல்லம் ஒன்றியத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.இதையடுத்து பெரிய அளவில் பயன்தரும் அணையேதும் இதன் குறுக்கே இல்லை. நேரடியாக 45 கி.மீ., துாரத்திற்கு பயணித்து வீடூர் அணைக்கு தண்ணீர் செல்கிறது. வீடூர் அணையை சென்றடைவதற்கு முன்பாக ரெட்டணை அருகே தொண்டியாறும் சங்கராபரணியில் இணைகிறது.பருவமழை அதிகம் பொழியும், தொண்டியாறு மற்றும் சங்கராபரணி ஆற்றில் வரும் மழை வெள்ளத்தால் வீடூர் அணை விரைவாக நிறைந்து விடுகிறது. வீடூர் அணை மூலம் தமிழக பகுதியில் 2,200 ஏக்கரும், புதுச்சேரியில் 1,000 ஏக்கர் நிலமும் பலனடைகின்றன. 32 அடி உயரம் உள்ள இந்த அணையில் 605 மில்லியன் கனஅடி நீரை மட்டுமே தேக்கி வைக்க முடியும்.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கிய சில தினங்களில் வீடூர் அணை நிரம்பியது. கடந்த 4 நாட்களாக இந்த அணைக்கு வரும் 2,800 கன அடி நீரை நேரடியாக திறந்து கடலுக்கு அனுப்பி வருகின்றனர். இனி வரும் மழைக் காலம் முழுவதும் பெய்யும் நீரை தேக்கி வைக்க எந்த அணையும் இல்லை.மழைக் காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள செஞ்சி நகரத்தில் அடுத்த 5 மாதங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செஞ்சி, மேல்மலையனுார் பகுதி விவசாய கிணறுகளில் பாசனத்திற்கு தண்ணீர் இருக்காது.இது போன்று வீணாகும் தண்ணீரை சேமிக்க செவலபுரை அடுத்துள்ள இடங்களில் ஆய்வு செய்து வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என வாக்குறுதியளித்தே அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்.
ஆனால் இதுநாள் வரை திட்டத்தை நிறைவேற்றவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது 2020ம் ஆண்டு மேல்களவாய் அருகே சங்கராபரணியில் தடுப்பணை கட்ட மண் பரிசோதனை செய்தனர். இதன் பிறகு திட்டம் தயாரித்து தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளவில்லை. எனவே செஞ்சி தாலுகா விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE