தேனி : தேனி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் 790 பணியாளர்கள் வீடு, வீடாக சென்று 'டெங்கு' பாதிப்பு உள்ளதா என கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .
தேனி மாவட்டத்தில் ஜனவரியில் முதல் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மாதந்தோறும் 20 பேர் வீதம் பாதித்தனர். இதில் ஆண்டிபட்டி, ரோசனப்பட்டி, கோம்பை, பெரியகுளம் பகுதியில் அதிக பாதிப்பு இருந்தது. தற்போது வரை 200 பேர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
தடுப்புப் பணி தீவிரம்:
துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் கூறியதாவது: 36 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 நகர்புற சுகாதார நிலையங்களில் தொடர் காய்ச்சல் பாதிப்பு குறித்து கண்காணிக்க டாக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட பூச்சியியல் நிபுணர் தெய்வேந்திரன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர்கள் களப்பணிகளை மேற்பார்வையிடுகின்றனர்.
எட்டு வட்டாரங்களில் தினக்கூலி அடிப்படையில் லார்வா புழுக்களை அழிக்க 180 பேர், 22 பேரூராட்சிகளில் 328 பேர், 6 நகராட்சிகளில் 282 பேர் என, 790 பேர் 'டெங்கு' தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினசரி ஆய்வில் இதுவரை 130 இடங்களில் 'லார்வா' க்களை எடுத்து சென்னை ஆய்வு மையத்திற்கு வைரஸ் பாதிப்பை கண்டறிய அனுப்பி உள்ளோம். முடிவுகள் கிடைத்ததும் டெங்கு, சிக்கன் குன்யா காய்ச்சல் உறுதி செய்யப்படும். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE