கோவை: 'சென்னை ஐகோர்ட் நீதிபதி சஞ்சய் பானர்ஜியை இடமாற்றம் செய்வதற்கான, கொலிஜியத்தின் பரிந்துரையை தமிழக வக்கீல்கள் அரசியலாக்கக் கூடாது' என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், மாற்றம் ஆகியவற்றில் மத்திய அரசுக்கு இருந்த முழு அதிகாரத்தையும் கொலிஜியம் தனது கையில் எடுத்திருக்கிறது. அதன் பரிந்துரையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி, மேகாலயாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் கொலிஜியத்துக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது. தலைமை நீதிபதி நியமனத்தை, தமிழக அரசியல் அதிகார வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டால், தமிழக மக்களுடைய நிலைமை விபரீதமாகி விடும்.அரசியல் ரீதியாகக் குரல் கொடுக்கும் போக்கை சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் விட்டுவிட்டு, கொலிஜியம் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.