சென்னை : நீர் நிரம்பி இருந்த தையூர் ஏரியின் மையத்தில் இருந்த மின் கோபுரத்தில் ஏற்பட்ட பழுதை, படகில் சென்று உயிரை பணயம் வைத்து சீரமைத்து, சென்னைக்கு மின்சாரம் வழங்கிய மின்வாரிய ஊழியர்களின் பணியை,பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
மத்திய அரசின் 'பவர் கிரிட்' நிறுவனத்திற்கு, செங்கல்பட்டு மாவட்டம், களிவந்தப்பட்டில் 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் உள்ளது. சென்னைக்கு மின்சாரம் வழங்குவதற்காக, பிற மாநிலங்கள், மற்ற மாவட்டங்களில் இருந்து களிவந்தப்பட்டு துணைமின் நிலையத்திற்கு மின்சாரம் எடுத்து வரப்படுகிறது.களிவந்தப்பட்டு மின் நிலையத்தில் இருந்து, 230 கி.வோ., மின் கோபுர வழித்தடத்தில், சென்னை தரமணியில் உள்ள 230 கி.வோ., துணைமின் நிலையத்திற்கு மின்சாரம் செல்கிறது.
ஸ்ரீபெரும்புதுார் 400 கி.வோ., துணைமின் நிலையத்தில் இருந்தும் தரமணிக்கு மின்சாரம் வருகிறது. தரமணி துணைமின் நிலையத்தில் இருந்து அடையாறு, வேளச்சேரி, மயிலாப்பூர், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு மின்சாரம் எடுத்து செல்லப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.கனமழை காரணமாக, நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு, களிவந்தப்பட்டு -- தரமணி வழித்தடத்தில், கேளம்பாக்கம் அருகில் தையூர் ஏரியின் மையத்தில் இருந்த 122வது மின் கோபுரத்தில், 'இன்சுலேட்டர்' சாதனம் பழுதானது.இதனால், அந்த வழித்தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்வது தடைபட்டது.
தொடர்ந்து மழை பெய்த நிலையிலும், மின் கோபுரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய, மதியம் 11:00 மணிக்கு ஆறு மின் ஊழியர்கள் படகில் சென்றனர். மூன்று பேர் கோபுரம் மேல் ஏறிய நிலையில், பலத்த காற்று வீசியது. இதனால், நீர்வரத்து திடீரென அதிகரித்து, படகில் இருந்த மூன்று ஊழியர்களும் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவதற்குள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.அரை கி.மீ., துாரம் தண்ணீரில் தத்தளித்து சென்ற நிலையில், தாழ்வான பகுதியில் படகு சாய்ந்து நின்றது.அதில் தத்தளித்தவர்களை, தேசிய மீட்பு படையினர் விரைந்து மீட்டனர்.
கோபுரத்தில் சிக்கிக் கொண்ட ஊழியர்களால் பழுதை சரிசெய்ய முடியவில்லை. அவர்கள் இரவு 7:00 மணி வரை கோபுரத்தில் நின்றபடி இருந்த நிலையில், மீட்பு படையினர் மீட்டனர்.நேற்று காலை மழை பெய்யவில்லை. இதனால், ஒன்பது மின் ஊழியர்கள் படகில் சென்று, தையூர் ஏரியில் இருந்த மின் கோபுர பழுதை சரிசெய்ததை அடுத்து, களிவந்தப்பட்டில் இருந்து தரமணிக்கு மீண்டும் மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
மின் ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து, சென்னைக்கு மின் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டதற்கு, மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தரமணி -- களிவந்தப்பட்டு வழித்தடத்தில் பழுது ஏற்பட்டாலும், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து தரமணிக்கு தொடர்ந்து மின்சாரம் எடுத்து வரப்பட்டதால், மின் வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என்றார்.