பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை முதல் குமரி வரை சிதறடித்த வெள்ளம் 12 நாட்களாக தொடர்ந்து கொட்டிய பருவமழை

Added : நவ 12, 2021
Share
Advertisement
சென்னை:வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 12 நாட்களாக தொடர்ச்சியாக பருவமழை பெய்துள்ளது. இந்த மழையால், சென்னை முதல் குமரி வரை கடலோர மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 25ல் துவங்கியது. முதல் கட்டமாக தென் மாவட்டங்களில் கன மழையும், வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது. அக்., 26ல்

சென்னை:வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 12 நாட்களாக தொடர்ச்சியாக பருவமழை பெய்துள்ளது. இந்த மழையால், சென்னை முதல் குமரி வரை கடலோர மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 25ல் துவங்கியது. முதல் கட்டமாக தென் மாவட்டங்களில் கன மழையும், வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது. அக்., 26ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, 31ல் தமிழக நிலப்பரப்பை அடைந்தது. இதனால், டெல்டா மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது.அதிகபட்சமாக கடலுார் மாவட்டம், கொத்தவாச்சேரியில் 15 செ.மீ., மழை பெய்தது.

பின், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரி வழியே அரபிக் கடலுக்கு நகர்ந்தது.நவ., 1ல் குமரி முதல் ஆந்திரா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.இதனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டம் துவங்கி, கன்னியாகுமரி வரையிலும் பரவலாக மழை பெய்தது. நவ., 1ல் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 20 செ.மீ., கன மழை கொட்டியது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 4 செ.மீ., மழை பதிவானது.


மேலடுக்கு சுழற்சி

*வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் நீடித்ததால், நவ., 2ல் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அதிக பட்சமாக 17 செ.மீ., மற்ற டெல்டா மாவட்டங்களில் பரவலாக 15 செ.மீ., வரை மழை பெய்தது. அதே நாளில், சென்னையில் தொடர்ச்சியாக லேசான மழை மட்டும் பெய்து வந்தது

* நவ., 3ல் தமிழகம் முழுதும் கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 13 செ.மீ., சென்னை மற்றும் வட மாவட்டங்களில் 3 செ.மீ., வரை மழை பதிவானது

* தீபாவளியான 4ம் தேதியும் மேலடுக்கு சுழற்சி நீடித்தது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம், கோபியில் 11 செ.மீ., மழை கொட்டியது. சென்னையில் 2 செ.மீ., பதிவானது

* மேலடுக்கு சுழற்சியின் தாக்கம், 5லும் தொடர்ந்தது. அன்றைய நாளில், கடலுார் குறிஞ்சிப்பாடியில் 16 செ.மீ., மழை பெய்தது. அன்றைய நாளில் திருவள்ளூர், சென்னை மாவட்டம் துவங்கி, 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.


நள்ளிரவில் ஆரம்பம்

*மேலடுக்கு சுழற்சி தீவிரமானதால், 6ம் தேதி இரவு 11:00 மணிக்கு, சென்னை மற்றும் புறநகரை சுற்றி லேசான மழை துவங்கியது. இது படிப்படியாக அதிகரித்து, விடிய விடிய வெளுத்து வாங்கியது. 10 மணி நேரம் தொடர்ச்சியாக பெய்ததில், சென்னையின் முக்கிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் 23; நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் 21 செ.மீ., மழை பதிவானது

* தொடர்ந்து, 7ம் தேதியும் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. பெரம்பூரில் 14 செ.மீ., பதிவானது. அடுத்த நாள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்தது. மாமல்லபுரத்தில் 12 செ.மீ., பதிவானது

* வளிமண்டல சுழற்சியால் ஏற்கனவே வெள்ளத்தில் சிக்கிய சென்னைக்கு மற்றொரு சோதனையாக, வங்கக் கடலில் 6ம் தேதி காற்ற ழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது, 9ம் தேதி தமிழக கடற்பகுதியை நெருங்கி, முதல் கட்டமாக நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை, அதி கன மழையாக புரட்டிப் போட்டது. நாகை திருப்பூண்டியில் 31 செ.மீ., மழை பதிவானது.


குமரி வரை மழை

 காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில், 'ரெட் அலெர்ட்' விடப்பட்டது. தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் இரவு முதல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கடலோர பகுதிகளை நெருங்கி, விடிய விடிய மழையாக கொட்டியது.

இந்த அடை மழையால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்கனவே சூழ்ந்த வெள்ள நீரின் அளவு அதிகரித்தது மாநிலத்தில் அதிகபட்ச மாக தாம்பரத்தில், 23 செ.மீ., மழை பதிவானது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மற்றும் சென்னை மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை, 11ம் தேதி பிற்பகல் வரை தொடர்ந்து பெய்ததால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தினர் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சென்னையில் கன மழை பெய்த அதே நேரம், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கன மழை கொட்டியுள்ளது. அதிகபட்சமாக சுருளக்கோடு என்ற இடத்தில் 15 செ.மீ., மழை பெய்தது. குமரி மாவட்டத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், வட கிழக்கு பருவமழை துவங்கிய பின், அக்., 31 முதல் நேற்று முன்தினம் வரை, 12 நாட்களாக தொடர்ந்து பெய்த அதி கன மழையால், சென்னை துவங்கி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் குமரி வரையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.-


வலுவிழந்த தாழ்வு மண்டலம்



வங்கக் கடலில் நவ., 6ல் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு கன மழையை கொடுத்துள்ளது.நேற்று முன்தினம் மாலை, சென்னையில் கரையை கடந்த தாழ்வு மண்டலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலுார், சேலம் மாவட்டங்கள் வழியே கிருஷ்ணகிரி வரை சென்று, நேற்று முழுமையாக வலுவிழந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், 10ம் தேதி முதல் மூன்று நாட்கள் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.


சென்னையில் 12 நாட்களில்85 சதவீதம் அதிக மழை



இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் அளித்த பேட்டி: காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், ஐந்து நாட்கள் தொடர்ந்து மழை பெய்துள்ளது. கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரையிலான மழையை பொறுத்தவரை, தமிழகத்தில் சராசரியாக 4 செ.மீ., பெய்ய வேண்டும். ஆனால், ஒன்றரை மடங்கு அதிகமாக 10 செ.மீ., பெய்துள்ளது.சென்னையை பொறுத்தவரை, ஐந்து நாட்களுக்கான மழை தொடரில் இயல்பாக 8 செ.மீ., பெய்ய வேண்டும்.

ஆனால், ஐந்து மடங்கு அதிகமாக 46 செ.மீ., பெய்துள்ளது.நவ., 1 முதல் நேற்று வரை மாநிலம் முழுதும் 27 செ.மீ., பெய்ய வேண்டும்; ஆனால், 56 சதவீதம் அதிகமாக 42 செ.மீ., பெய்துள்ளது. சென்னையில் நவ., 1 முதல் நேற்று வரை 44 செ.மீ., பெய்ய வேண்டும். ஆனால், 85 சதவீதம் அதிகமாக 81 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X