கோவை: ''பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டதால், மாணவர்கள் கல்வி கற்பதில் மட்டுமின்றி உணர்வுபூர்வமான விஷயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,'' என்று கலெக்டர் கூறினார்.கொரோனா பாதிப்பு குறைந்து, பள்ளிக்கு திரும்பிய மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவைபுதுார் சாந்தி ஆஸ்ரம் சார்பில், 'வேர் மை ஷூ இந்தியா கேம்பைன்' என்ற புதிய பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது.இதன் துவக்க நிகழ்ச்சி மற்றும் தேசிய குழந்தைகள் தின விழா, சாந்தி ஆஸ்ரம் வளாகத்தில் நேற்று நடந்தது.கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், புதிய திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''கொரோனா தொற்றால், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில், கல்வி பெறுவதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.கல்வியாண்டில் வகுப்பில் பாடம் கற்பதில் மட்டும் இழப்பை ஏற்படுத்தவில்லை. குழந்தைகள் தங்கள் நண்பர்களை சந்திக்க முடியாமல் போனது உள்ளிட்ட ஒவ்வொரு உணர்ச்சிகரமான விசயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.இது போன்ற சூழ்நிலையில், குழந்தைகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சாந்தி ஆஸ்ரம் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது.பேரூர் வட்டாரத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும், சிறுவாணி பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. 16 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, இளம்வயதில் திருமணம் செய்து வைத்த சம்பவங்கள் நடந்துள்ளன.இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலைவாழ் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் சத்தான உணவு கிடைக்க, இரண்டு வட்டாரத்தில், 10 மலைவாழ் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் சமீரன் பேசினார்.நிகழ்ச்சியில் கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் ராஜசேகரன், சாந்தி ஆஸ்ரம் தலைவர் டாக்டர் அறம் மற்றும் பலர் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE