விருதுநகர் :ஆவினில் வேலை வாங்கித் தருவதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பரும், வெம்பக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., செயலருமான விஜயநல்லதம்பி, 30 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 'நான் பலரிடம் வாங்கி கொடுத்த 3 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை' என, விஜயநல்லதம்பி, விருதுநகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்துார் வெம்பக்கோட்டை ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 49. இவர், சகோதரியின் மகனுக்கு விருதுநகர் ஆவினில் மேலாளர் வேலை வாங்கி தர, வெம்பக்கோட்டை அ.தி.மு.க., ஒன்றிய செயலர் விஜயநல்லதம்பியிடம் 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
வேலை வாங்கித் தரவில்லை. ஆட்சி மாறியதும், பணத்தை திரும்ப தருவதாகக் கூறிய விஜயநல்லதம்பி இழுத்தடித்தார்.
![]()
|
அவர் மீது எஸ்.பி., மனோகரிடம் 2021 ஆகஸ்ட் 28ல் ரவீந்திரன் புகார் அளித்தார். போலீசார், ரவீந்திரன், விஜயநல்லதம்பியை 2021 செப்டம்பர் 25ல் விசாரணைக்கு அழைத்தனர். இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் விசாரித்தார்.
அப்போது, விஜயநல்லதம்பி, தான் வாங்கிய பணத்தை 2021 அக்டோபர் 1ல் தருவதாக கூறியுள்ளார்; ஆனால் தரவில்லை. அக்டோபர் 1ல் இன்ஸ்பெக்டரிடம் ரவீந்திரன் கேட்டபோது, 'பலரிடம் வாங்கிக் கொடுத்த, 3 கோடி ரூபாயை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பி தரவில்லை' என, விஜய நல்லதம்பி புகார் கொடுத்துள்ளார்' என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பணத்தை பெற்றுத் தருமாறு மதுரை ஐ.ஜி., அன்புவிடம் ரவீந்திரன் புகார் அளித்துள்ளார்.
விஜயநல்லதம்பி கூறுகையில், ''உடல்நலக் குறைவால், குறிப்பிட்ட நாளில் ரவீந்திரனுக்கு பணத்தை திருப்பி அளிக்க முடிய வில்லை. விரைவில் அவர் பணத்தை தந்து விடுவேன். நான் பலரிடம் வாங்கி ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்த 3 கோடி ரூபாயை மீட்டு தருமாறு, போலீசில் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.
இது தொடர்பாக, ராஜேந்திர பாலாஜியை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர் அழைப்பை துண்டித்தார்.விருதுநகர் எஸ்.பி., மனோகர் கூறுகையில், ''ரவீந்திரன் அளித்த புகார் குறித்து விசாரிக்க, சாத்துார் டி.எஸ்.பி.,யிடம் கூறப்பட்டுள்ளது. அவரது விசாரணையில், பணத்தை திரும்ப அளிப்பதாக விஜயநல்லதம்பி கூறியுள்ளார்,'' என்றார்.
ரவீந்திரன் புகார் மீதும், ராஜேந்திர பாலாஜி மீதான விஜயநல்லதம்பியின் புகார் மீதும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் கூறுகையில், ''இருவர் கொடுத்த புகார் மீதும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. ஆதாரங்களை திரட்டி கொண்டிருக்கிறோம்,'' என்றார்.