சென்னை, 'படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள்; உங்கள் புரிதலுக்கு நன்றி' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார்.
சூர்யா நடித்த, ஜெய்பீம் படத்தில், வன்னியர் பற்றி அவதுாறு பரப்பப்பட்டது குறித்து அன்புமணி கண்டனம் தெரிவித்திருந்தார். சூர்யாவிடம் சில கேள்விகளையும் முன் வைத்தார்.
படைப்பு சுதந்திரம்
அதற்கு சூர்யா அளித்த விளக்க அறிக்கை:நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது நடத்திய ஒரு வழக்கில், அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் வாயிலாக, நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு.
பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும், படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.எந்தவொரு குறிப்பிட்ட தனி நபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒரு போதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாக திருத்தி சரி செய்யப்பட்டதை தாங்கள் அறிவீர்கள்.
படைப்பு சுதந்திரம் என்ற பெயரில், எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை, எவருக்கும் வழங்கப்படவில்லை என்ற தங்களின் கருத்தை முழுதும் நான் ஏற்கிறேன்.
அதேபோல, படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.
![]()
|
ஒரு திரைப்படம் என்பது, ஆவணப்படம் அல்ல. இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்ற அறிவிப்பை, படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம்.
பெயர் அரசியல்
படத்தின் வாயிலாக, அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்.எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு எந்த பெயர் வைத்தாலும், அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால் அதற்கு முடிவே இல்லை.
அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்ட குரல், 'பெயர் அரசியலால்' மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.சக மனிதர்கள் வாழ்வு மேம்பட, என்னால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுதும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது.
விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை. சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும், அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம்; தங்கள் புரிதலுக்கு நன்றி.இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE