சென்னை, :உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மழையால் வார்டு வரையறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சிகளில், வார்டு வரையறை பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளை ஒருங்கிணைக்க, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. வார்டு வரையறை பணிகள் முடிய முடிய, அது குறித்த விபரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்தப் பணிகள் முடிந்ததும் பொதுமக்கள், அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பு நடத்தவும், இம்மாத இறுதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிடவும், தேர்தல் ஆணையம் தயாராகி வந்தது.
இப்பணிகள் மழையால் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு உள்ளன.
![]()
|
இதையடுத்து, இம்மாதம் 10ம் தேதி, பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோரை அழைத்து, பணிகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம், இன்று மற்றும் நாளை நடக்க உள்ளது.இதைத் தொடர்ந்து வெளியாகும் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மட்டுமே, வார்டு வாக்காளர் பட்டியலிலும் இடம் பெறும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு முகாம்களை கண்காணிக்க, 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, சிறப்பு பார்வையாளர்களாக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது.