ஜெனீவா : தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஊட்டசத்து குறைபாட்டால் 32 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் 10 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறியதாவது:ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து மேற்கத்திய நாடுகளின் பொருளாதார உதவி தடைபட்டுள்ளது.
இதனால் ஆப்கன் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அங்கு கடுமையான பஞ்சம் நிலவுகிறது. பொது சுகாதார துறை மிக மோசமான நிலையில் உள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஊட்டசத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஏழு மாத குழந்தைகள், பிறந்த குழந்தையை விட சிறியதாக உள்ளன. நாடு முழுதும் 32 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளன.

இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால், உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர் உயிருக்கு ஆபத்து உள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
நாடு முழுதும் 24 ஆயிரம் பேர் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளை அம்மை நோய் தாக்கினால் மரணம் நிச்சயம். உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழப்பதை நாம் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
குண்டு வெடிப்பு: மூவர் பலி
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தின் ஸ்பின் கார் மாவட்டத்தில் உள்ள மசூதியில் நேற்று நடந்த தொழுகையின் போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE