கோவையில் பள்ளி மாணவி தற்கொலை; ஆசிரியர் மீது 'போக்சோ': இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்:மத மாற்றம் செய்த 9 பேருக்கு சிறைபோபால்: பழங்குடியின மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சித்த ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் மன்பூர் என்ற கிராமத்தில் பழங்குடியின மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற சிலர் பிரசாரம் செய்து வருவதாக விஷ்வ
crime, Murder, Arrest, theft, accident


இந்திய நிகழ்வுகள்:மத மாற்றம் செய்த 9 பேருக்கு சிறை


போபால்: பழங்குடியின மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சித்த ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் மன்பூர் என்ற கிராமத்தில் பழங்குடியின மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற சிலர் பிரசாரம் செய்து வருவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு புகார் அளித்தது. போலீசார் விசாரணை நடத்தி 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் ஏழு பேர் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மற்ற மூவரும் உள்ளூர்க்காரர்கள். இதில் ஒன்பது பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுப்படி அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஷ்மீரில் 'என்கவுன்டர்'; 2 பயங்கரவாதிகள் பலி


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நடந்த 'என்கவுன்டரில்' இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், பெமினா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் மற்றும் ராணுவம் இணைந்து நேற்று முன்தினம் மாலை அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தின. அப்போது இருதரப்புக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், அமீர் ரியாஸ் மற்றும் ஷிராஸ் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வங்கதேசத்தை சேர்ந்த இருவர் எல்லையில் சுட்டுக்கொலை


கோல்கட்டா: மேற்கு வங்க எல்லைப் பகுதியில் நேற்று கால்நடை கடத்தலில் ஈடுபட்ட வங்கதேச நாட்டினர் இரண்டு பேர், எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்துடன், மேற்கு வங்க மாநிலம், 2,200 கி.மீ., எல்லையை பகிர்ந்துள்ளது. எல்லைப் பகுதியில் உள்ள கூச் - பெஹார் மாவட்டத்தில் நேற்று அதிகாலை வங்கதேச நாட்டை சேர்ந்த சிலர் கால்நடைகளை கடத்த முயற்சித்து உள்ளனர். அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களை தடுக்க முயற்சித்தனர். இதனால் கோபமடைந்த அவர்கள், ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இரும்பு கம்பி, பிரம்பு ஆகியவற்றை வைத்தும் தாக்குதல் நடத்தினர்.பின், நம் பாதுபாப்புப் படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது; ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்துள்ளார்.
தேர்தல் ஆணையர் வீட்டில் திருட்டு


புதுச்சேரி : புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் வீட்டில், 12 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.புதுச்சேரி மாநிலதேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ்; ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் வசிக்கிறார். தீபாவளியை ஒட்டி அக்டோபர் 29ல் சொந்த ஊரான கேரளா சென்று, நவம்பர் 9ல் புதுச்சேரி திரும்பினார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.வீட்டினுள் பீரோவை உடைத்து 12 சவரன்நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. ரெட்டியார்பாளையம் போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழக நிகழ்வுகள்:கணவரின் சித்ரவதையால், பெண் டாக்டர் தற்கொலை


ராமநாதபுரம்: கணவரின் சித்ரவதையால், பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். டாக்டரான அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம், வெளிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சுகந்தா, 31. ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். இவருக்கும், சடையன் வலசையைச் சேர்ந்த டாக்டர் மகேஸ்வரன், 32 என்பவருக்கும் 2019 மார்ச் 30ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 70 சவரன் நகை, சீர்வரிசைகள் கொடுத்தனர். கணவரின் வற்புறுத்தலால், சுகந்தா இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளார். தற்போது, மூன்றாவது முறையாக ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். மகேஸ்வரன் மருத்துவ மேற்படிப்பிற்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். பின், ஊர் வந்தவர், சுகந்தாவை ஒரு மாதம் விடுப்பு எடுக்கச் சொல்லி, டில்லி அழைத்து சென்றார்.கடந்த அக்டோபரில் ஊர் வந்தவர்கள், ராமநாதபுரம் பெரியார் நகரில் வாடகை வீட்டில் வசித்தனர்.இந்நிலையில், சுகந்தாவும் மேற்படிப்பு படிக்க விரும்பினார். அதற்கு மகேஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வேலைக்கும் செல்ல வேண்டாம், என அடித்து சித்ரவதை செய்துள்ளார். இது குறித்து, தன் தாய் சரஸ்வதியிடம் சுகந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில் 7ம் தேதி வீட்டில் சுகந்தா, விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை, மகேஸ்வரன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சுகந்தா இறந்தார். மகேஸ்வரனை கைது செய்ய வலியுறுத்தி, சுகந்தாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப் பதிவு செய்து, மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.


latest tamil news
பள்ளி மாணவி தற்கொலை; ஆசிரியர் மீது 'போக்சோ'


கோவை: ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த, 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். சில மாதங்களுக்கு முன், அப்பள்ளியில் படிக்க விருப்பமில்லை எனக்கூறி, மாநகராட்சி பள்ளிக்கு மாறினார். தற்போது பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே, மாணவி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். உக்கடம் போலீசார், விசாரித்தனர்.கடிதம் சிக்கியது:


மாணவி முன்பு படித்த பள்ளியில், மிதுன் சக்கரவர்த்தி, 35, என்ற ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாகவே மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என, பெற்றோர் புகார் தெரிவித்தனர். ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, பல்வேறு அமைப்பினர், பள்ளி மற்றும் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். இவ்வழக்கு கோவை மாநகர மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது.தற்கொலைக்கு முன், மாணவி எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், மிதுன் சக்கரவர்த்தி உள்பட மூவர் பெயரை மாணவி குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, தற்கொலைக்கு துாண்டுதல், 'போக்சோ' பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மாணவியின் தந்தை கூறுகையில், 'ஆசிரியரின் தொல்லை காரணமாக, அந்த பள்ளியில் படிக்க விருப்பமில்லாமல், என் மகள் வேறு பள்ளிக்கு சென்றார். எனினும், மன உளைச்சலில், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
பள்ளிகளில் விசாரணை


முதன்மை கல்வி அதிகாரி கீதா கூறுகையில், ''பள்ளி கல்வித் துறை சார்பில் உரிய விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் தற்போது பேசக்கூடிய நிலையில் இல்லை. இருப்பினும், அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மாணவி படித்த பள்ளிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.
இளம்பெண் கர்ப்பம்: காதலன் கைது


விழுப்புரம்: உளுந்துார்பேட்டை அடுத்த கொரட்டூரைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் ஸ்ரீராம், 23; இவர், கண்டாச்சிபுரம் அடுத்த வீரமடை கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். ரேகா 7 மாத கர்ப்பிணியான நிலையில், திருமணம் செய்து கொள்ள ஸ்ரீராம் மறுப்பு தெரிவித்துள்ளார். புகாரின்பேரில், விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து ஸ்ரீராமை கைது செய்தனர்.
பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை


கரூர் : கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, 61; எலக்ட்ரீஷியன். இவர், வெள்ளிக்கிழமை தோறும், அவரது வீட்டில் பூஜை செய்வது வழக்கம். 2019ல், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் பூஜைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் தனித் தனியாக வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். போலீசார் கணபதியை கைது செய்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில், கணபதிக்கு 29 ஆண்டுகள் சிறை, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கும், தலா 2.50 லட்சம் ரூபாயை அரசு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.
212 சவரன் பறிமுதல்: மூவர் கைது


கோவை : கோவையில் வியாபாரியிடம், 1.8 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். 212 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவை வடவள்ளியில் அக்., 30 இரவில், தங்க நகை வியாபாரி சண்முகத்தை இருவர் வழிமறித்து, 1.8 கிலோ எடையுள்ள 236 சவரன் தங்க நகை மற்றும் 7.5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வடவள்ளி போலீசார், 7ம் தேதி ஏழு பேரை கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சிக்கந்தர் பாஷா, சம்சுதீன், அன்பரசு ஆகிய மூவரையும் தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 212 சவரன் நகை, 5.5 லட்சம் ரூபாய் மற்றும் மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர். ஐ.ஜி., சுதாகர் கூறுகையில், ''மொத்தம் 12 குற்றவாளிகளில், 10 பேரை கைது செய்துள்ளோம். இதில் சிக்கந்தர் பாஷா, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 129வது குற்றவாளி,'' என்றார்.
மரம் விழுந்து ஆசிரியை பலி


குன்னுார் : சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது மரம் விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் ஓதனட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 52; வண்டிச்சோலை நகராட்சி நடுநிலை பள்ளியில் ஆசிரியை. பணி முடித்து நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியது. சாலையோரத்தில் இருந்த கற்பூர மரம் சாய்ந்து, அவர் மீது விழுந்துள்ளது. தலை உட்பட உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள், மரத்தை அகற்றி அவரை மீட்டு, ஊட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; அங்கு இறந்தார். இவரது கணவர், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
மது குடித்த போது தகராறு; வாலிபர் அடித்து கொலை


நாகப்பட்டினம் : மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.நாகை தாமரைக்குளம் தென்கரையைச் சேர்ந்தவர் மாரியப்பன், 25. இவர் நேற்று நாகை மருந்து கொத்தள சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களும் மது குடித்துள்ளனர். இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாரியப்பனை கல்லால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் இறந்தார்.நாகை டவுன் போலீசார், தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.
உலக நிகழ்வுகள்:விழாவில் கூட்ட நெரிசல்; இந்திய மாணவி மரணம்


ஹூஸ்டன் : அமெரிக்காவில் நடந்த இசை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த இந்திய வம்சாவளி மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார்.latest tamil news


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் இசைத் திருவிழா நடந்தது. பிரபல 'ராப்' பாடகர் டிராவிஸ் ஸ்காட் பங்கேற்ற அந்த விழாவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பங்கேற்ற பலரும் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பார்தி ஷஹானி, 22, என்ற மாணவி படுகாயமடைந்தார்.அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் காயம் ஏற்பட்ட அவருக்கு, 'வென்டிலேட்டர்' உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி, அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதைஅடுத்து அந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SukumaRr -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-202100:39:43 IST Report Abuse
SukumaRr குழந்தைகள் தினம் என்று ஒன்று கொண்டாடப்பட்டு வந்தது. அது ஏனோ அவ்வளவாக கொண்டாடப்படுவதில்லை. குழந்தைகள் தினமே கொண்டாடப்படாத போது எதற்கு ஆசிரியர் தினம் . முதலில் ஆசிரியர் தினம் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். இவர்களாக மாதா பிதா குரு என்று வரிசைப்படுத்திக் கொண்டு அதீதமான மரியாதையை அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்களும் மற்றவர்களை போல கூலிக்கு பணியாற்றுபவர்கள் தான். வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. பள்ளியில் இடம் கிடைப்பதே தெய்வகடாக்ஷம் என்று கருத்திக்கொண்டும் அவர்களுக்கு பணியாவிட்டால் டிஸி கொடுத்து அனுப்பிவிடுவார்கள் என்றும் பயந்துகொண்டு வாழக்கூடாது. கல்வி என்பது குழந்தைகளின் உரிமை. அதை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதை நிறைவேற்ற வேண்டியது ஆசிரியர்களின் தொழில். அதை அவர்கள் முறையே செய்ய வேண்டும். ஆசிரியர்களும் கண்காணிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
13-நவ-202119:30:35 IST Report Abuse
M S RAGHUNATHAN PSBB பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கொதித்து எழுந்த கனி மொழி பூங்கோதை மற்றும் RSB ஊடகங்கள் வாய் மூடி மௌனம் சாதிப்பதேன். பள்ளியின் முதல்வர் lகிருத்துவர் என்பதாலா ? அந்தப் பள்ளியின் பெயரைக் கூட வெளி இட ஏன் தயக்கம்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
13-நவ-202118:26:45 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஏன் தனியார் பள்ளிக்கு பெயர் இல்லையா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X