அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதாக இருந்தால், பலரும் கவுரவ குறைச்சலாக நினைக்கின்றனர். அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கி, குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுத்த, அரசு பள்ளிகளை சேர்ந்த சில ஆசிரியர்கள் இணைந்து, 'துாரிகை துளிகள்' என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.இதில், சின்னமேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வகுப்பறைகளை வண்ணமயமாக்கி வருகின்றனர். இப்பள்ளி ஆசிரியர் நாகராஜை சந்தித்தோம். அவருடனான சந்திப்பில் இருந்து...கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் செயல்படாதபோது, அரசு பள்ளிகளை மேம்படுத்த என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர், முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரின் உதவியோடு, பின்தங்கிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை தேர்வு செய்து, சுற்றுச்சுவரை வண்ணமயமாக்கி, புறத்தோற்றத்தையே மாற்றலாம் என்ற எண்ணம் தோன்றியது.அப்போது உருவான அமைப்பே துாரிகை துளிகள். கடந்தாண்டு டிச., மாதத்தில் இருந்து, தற்போது வரை, 35 அரசு பள்ளிகளை அழகாக்கியுள்ளோம். கோவை மட்டுமின்றி, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் சென்று, வகுப்பறைகளில் பாடம் சார்ந்த ஓவியங்கள் வரைந்து வருகிறோம்.வகுப்புக்கு ஏற்ப, பாடத்தில் உள்ள முக்கிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்படும். துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். ஏனெனில், சிறார்களுக்கு புறச்சூழல் ஈர்க்கப்பட்டால், வகுப்பறை பிடித்தமான இடமாகி விடும். ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கான வகுப்பறையில், கணிதம், அறிவியல் பாடங்களில் உள்ள படங்கள் வரையப்படும். வெளிப்புற சுவரில் விழிப்புணர்வு வாசகங்கள், கார்ட்டூன் பொம்மைகள், தலைவர்களின் உருவப்படங்கள் வரைவது வழக்கம். பெயின்ட் செலவை மட்டும், பள்ளி நிர்வாகம் ஏற்றால் போதும். சமீபத்தில், சூலுார் ஒன்றியம், அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சுற்றுச்சுவர்களில் படங்கள் வரைந்தோம். பள்ளியின் சூழலே மாறி விட்டதாக, பெற்றோர் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.துளிர்கள் துாரிகை அமைப்பை தொடர்பு கொள்ள, 80721 77144, 89032 05173.துளிர்க்கும் நம்பிக்கை!அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் புஷ்பலதா கூறுகையில், ''எங்கள் பள்ளியில், 35 மாணவர்கள் படிக்கின்றனர். ஈராசிரியர் பள்ளி என்பதோடு, இரு வகுப்பறைகளே இருப்பதால், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கவனம் பெறாமல் இருந்தது. தற்போது பள்ளியின் புறத்தோற்றம் மாறிவிட்டதாக பலரும் தெரிவிக்கின்றனர். அதனால், மாணவர் சேர்க்கையை அதிகரித்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE