புதுடில்லி:'டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த இரண்டு நாள் முழு ஊரடங்கை அறிவிக்கலாமா' என, மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டில்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவசரகால நடவடிக்கைஇந்த விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், ''டில்லியில் காற்று மாசு மோசமடைந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
டில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'டில்லியில் காற்றின் தரம், தினமும் ௨௦ சிகரெட் புகைப்பதற்கு சமமாக உள்ளது. வீடுகளுக்குள்ளேயே மக்கள் இருக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது' என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''கடந்த ஆறு நாட்களாக பஞ்சாபில் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதை, அந்த மாநில அரசு தான் தடுக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து தலைமை நீதிபதி கூறியதாவது: விவசாயிகளால் தான் காற்று மாசு ஏற்படுவது போல் ஒரு எண்ணத்தை உருவாக்குகிறீர்கள். வாகனங்களின் புகை, தொழிற்சாலை புகை, பட்டாசு வெடிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் காற்று மாசடைந்துள்ளது. விவசாயிகள் மீது பழியை போட்டு தப்பிக்க கூடாது. விவசாயிகள் கழிவுகளை எரிக்கக் கூடாது என்றால், அவர்களுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும். கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான மிஷின்களை அனைத்து விவசாயிகளாலும் வாங்க முடியாது. அதற்கான நடவடிக்கைகளை அரசுகள் தான் எடுக்க வேண்டும்.
டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க தடை விதித்தும் என்ன நடந்தது?இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார். நுரையீரலில் பிரச்னைஇதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''காற்று மாசுக்கு விவசாயிகள் தான் காரணம் என, நான் ஒரு போதும் கூறவில்லை,'' என்றார்.
இதன்பின் நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: டில்லியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. மோசமான காற்றை சுவாசிப்பதால் குழந்தைகளுக்கு நுரையீரலில் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது.டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தலாமா? நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம். இது குறித்து, நாளை மத்திய அரசு மற்றும் டில்லி, பஞ்சாப், ஹரியானா அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.'ஆங்கில புலமை இல்லை'டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு விவசாயிகள் மீது பழி போடக் கூடாது என, தலைமை நீதிபதி கூறியதற்கு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'காற்று மாசுக்கு விவசாயிகள் மட்டுமே காரணம் என, ஒரு போதும் நான் கூறவில்லை' என்றார்.
இதற்கு தலைமை நீதிபதி ரமணா, ''நான் சிறந்த பேச்சாளர் இல்லை. எனக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை கிடையாது. எட்டாம் வகுப்பிலிருந்து தான் ஆங்கிலம் படித்தேன். சட்டங்களை தான் ஆங்கிலத்தில் படித்தேன். அதனால், என் உணர்வுகளை ஆங்கிலத்தில் தெரிவிக்க முடியவில்லை,'' என்றார்.
இதற்கு துஷார் மேத்தா, ''நானும் எட்டாம் வகுப்பிலிருந்து தான் ஆங்கிலம் படித்தேன். பட்டப்படிப்பு வரை குஜராத்தி மொழியில் தான் படித்தேன். வழக்கறிஞர்களாக நாங்கள் கூறும் சில வார்த்தைகள் தவறான தகவல்களை தந்து விடுகின்றன,'' என்றார்.
ஒரு வாரம் விடுமுறை
டில்லியில் காற்று மாசை குறைக்க, அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதன் பின் கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லியில் பள்ளிகளுக்கு நாளை முதல், ஒரு வாரம் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. கட்டுமான பணிகளுக்கு ௧௭ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும். தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE