----டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

----'டவுட்' தனபாலு

Added : நவ 13, 2021 | கருத்துகள் (1) | |
அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி: சென்னையில் மழை நீர் தேங்கியதற்கு முதல்வர் சரியான முறையில், திட்டமிட்டு செயல்படாதது தான் காரணம். நுாற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்களை, வேறு பகுதிக்கு மாற்றி விட்டனர். அனுபவம் இல்லாத பொறியாளர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்கு எங்கு தண்ணீர் தேங்கும்; எப்படி வெளியேற்ற வேண்டும் என்ற விபரம் தெரியவில்லை.'டவுட்' தனபாலு: சென்னையில்

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி: சென்னையில் மழை நீர் தேங்கியதற்கு முதல்வர் சரியான முறையில், திட்டமிட்டு செயல்படாதது தான் காரணம். நுாற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்களை, வேறு பகுதிக்கு மாற்றி விட்டனர். அனுபவம் இல்லாத பொறியாளர்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்கு எங்கு தண்ணீர் தேங்கும்; எப்படி வெளியேற்ற வேண்டும் என்ற விபரம் தெரியவில்லை.

'டவுட்' தனபாலு: சென்னையில் மழை நீர் தேங்கியதற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள், மதிப்பு வாய்ந்தவையாக உள்ளன. அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் இருந்திருந்தால்... இந்நிலை ஏற்பட்டிருக்காதோ, சென்னை மக்கள் ஒரு வாரம் அவதிபட்டிருக்க மாட்டார்களோ என்ற, 'டவுட்' வருகிறது!


காங்., முன்னாள் தலைவர் ராகுல்:
இந்தியா - சீனா எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய, பா.ஜ., அரசிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. மேலும், பிரதமர் மோடி, சீனாவை பார்த்து அஞ்சுகிறார். இதனால் மன்னிக்க முடியாத அளவுக்கு, நம் நாட்டின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்தியா - சீனா பிரச்னைக்கு, உங்களிடம் தெளிவான தீர்வு இருக்கிறதோ என்ற, 'டவுட்' வருகிறது. உங்களுக்கு மிகவும் நெருக்கமான கம்யூ., கட்சிகளின் தலைவர்களான சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா போன்றவர்களை, கம்யூ., ஆளும் சீனாவுக்கு அனுப்பி, நம் எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டு விடுவீர்களோ?


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்:
கடந்த ஆட்சியின் மீது குற்றச்சாட்டு கூறி, பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது. நிலைமையை சரி செய்வோம் என கூறி, ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.

'டவுட்' தனபாலு: ஆறு மாத, தி.மு.க., ஆட்சியின் முதல் சொதப்பல், மக்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, 'முந்தைய, அ.தி.மு.க., அரசு சரியாக துார் வாரவில்லை; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு செய்துள்ளது. அதனால் தான் சென்னையில் தண்ணீர் தேங்கியது' என்கின்றனரோ... உங்களின் பதில், ஆட்சியாளர்களுக்கு புரிந்திருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முதலில் போலீஸ் வேலை தான் பார்த்து கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. முல்லை பெரியாறு அணை பிரச்னை பற்றி அகரம் கூட தெரியாத அண்ணாமலைக்கு என் பெயரை உச்சரிக்க எந்தத் தகுதியும் கிடையாது.

'டவுட்' தனபாலு: உங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின், ஏன், உலகின் முக்கிய விவகாரங்கள் அத்துப்படி தான். அதுமட்டுமின்றி, தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் உங்களால் தான் வெளிவந்துள்ளன. உங்களுக்கு இருக்கும் ஞானம், பிறருக்கு இருப்பது சந்தேகம் தான். எனினும், உங்களுக்கு இவ்வளவு தெரிந்தும், தமிழக அரசியலில் ஜொலிக்க முடியவில்லையே... அது ஏனோ என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!


பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் ராமச்சந்திரன்:
சென்னையில், 2015 பெரு வெள்ளத்தின் போது, இரவில் யாருக்கும் சொல்லாமல் தண்ணீர் திறந்து விட்டதால், 174 பேர் இறந்தனர். இப்போது எங்களின் அரசு எடுத்த சரியான நடவடிக்கை காரணமாக, 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். சொத்துகள் சேதமும் பெருமளவில் தடுக்கப்பட்டது.

'டவுட்' தனபாலு: ஆட்சிக்கு வந்த இந்த ஆறு மாத காலத்தில், தமிழகத்தையே முற்றிலும் மாற்றி, நாட்டிலேயே முன்னணி மாநிலமாக்கி, 'சாதனை' படைத்த உங்கள் அரசு, இறப்பை குறைத்தும் சாதனை படைக்கிறதோ... 2015ல் இருந்த அதே அதிகாரிகள், அதே ஊழியர்கள் தான் இப்போதும் உள்ளனர். இந்த சாதனை எப்படித் தான் வாய்த்ததோ என்பதே, நாட்டு மக்களின், 'டவுட்!'பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
சென்னையிலும், பிற பகுதிகளிலும் தொடர்ந்து பெய்த மழை பெரும்பான்மையான குடும்பங்களுக்கு, வாழ்வாதார இழப்புகளையும், உடைமை இழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குறைந்தது, 5,000 ரூபாய், நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் சென்னை நகரம் பெரிதும் பாதிக்கப்பட்ட போதே, வெள்ளம் பாதித்த வீடுகளுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போதும், அதே, 5,000 ரூபாய் கொடுக்க சொல்கிறீர்களே... விலைவாசி எவ்வளவு உயர்ந்து விட்டது... அதற்கேற்ப, வீடுகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் கேட்டால் குறைந்தா போய் விடும் என மக்கள் நினைக்கின்றனர். அவர்களின், 'டவுட்' நியாயம் தானே!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X