பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : நவ 13, 2021
Share
தி.மு.க., - எம்.பி., கனிமொழி அறிக்கை: ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. அந்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும்.கண்ணியம் மிக்க ஆசிரியர் தொழிலுக்குள் இப்படியும்

பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., - எம்.பி., கனிமொழி அறிக்கை: ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. அந்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும்.கண்ணியம் மிக்க ஆசிரியர் தொழிலுக்குள் இப்படியும் சில கறுப்பாடுகள் நுழைந்துள்ளன. அவற்றை களை எடுக்க வேண்டும். மாணவியருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்!


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், உதயகுமார் பேட்டி:
நாளை அந்தமான் கடல் பகுதியில் புயல் சின்னம் வலுப்பெற உள்ளது. அது புயலாக மாறினால், தமிழகத்தின் வட மாநிலங்களை தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை, தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.போகிற போக்கை பார்த்தால், தி.மு.க., அரசு அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியல் தயாரித்து கொடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!


நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி வரும் கேரள அரசு, தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்தும், அந்த செயலை கண்டிக்காத தமிழக அரசை கண்டித்தும், வரும் 14ல் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.அப்போ, சென்னையில் மழை நீர் இன்னும் பல இடங்களில் வடியாததை கண்டித்தும், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவீர்கள் போலிருக்கிறதே...


புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:
ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என வாக்குறுதி கொடுத்தனர். வாக்குறுதிப்படி ஆறு ஓடுகிறது; ஆனால் அது பாலாறும் தேனாறுமாக அல்ல. சென்னை சாலைகளே ஆறாகி ஓடுகின்றன.'அ.தி.மு.க., ஆட்சியின், பத்தாண்டு கால அலங்கோலம் தான் இந்நிலை' என, தி.மு.க., அமைச்சர்கள் கூறுகின்றனர். அவர்களின் இப்போதைய நிலைப்பாடு, பழி போடுவதாகத் தான் இருக்கிறதே தவிர, பணி செய்வதாக இல்லை; அதிலும், கட்சியினர் தலையீடு அதிகம்!


ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் அறிக்கை:
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற, உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழா நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை முன்வரவேண்டும். தவறினால் பக்தர்களை திரட்டி, வரும் 18ல் ஹிந்துமுன்னணி அறப்போராட்டம் நடத்தும்.கோவில்களில் வழிபாடு நடத்தவும், பண்டிகைகளை கொண்டாடவும் போராட வைத்து விட்டனரே...


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை:
மேட்டூர் அணையில் இருந்து, ஐந்து நாட்களில், 9 டி.எம்.சி., நீர் கடலில் கலந்துள்ளது. அதில் ஒரு சிறு பங்கை, சேலம் பகுதியில் உள்ள, 22 ஏரிகளிலும் நிரப்பினால், 1,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பாசன வசதி பெற்றிருக்கும்.நம்ம ஊரில் ஒரு நாள் பெய்த மழை நீரை, இஸ்ரேல் நாட்டில் ஓராண்டுக்கு பாதுகாப்பாக வைத்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி விடுவர். கடலுக்கு தண்ணீரை அனுப்புவதிலேயே, நம் ஆட்சியாளர்கள் குறியாக இருக்கின்றனரோ...


தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை:
சினிமாவில், ஒரு குறிப்பிட்ட ஜாதி வெறியை துாண்டுவது சரியல்ல. மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்துவது தவறு. ஒருவரின் பிறப்பு உரிமையை களங்கப்படுத்துவது தவறு. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பது நல்ல எண்ணம். ஆனால் மற்ற ஜாதி பற்றி பொய் சொல்வது தவறு. இது தான், சமீப காலமாக தமிழ் சினிமாவை தொற்றி இருக்கும் நோய். பழைய, பண்டையக் கதைகளை தோண்டி எடுத்து, இன்னொரு ஜாதியினருக்கு வெறியை ஊட்டுவதே வழக்கமாகி விட்டது. இந்நிலை மாற வேண்டும்!


த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி:
வட கிழக்கு பருவ மழையால் சென்னை உட்பட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதித்துள்ளன. சேதத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமாகியுள்ளன. அவற்றுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.விரைவில் ஏதாவது தேர்தல் வருவதாக இருந்திருந்தால், வீட்டுக்கு, 5,000 ரூபாய் என அரசு அறிவித்திருக்கும். இப்போதைக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் தவிர்த்து வேறு ஒன்றும் வரவில்லையே!


தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:
வெள்ள பாதிப்பு பெரிதாக உள்ள நிலையில், மக்களுக்கு எந்தவித மழை நோய் தொற்று ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீங்கள் இப்படி கோரிக்கை விடுப்பீர்கள் என தெரிந்ததோ என்னவோ, தமிழக அரசு சென்னையில் மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது.


தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேச்சு:
தமிழக அரசு பள்ளிகளில் படிப்பது பெருமையின் அடையாளமாக தரம் உயர்த்தப்படும். மாணவியர் அரசு பள்ளிகளில் அதிக அளவில் சேர்ந்து படிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்படும்.அரசு பள்ளியில் படித்தால் கல்வி, வேலையில் இட ஒதுக்கீடு, இலவச லேப்டாப் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் வழங்குவதற்குப் பதில், தனியார் பள்ளிகளை பூட்டி விடலாமே!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X