சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இதெல்லாம் ஒரு பிழைப்பா?

Added : நவ 13, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
இதெல்லாம் ஒரு பிழைப்பா?ஏ.வி.ராமநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட கொள்கையுடையோர், திருவள்ளுவரை முதலில் சமணர் என்றனர்; பின், பவுத்தர் என்றனர். அது ஏற்கப்படவில்லை என்பதால், பல நுாற்றாண்டுகளாக திருவள்ளுவர் உருவத்தில் இருந்து வந்த ஹிந்து அடையாளத்தை அழித்தனர்.திருக்குறளில் மிகுந்துள்ள ஹிந்து ஆன்மிக கருத்துக்களை, 'திராவிட மேதை'கள்


இதெல்லாம் ஒரு பிழைப்பா?ஏ.வி.ராமநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட கொள்கையுடையோர், திருவள்ளுவரை முதலில் சமணர் என்றனர்; பின், பவுத்தர் என்றனர். அது ஏற்கப்படவில்லை என்பதால், பல நுாற்றாண்டுகளாக திருவள்ளுவர் உருவத்தில் இருந்து வந்த ஹிந்து அடையாளத்தை அழித்தனர்.
திருக்குறளில் மிகுந்துள்ள ஹிந்து ஆன்மிக கருத்துக்களை, 'திராவிட மேதை'கள் வடிகட்டி, அவர்கள் விருப்பப்படி பகுத்தறிவுப் பொருளுரை எழுதி, செயற்கையான மதச்சார்பின்மையை புகுத்தினர்.இதை தமிழ் இலக்கிய மற்றும் ஆன்மிக அறிவுடைய ஹிந்துக்கள், நீண்ட காலம் கண்டுகொள்ளாமல் இருந்ததால், இன்று ஒருபடி மேலே போய், 'திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்' என்கின்றனர்.கருத்து சுதந்திரம் என்ற பெயரில், புத்தகங்கள் போட்டு பொய்யுரை பரப்புகின்றனர். இதையும் மவுனமாக சகித்துக் கொண்டால் நாளைய தலைமுறை, 'திருவள்ளுவர் ஹிந்து இல்லை' என்ற அபத்தமான முடிவுக்கு வந்து விடுவர்; அதுவே வரலாற்றில் பதிவாகி விடும்.
திருவள்ளுவர், ஹிந்து மத ஞானி தான் என்பதற்கான பல ஆதாரங்களின் பட்டியல் இதோ:திருக்குறளில் திருமால், திருமகள், பிரம்மா, சிவன், இந்திரன், எமன், மன்மதன், பூமா தேவி ஆகிய ஹிந்துக்கள் மட்டுமே வழிபடும் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.தேவர், வேதம், ஊழ்வினை, இருவினை, ஏழு ஜென்மம், தவம், வேள்வி, மந்திரம், நோன்பு, தென்புலத்தார், திதி, அந்தணர், புலால் மறுத்தல், நீத்தார், பிறவாமை, நிலையாமை போன்ற இந்து மதத்தினர் நம்பும், அனுசரிக்கும் விஷயங்கள் இருக்கின்றன.ஹிந்து மத அடிப்படைக் கொள்கைகளான, 'மறுபிறவி, வினைப்பயன்' ஆகிய இரண்டும் திருக்குறளில் தெளிவாக வலியுறுத்தப்படுகின்றன. தர்ம சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், காம சாஸ்திரம் ஆகிய சமஸ்கிருத நுால்களின் சாராம்சமே, திருக்குறளில் முறையே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆக உருவெடுத்தன என்பது, அறிஞர்கள் ஆய்ந்து அறிந்த உண்மை.
கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல் போன்ற அதிகாரங்களிலும், ஹிந்து கருத்துக்களை வள்ளுவர் தெளிவாக விதைத்திருக்கிறார்.சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு கோவில் கட்டி வழிபட்டு வருவோர், ஹிந்துக்களே. அங்கு வீற்றிருக்கும் 14-ம் நுாற்றாண்டு சிலை தான், விபூதி பட்டையும், ருத்திராட்ச மாலையும் அணிந்த
வள்ளுவர் உருவத்திற்கு முன் மாதிரியானது.மயிலை அறுபத்து மூவர் உற்சவத்தின்போது, 64வது நாயன்மாராக திருவள்ளுவரையும் ஊர்வலத்தில் சேர்த்து ஹிந்துக்கள் கொண்டாடுகின்றனர்.ஒரு உண்மையான ஹிந்துவால் 1,330 குறள்களையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் மறுபிறவி, வினைப்பயன், பல தெய்வ தத்துவம் போன்ற கருத்துக்கள் உள்ளடக்கிய திருக்குறளை பிற மதங்களில் நம்பிக்கை
உள்ளோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திருக்குறளில் பரவிக் கிடைக்கும் ஹிந்து கருத்துக்களை ஜீரணிக்க முடியாத, ஈ.வெ.ரா., அந்நுாலை மிகக் கேவலமாக விமர்சித்தார். அற்ப புத்தியுள்ள சிலர் திருக்குறளை, 'மதச்சார்பின்மை போர்வை'யில் திருத்துவதும், திரிப்பதும் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர். மத வியாபாரிகளிடம் வாங்கிய பணத்திற்காக அவர்கள் கூவுகின்றனர்; அவ்வளவு தான்!


அது தான் பா.ஜ.,வுக்கு நல்லது!மைதிலி வெங்கட்ராமன், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாளை நம் சந்ததியினர் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நாம் இன்று பட்டினி இருக்க முடியாது.நாட்டில் காஸ் சிலிண்டர் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது பெண்களை நேரடியாக பாதிக்கிறது என்பதை, மத்திய அரசு உணராமல் இருக்கிறதா?வேலைக்கு செல்வோருக்கு, பெட்ரோல் விலை உயர்வு தினமும் அதிர்ச்சியை அளிக்கிறது. அதை மறக்கவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை.
அசாம், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், பீகார், கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த மூன்று லோக்சபா, 29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், பா.ஜ., தோல்வியை தழுவி உள்ளது.இதற்கு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு தான்
முக்கிய காரணம் என்பதை, பா.ஜ., மறக்கக் கூடாது. எரிபொருட்கள் விலையில், மாநில அரசின் வரி தான் அதிகம் என்பது, மக்களுக்கு தெரியவில்லை. பா.ஜ., மீதான மக்களின் மதிப்பை அதிக அளவில் இழப்பதற்கு முன், எரிபொருட்கள் விலை நிர்ணயம் செய்யும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில், உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன், மத்திய அரசு விழித்து கொள்ள வேண்டும்.பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் எரிபொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, பெட்ரோல் 80 ரூபாய்; டீசல் 70 ரூபாய்; காஸ் சிலிண்டர் 750 ரூபாய் என்ற அளவில் இருக்க வேண்டும்.அப்போது தான், மக்கள் மகிழ்ச்சி அடைவர்; பா.ஜ.,வுக்கும் அது தான் நல்லது!


ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!ஆர்.கணேசன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழையுடன் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, சென்னையை ஸ்தம்பிக்க வைக்கிறது.நான்கு ஆண்டிற்கு ஒருமுறை கன மழை, புயல் காரணமாக சென்னை மக்கள் தண்ணீரில் தவிக்கும் சூழலுக்கு ஆளாகின்றனர். சென்னை மக்களுக்கு, இது பழகி போகவில்லை; ஆனால், 'பழக்கமாக்கி கொள்ளுங்கள்' என்று அரசு சொல்லாமல் சொல்கிறதோ?
சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், ஐந்து ஆண்டுகளாக மாநகராட்சி தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?தற்போது, பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, சென்னை மாநகரம் தத்தளிக்கிறது.சென்னையில் உள்ள கட்டமைப்பு வசதிக்காக, ஏராளமாக நிதி செலவிடப்படுகிறது; அத்தனையும் வீண்!தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை, இந்த கனமழை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
மழை நீர் வடிகால் பணிக்காக, இதுவரை பல 100 கோடி ரூபாய் செலவிட்டும், ஒரு பலனும் இல்லை என்றால், அதற்கு காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும் அல்லவா?மழை ஓய்ந்த பின் ஆட்சியாளர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி விளம்பரம் தேடாமல், அடுத்த கனமழையில் சென்னை பாதிக்கப்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பதில் சொல்லுங்கள் உதயகுமார்!அ.சரவணன், பொட்டல்புதுார், தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே, பெருமழை பாதிப்புக்கு காரணம் என்பதை கண்டுபிடித்திருக்கிறார், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார்.தமிழகத்தில் 1967 முதல், தி.மு.க., - அ.தி.மு.க., என கழகங்களின் ஆட்சி தான் மாறி மாறி நடந்து வருகிறது.காலங்காலமாக பருவ மழை பெய்து வருகிறது. ஆங்கிலேயர் மற்றும் காங்கிரஸ் ஆட்சி காலங்களில், மழைக் காலங்களில் சென்னை வெள்ளத்தில் மிதந்ததாக தெரியவில்லை.பெருமழை பெய்தால் தேங்கும் தண்ணீரும் கூட, ஒரு மணி நேர அவகாசத்தில் வடிந்து விடும். நகரின் கட்டமைப்பு சிறப்பாக பாதுகாக்கப்பட்டது. அரசு நிர்வாகமும் சிரத்தையுடன் இயங்கியது.தி.மு.க., ஆட்சி கட்டிலில் அமர்ந்தது முதல், தமிழகம் ஆட்டம் காணத் துவங்கியது. அந்த ஆட்டம், 50 ஆண்டுகளை கடந்து இன்றும் நீடிப்பது தான், தமிழக மக்களின் தலை எழுத்து.மழை நீர் வடிகால்வாயை துார் வார, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கழக அரசுகள் செலவிடுகின்றன.அதற்காக உள்ளூர் பைனான்சியர்கள் நீங்கலாக உலக வங்கி, ஆசிய வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி போன்ற இடங்களில் கடன் வாங்குகின்றன.கூவம், அடையாறுக்காக 1,385 கோடி ரூபாய்; கொசஸ்தலை ஆற்றுக்கு 250 கோடி ரூபாய்; கோவளத்திற்கு 20 கோடி ரூபாய்; மழை நீர் வடிகால் இணைப்புக்கு 350 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.மேலும், தி.நகர் மழை நீர் வடிகாலுக்கு 200 கோடி ரூபாய்; மாம்பலம் கால்வாய் சீரமைப்புக்கு 80 கோடி ரூபாய்; மழை நீர் வடிகால் துார் வாரியதற்காக 115 கோடி ரூபாய் என, மொத்தம் 2,400 கோடி ரூபாய் மழை நீர் வடிகால் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.
ஆண்டொன்றுக்கு 2,400 கோடி ரூபாய் என்றால், 50 ஆண்டு காலமாக இந்த மழை நீர் வடிகால் செலவுக்காக மட்டுமே, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, செலவு செய்யப்பட்டுள்ளது.இன்றைக்கு பரிசுத்தமானவர் போல பேசும் முன்னாள் அமைச்சர் உதயகுமார், 10 ஆண்டு காலம் அ.தி.மு.க., ஆட்சி செய்த போது உறங்கிக் கொண்டிருந்தாரா?
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது மராமத்து மற்றும் மழை நீர் வடிகால் செப்பனிடும் பணியை நேர்மையாக, சரியாக நிறைவேற்றி இருந்தால், இன்றைக்கு தமிழகம் வெள்ளத்தில் தத்தளிக்குமா?


இதற்கு பெயர் தான் விடியலா?என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையை, 'சிங்காரச் சென்னை'யாக மாற்றப் போகிறோம் என சட்டசபையில் கம்பீரமாக அறிவித்தார், முதல்வர் ஸ்டாலின். தற்போது பெய்யும் மழையில், அவரின் அறிவிப்பு பல் இளித்து விட்டது!சென்னையில் மழை நீர் வடிய வழியின்றி, எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக இருக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் தவிக்கின்றனர்; ஏழைகள் தங்க இடமின்றி கண்ணீர் விடுகின்றனர்.
சென்னை மாநகரம் எந்த அளவுக்கு சீரழிந்து இருக்கிறது என்பதை, பருவ மழை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.கழக ஆட்சிகளில் கட்டிய பாலங்கள் எல்லாம், மழை நீரின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்காமல் அடித்துச் செல்லப்பட்ட அவலத்தை, எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை.கடந்த, 2015ல் பெய்த அடை மழையால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து, திராவிட ஆட்சியாளர்கள் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.மழைநீரை சரியான முறையில் தேக்கி வைக்கும் சிந்தனை கூட, திராவிட ஆட்சியாளர்களுக்கு இல்லை.மன்னர்களும், முன்னாள் முதல்வர் காமராஜரும் உருவாக்கிய நீர்நிலைகளில் தான், இன்றும் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. அந்த நீர்நிலைகளிலும், திராவிட அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்தது, கொடுமையிலும் கொடுமை!
வட கிழக்கு பருவமழை கொடுக்கும் நீரை, வீணாகக் கடலில் கலக்கச் செய்து வேடிக்கை பார்க்கிறதே திராவிட அரசுகள்.'கொள்ளை அடிப்பது ஒரு அருமையான கலை' என நினைப்போரிடம், நல்ல சிந்தனைகள் எப்படி உருவாகும்?ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்தால் போதும், 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விடும் சகலகலா வல்லவர்களாக இருக்கின்றனர், திராவிட அரசியல்வாதிகள்!
'விடியல் தரப் போகிறார்' என முதல்வர் ஸ்டாலினை நம்பி தி.மு.க.,வுக்கு ஓட்டு அளித்ததால், தமிழகமே இன்று இருளில் சிக்கி இருக்கிறது.


வண்டியின் அச்சு ஒருநாள் முறியும்!எஸ்.பழனிவேல், திருமாளம், திருவாரூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்' என திருவள்ளுவர், தமிழகத்தில் உள்ள தனியார் 'டிவி' ஊடகங்களுக்காகவே எழுதி இருப்பார் போலும்.அதாவது, மயில் தோகை தானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்து போகும் என்பது தான் குறளின் அர்த்தம்.தி.மு.க.,விற்கு ஆதரவாக, தமிழக அரசின்
நடவடிக்கைகளுக்கு மயில் தோகையால் வருடியபடியே செய்திகள் வெளியிடுகின்றனர். கடந்த 2015ல் சென்னையில் கனமழை பெய்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்ட போது, இதே தொலைக்காட்சி செய்திகளில், ஒரு இடம் விடாமல் அனைத்தையும் காட்டினர்.வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்ததை உருக்கமுடன் கூறி, அன்றைய அ.தி.மு.க., ஆட்சி நிர்வாகத்தை கண்டபடி விமர்சித்தன.ஆனால் இன்று, '2015ல் பெய்ததை விட மிக அதிகமாக மழை இருக்கும்' என வானிலை அறிக்கையை சுட்டிக் காட்டியிருக்கிறார், அமைச்சர் துரைமுருகன்.அதே தொலைக்காட்சி செய்திகளில், 'சென்னையில் மழை வெள்ளம்... மக்கள் சந்தோஷம்; மழை நீரில் குழந்தைகள் ஆட்டம்' என சொல்கின்றனர்.மழை வெள்ளத்தில் சென்னை தத்தளிக்கிறது. இந்த தொலைக்காட்சிகளில், முதல்வர் ஸ்டாலின் ஆய்வு என அடிக்கடி காட்டி, தி.மு.க., அரசிற்கு பாதிப்பு வராமல் மயிலிறகால் தடவுகின்றன.
'வருமுன் காப்போம்' என்ற வார்த்தையை தி.மு.க., அடிக்கடி உச்சரிக்கும். ஆனால், அதன்படி நடந்ததா தி.மு.க., அரசு.மழை நீரோடு கழிவு நீர் கலப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, மழை நீர் வடிய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மாநகராட்சி எடுக்கவில்லை; மக்கள் வீடுகளில் முடக்கம் போன்ற எந்த உண்மையும், தொலைக்காட்சி செய்திகளில் இடம்பெறவில்லை.
இப்படி கண்ணை மூடியபடி, தங்களின் ஆதரவு மயில் தோகையை அளவுக்கு அதிகமாக ஏற்றினால், ஒரு நாள் நிறுவனத்தின் அச்சு முறிந்து போகும்.ஆளுங்கட்சிக்கு 'ஜால்ரா' அடிப்பதை நிறுத்தி விட்டு, மக்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதே ஊடக தர்மம்!

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
14-நவ-202101:32:24 IST Report Abuse
John Miller கைபர், போலன் கணவாய் வழியே வந்த ஐயர்கள் தமிழர்கள் இல்லை. மற்றது எல்லாம் விவண்டாவாதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X