சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

6 மாதங்களாக வழங்கப்படும் 'வெட்டி' சம்பளம்!

Added : நவ 13, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
6 மாதங்களாக வழங்கப்படும் 'வெட்டி' சம்பளம்!நாயர் கொடுத்த இஞ்சி டீ, நண்பர்களுக்கு காலை குளிருக்கு இதமாக இருந்தது. அதை பருகியபடியே, ''மொட்டை பெட்டிஷனால புலம்புதாவ வே...'' என்றபடியே முதல் தகவலை சொல்ல ஆரம்பித்தார், அண்ணாச்சி.''யாரு, என்னன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மதுரை மண்டல வணிகவரித் துறை அலுவலகத்துல பணிபுரியும் கீழ்நிலை

 டீ கடை பெஞ்ச்


6 மாதங்களாக வழங்கப்படும் 'வெட்டி' சம்பளம்!நாயர் கொடுத்த இஞ்சி டீ, நண்பர்களுக்கு காலை குளிருக்கு இதமாக இருந்தது. அதை பருகியபடியே, ''மொட்டை பெட்டிஷனால புலம்புதாவ வே...'' என்றபடியே முதல் தகவலை சொல்ல ஆரம்பித்தார், அண்ணாச்சி.

''யாரு, என்னன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''மதுரை மண்டல வணிகவரித் துறை அலுவலகத்துல பணிபுரியும் கீழ்நிலை ஊழியர்கள் மேல குற்றம், குறை சொல்லி, ஏகப்பட்ட மொட்டை பெட்டிஷன்கள் உயரதிகாரிகளுக்கு போகுதாம் வே...

''முதலில் சக ஊழியர்கள் தான் இப்படி, 'போட்டு' கொடுக்காவன்னு நினைச்சுட்டு இருந்தாவ... ஆனா, இது உயரதிகாரிகள் சிலரின் நுாதன திட்டமாம் வே...

''உயரதிகாரிகள் சிலர், தமக்கு கீழ் உள்ள ஊழியர்கள் குறித்து மொட்டை பெட்டிஷன் எழுதி, கையில வச்சிக்கிடுதாவ... அதை சம்பந்தப்பட்ட ஊழியரிடம் காட்டி, நடவடிக்கை எடுக்காம இருக்க பேரம் பேசுதாவளாம்... இந்த விஷயத்தை மேலிடம் வரைக்கும் கொண்டு போகணும்னு, ஊழியர்கள் தரப்புல பேசிக்கிடுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''அதிருப்தியில இருக்கா ஓய்...'' என அடுத்த தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த, மே மற்றும் ஜூனில் ஊரடங்கு அமல்படுத்துனால்லியோ... பஸ் போக்குவரத்து இல்லாத நிலையிலும் ரேஷன் கடை ஊழியர்கள், இருசக்கர வாகனத்துல வந்து வேலை பார்த்தா ஓய்...

''இதனால அவா எல்லாம் பயண செலவு, ஊக்கத்தொகை தாங்கோன்னு, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்துண்டு இருக்கா... தீபாவளிக்கு முன், ஊக்கத்தொகை கொடுப்பான்னு எதிர்பார்த்துண்டு இருந்தா... ஆனா, அப்படி ஏதும் அறிவிப்பு வெளிவரலை ஓய்...

''கடந்த அ.தி.மு.க., ஆட்சியில, ஊரடங்கின் போது வேலைக்கு வந்ததுக்கு பயண செலவு, ஊக்கத்தொகை எல்லாம் கொடுத்தா... ஆனா, தி.மு.க., அரசு எங்களை கண்டுக்கலைன்னு ரேஷன் ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என விளக்கினார், குப்பண்ணா.

''ஏன் இப்படி, 'வெட்டியா' சம்பளம் குடுக்குறாங்க...'' என, ஆதங்கத்தோடு அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ஆட்சி மாற்றத்துக்குப் பின், மின் வாரியத்துல, 'மாஜி' அமைச்சருக்கு நெருக்கமா இருந்த முக்கிய அதிகாரிகள் சிலரை, அந்த பதவிகள்ல இருந்து துாக்கிட்டாங்க... மூணு, நாலு மாசமாகியும் அவங்களுக்கு மாற்றுப் பணியிடம் ஒதுக்கலைங்க...

''தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடனே, மின் வாரியத்துல உற்பத்தி மற்றும் வினியோகப் பணிகளை கவனிச்சுட்டு வந்த இயக்குனர்களை மாத்திட்டாங்க... ஆறு மாசமாகியும் அவங்களுக்கு இன்னும் பணியிடம் ஒதுக்கலைங்க...

''அவங்க மேல நிறைய குற்றச்சாட்டு சொன்னாங்க... ஆனா, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கலைங்க... ஆறு மாசமா எந்த வேலையும் இல்லாம, அவங்களுக்கு சம்பளம் மட்டும் போயிட்டே இருக்குதுங்க... பெரும் நஷ்டத்துல இருக்குற மின் வாரியத்துல, இப்படியும் வெட்டி செலவு செய்யுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''என் பக்கத்து வீட்டுல இருக்குற செந்தில் வேலன், எழுத்தாளர் ஹெலன் கெல்லர் பத்தி புத்தகம் இருக்கான்னு கேட்டார்... யார்கிட்டயாவது இருந்தா நாளைக்கு எடுத்துட்டு வாங்க பா...'' என்றபடியே அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

*****************


தலா ரூ.9,000 செலவில் 512 மிக்சிகள் வாங்கும் அரசு!முதல் டிகாஷனில் நாயர் போட்டு தந்த பில்டர் காபியை கண் மூடி பருகியபடியே, ''அமைச்சர் சொன்னதை அவரே மறந்துட்டார் ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''வாக்குறுதியை மீறுவது அரசியல்வாதிகளுக்கு சகஜம் தானே... விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''மதுரைக்கு, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கறது சம்பந்தமா, சமீபத்துல பல துறைகளின் அதிகாரிகள், அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில நடந்தது... எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள், நிதி அமைச்சர் தியாகராஜன் எல்லாம் கலந்துண்டா ஓய்...

''அப்ப பேசிய தியாகராஜன், 'மதுரையில சுற்றுலா பயணியர் வருகை குறைய, மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ள மொபைல் போனுக்கு தடை விதித்ததும் ஒரு காரணம்... உள்ளே போற பக்தர்கள், படங்கள் எடுத்து சமூக வலைதளங்கள்ல வெளியிடுவா...

''அதைப் பார்த்துட்டு பலரும் கோவிலுக்கு வருவா... இது சம்பந்தமா மேலிடத்திடம் பேசி, மொபைல் போனுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கறேன்'னு சொன்னார் ஓய்... ஆனா பல மாதங்களாகியும், அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கலை... இன்னும் மொபைல் போனுக்கு தடை தொடர்றது ஓய்...'' என்றார்
குப்பண்ணா.

''அப்டேட்டா இருங்கன்னு கண்டிச்சிருக்காரு பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.

''யார், எதுல அப்டேட்டா இல்லையாம்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கோவை மாவட்டம், ரொட்டிக் கவுண்டனுாரைச் சேர்ந்த பழங்குடியின மாணவி சங்கவி, 'நீட்' தேர்வுல அதிக மார்க் வாங்கினதுக்காக, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, மாணவி வீடு தேடிப் போய் வாழ்த்து சொல்லிட்டு வந்தாங்க பா...

''அதே கிராமத்துக்கு பக்கத்துல இருக்கிற ஆத்து பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவன் ராதாகிருஷ்ணனும் நீட் தேர்வுல அதிக மார்க் எடுத்திருந்தார்... ஆனா, அவரை அமைச்சர் கண்டுக்கலை பா...

''இதைக் கேள்விப்பட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி, 'அந்த மாணவரையும் பார்த்துட்டு வந்திருக்கலாமே... எந்த விஷயத்துலயும் அப்டேட்டா இருங்க'ன்னு கண்டிச்சிருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''நல்ல மிக்சி விலை எவ்வளவுவே இருக்கும்...'' என, திடீரென கேட்டார் அண்ணாச்சி.

''மிக்சின்னா, ரெண்டாயிரம் ரூபாய்க்கு கூட மார்க்கெட்ல கிடைக்குது... நல்ல கம்பெனி ஐட்டமா வேணும்னா, நாலு அல்லது அஞ்சாயிரம் ரூபாய் ஆகும்... ஏன், உமக்கு வாங்கணுமா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''இல்லை... 'ஆதிதிராவிடர் நலத்துறை சார்புல செயல்படும் பள்ளி விடுதிகளுக்கு மிக்சி வாங்கி தரப்படும்'னு பட்ஜெட்ல அறிவிச்சிருந்தாவ... இப்ப, 512 விடுதிகளுக்கு தலா, 9,000 ரூபாய் மதிப்புல, 512 மிக்சிகள் வாங்க அரசாணை வெளியிட்டிருக்காவ... இதுக்காக, 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு போட்டிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''அடேங்கப்பா... ஒரு மிக்சி விலை 9,000 ரூபாயா... இந்த விலைக்கு ரெண்டு மிக்சி வாங்கிடலாமே பா...'' என அன்வர்பாய் வாயை பிளக்க, ''இதைத்தான் விடியல் அரசுன்னு தி.மு.க., காரா சொல்றா ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-நவ-202120:06:43 IST Report Abuse
D.Ambujavalli அந்த எண்ணிக்கையிலும் பாதி மிக்சிகள்தான் வாங்கி, அதிலும் சுருட்டுவார்கள் ஆறு மாதமாச்சே, இன்னும் 'விடியல் இல்லாமல் இருக்க முடியுமா ?
Rate this:
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
14-நவ-202111:24:09 IST Report Abuse
rasaa இது மட்டுமா தண்ட செலவு. எவ்வளவு விசாரணை கமிஷன்கள். அத்தனையும் வீண் செலவு. அதனால் எந்த பிரயோசனமும் இல்லை.
Rate this:
Cancel
S.Aruna - Trichy,இந்தியா
14-நவ-202108:46:13 IST Report Abuse
S.Aruna ''அடேங்கப்பா... ஒரு மிக்சி விலை 9,000 ரூபாயா... வீடுகளில் பயன்படும் மிக்ஸி விடுதியில் பயன்படுத்துவது கடினம். சரியாக விசாரிக்கவில்லையென தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X