வாகன விபத்தா... அழைத்தால் வருவோம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

வாகன விபத்தா... அழைத்தால் வருவோம்!

Added : நவ 13, 2021
Share
வாகன விபத்துகளில் சிக்குவோரை காப்பாற்றி, வாகனங்களுக்கு பழுது நீக்கி தரும், 'ரெடி அசிஸ்ட்' என்ற நிறுவனத்தை நடத்தி வருவது பற்றி கூறும், பெங்களூருரைச் சேர்ந்த விமல் சிங்: என் நண்பர், சாலை விபத்தில் மரணம் அடைந்தார். விபத்து நடந்த போது அவர் கார் நசுங்கி, மொபைல் போன் காருக்கடியில் சிக்கிக் கொண்டது. நண்பர் தலையில் அடிபட்டு மயங்கி விட்டார். உரிய நேரத்தில் விபத்து குறித்து

சொல்கிறார்கள்

வாகன விபத்துகளில் சிக்குவோரை காப்பாற்றி, வாகனங்களுக்கு பழுது நீக்கி தரும், 'ரெடி அசிஸ்ட்' என்ற நிறுவனத்தை நடத்தி வருவது பற்றி கூறும், பெங்களூருரைச் சேர்ந்த விமல் சிங்: என் நண்பர், சாலை விபத்தில் மரணம் அடைந்தார். விபத்து நடந்த போது அவர் கார் நசுங்கி, மொபைல் போன் காருக்கடியில் சிக்கிக் கொண்டது. நண்பர் தலையில் அடிபட்டு மயங்கி விட்டார். உரிய நேரத்தில் விபத்து குறித்து தகவல் கிடைக்கவில்லை. இதனால் அவர் இறந்து விட்டார். அது என்னை வெகுவாக பாதித்தது.விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ஏதாவது செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டேன். அதன்படி, விபத்தில் காயம் அடைந்தவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் சேவையை துவங்கினேன்.அப்போது, விபத்தால் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதும், அவற்றை சரி செய்வதும் தேவையானதாக இருந்தது. அதனால் விபத்தால் பாதிக்கப்பட்ட மனிதர்களை பாதுகாப்பது, வாகன பழுதுகளை நீக்குவது போன்ற பணிகளையும் செய்யக்கூடிய, 'ரெடி அசிஸ்ட்' என்ற நிறுவனத்தை துவங்கினேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. வாகனங்கள் எங்காவது பழுதாகி நின்று விட்டால், தொலைபேசி யில் அழைத்தால் போதும்; எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று, பழுது நீக்கும் பணியை செய்வர். அதற்கு கட்டணம் உண்டு.மேலும், ஆண்டு முழுதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகனங்களை சர்வீஸ் செய்யும் பணியையும் செய்து தருகிறோம்.அதனுடன், நேரடியாக வாகன உரிமையாளர்களுடன் தொடர்பு கொண்டு பழுது நீக்கும் பணியை செய்து தருகிறோம். வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து, அவர்களுடைய வாகனங்களின் பழுது நீக்கும் பணியையும் கட்டணத்துடன் செய்கிறோம்.ஆரம்பத்தில் 20 மெக்கானிக்குகளை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், தற்போது 650 பேர் பணிபுரிகின்றனர். தினமும், 2,000 வாகனங்களுக்கு மேல் பழுது நீக்கும் பணிகள் நடைபெறுகின்றன.முதலில் பெங்களூரில் தான் துவக்கினோம். பின், கர்நாடகா மட்டுமின்றி, ஆந்திராவிலும் செயல்படுகிறோம்.பழுது பார்க்கும் மெக்கானிக் கிடைப்பது துவக்கத்தில் சிரமமாக இருந்தது. அதன்பின், கர்நாடகாவில் உள்ள, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாத இளைஞர்களை கண்டறிந்து, பயிற்சி கொடுத்து அவர்களையே எங்கள் நிறுவனத்திற்கு நேரடி பணியாளர்களாக அமர்த்தினோம்.நம் நாடு மிகப் பெரிய நாடு. வாகனங்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். எனவே, வாகனங்களின் பழுது நீக்கும் தொழிலுக்கான வேலைவாய்ப்புகள் அதிகம்!தொடர்புக்கு:இ - மெயில்: hello@readyassist.inமொபைல்: 080-4680 9090

****


ஆபத்தானது'போமோ' உணர்வு!மொபைல் போனில், சமூக வலைதளங்களில் எப்போதும், ஏதாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நினைப்பு வர காரணம் என்ன என விளக்குகிறார், முனைவர் சுடர்கொடி கண்ணன்: 'காணாமல் போகும் பயம்' என்ற பொருள் தரும் உணர்வு, சமூக
ஊடகங்களின் எழுச்சியால் இன்றைய இளைஞர்களிடம் பிரபலமாகியுள்ளது.ஆங்கிலத்தில், 'போமோ' எனப்படும், 'பியர் ஆப் மிஸ்சிங் அவுட்' என்ற, பிறரிடம் இருந்து காணாமல் போய் விடுவோமோ என்ற எண்ணம் தான், 'போமோ!' மற்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் வாழ்கின்றனர் என்று எண்ணுவது தான், இந்த எண்ணத்தின் அடிப்படை. அதுபோல, மற்றவர்கள் என்ன செய்கின்றனர், அனுபவிக்கின்றனர் அல்லது தெரிந்து வைத்திருக்கின்றனர் என்பதை சமூக ஊடகங்களில் பின்பற்றிக் கொண்டே இருப்பதும், இந்த உணர்வு தான்.
இந்த உணர்வை அனுபவிக்கும் நபர்கள், சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருப்பர். அங்கு அவர்கள் தொடர்ந்து எதையாவது செய்து கொண்டே இருப்பர்.சமூக ஊடகங்களால் ஏற்படும், 'போமோ' பிரச்னையானது இன்றைய இளைஞர்களிடம் பெருமளவில் அதிகரித்துள்ளது. 'பேஸ்புக்' அல்லது 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நண்பர்களின் செய்தி ஊட்டத்தைப் பார்க்கும்போது, உங்கள் வாழ்க்கையை அந்த வார்த்தைகளை, படங்களை ஒப்பிட்டு நீங்கள் சலிப்பான வாழ்க்கையை வாழ்வதாக உணர்கிறீர்கள் என்றால், 'போமோ'வின் பிடியில் சிக்கியுள்ளீர்கள் என்று அர்த்தம்.
'போமோ'வானது சமூக ஊடகங்களில் ஆரோக்கியமற்ற போட்டிக்கு வழி வகுக்கிறது. இது, சோகம், தனிமை, கவலை மற்றும் பொறாமை உணர்வுகளை ஏற்படுத்தும். 'நான் ஏன் மற்றவர்களைப் போல இவ்வளவு, வேடிக்கையாக, மகிழ்ச்சியாக இல்லை... என் வாழ்க்கையில் நான் நல்ல விஷயங்களை இழக்கிறேன்' என்பது போன்ற எண்ணங்கள், உங்களை எதிர்மறை வளையத்திற்குள் தள்ளுகின்றன.
சமூக ஊடகங்களில் நீங்கள் அதிக நேரம் செலவழிக்கும்போது இத்தகைய எண்ணங்கள் இன்னும் மோசமாகிறது. உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களை விட நீங்கள் மோசமான வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று, நம்பத் துவங்குகிறீர்கள்.இதைப் போக்க, உடனே உங்கள் அலைபேசி மூலம் ஒரு படத்தை, 'கிளிக்' செய்து, 'எல்லாரும் பாருங்கள், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று மற்றவர்களை வெறுப்பேற்றும் விதமாக, சமூக ஊடகங்களில் பதிவிட்டு, 'லைக்' கொட்டத் தொடங்கும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்குத் தேவை உடனடியான கவுன்சிலிங்.
இல்லையெனில், இது உங்களை இணையக் கைதியாக மாற்றிவிடும். வேண்டாம் இந்த உணர்வு. இன்றே, சமூக வலைதளங்களுக்கு முழுக்கு போட்டு, 'போமோ' உணர்விலிருந்து விடுபடுங்கள்!


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X