'செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு, 643 கோடி, தமிழுக்கு, 22 கோடி ரூபாய்... மத்திய அரசு தமிழகத்திற்கு பிச்சை போடுகிறதா...' என்று, சமீபத்தில் ஒரு, கிறிஸ்துவ மத போதகர், பேசியதை கேட்க முடிந்தது.அவர் மட்டுமல்ல. தமிழகத்தில் பல அரசியல்வாதிகளும், அரசியலுக்காக இதுபோல பல சந்தர்ப்பங்களில் பேசியுள்ளனர். சமஸ்கிருதம் என்பது பழமையான மொழி; ஹிந்து வழிபாட்டுடன் தொடர்புடையது என்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
சமஸ்கிருதம்
என் மொழி உயர்ந்தது என்று கூற எல்லாருக்கும் உரிமை உள்ளது. ஒரு படி மேலே போய், என் மொழி மட்டுமே சிறந்தது என்பதை கூட ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால், உன் மொழி மட்டம்; என் மொழி மட்டுமே உயர்ந்தது என்பது அறியாமை மட்டுமல்ல, அறிவீனமும் கூட.ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதற்கு முதலில், அந்த மொழியை பற்றி தெரிந்திருக்க வேண்டும். பின், அதை கற்க வேண்டும். அதன் பின் தான், ஒரு மொழியை இன்னொரு மொழியோடு ஒப்பிட முடியும். 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாரதியார் சொல்லியிருப்பதாக மேற்கோள் காட்டுவர்.
ஆனால், அவருக்குப் பத்து மொழிகள் தெரியும். சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற, உ.பி.,யின் வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் சென்றவர்.'சமஸ்கிருதம் ஒரு மாநில மொழி கூட கிடையாது; எந்த பெரும்பான்மை மக்களும் இந்த மொழியை பேசவில்லை. இது முழுக்க முழுக்க பிராமணர்கள் மொழி. அவர்கள் தங்கள் பிழைப்பிற்காக தேவ பாஷை என்று சொல்லி வருகின்றனர்' என்று பலர் சொல்வதுண்டு.அப்படி ஒரு கட்டமைப்பை தமிழகத்தில் உருவாக்கியுள்ளனர். ஆனால், அவர்கள் மறந்த விஷயம் அல்லது யாரும் அவர்களை பார்த்து கேட்காத கேள்வி இது தான்...'திராவிடம், திராவிடம் என்று பேசுகிறீர்களே... அந்த திராவிடத்திற்கு என்று ஒரு தனியான மொழி இருக்கிறதா' என்பது தான்.
அனைத்து தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து, திராவிட மொழிக் குடும்பம் என இந்த நிலப்பரப்பில் உள்ள மொழிகளை கூறுவதுண்டு. ஆனால், தென் மாநிலங்களில் உள்ள மலையாளமும், கன்னடமும், தெலுங்கும், திராவிட அரிதாரத்தை பூசிக் கொள்ளவில்லை; பூசவும் விரும்பவில்லை.ஆனால், போஜ மகாராஜா என்ற ஷத்திரியரால் போற்றப்பட்டது; காளிதாசன் என்ற பிராமணர் அல்லாதவரால் வளர்க்கப்பட்டது; மீனவப் பெண்ணுக்கு பிறந்த வியாசரால் சமஸ்கிருத வேதங்கள் தொகுத்து வழங்கப்பட்டன.இதில் யாரும் தமிழகத்தில் கட்டமைந்துள்ள குறிப்பிட்ட ஜாதியினர் இல்லை.
சமஸ்கிருதம் இன்றளவும், இந்தியாவில் 5 கோடி மாணவர்களால் பயிலப்படும் ஓர் உன்னத மொழி. எவை வழக்கொழிந்து போனதோ, அதை விடுக்கத் தான் வேண்டும். எது காலத்தை கடந்து நிற்கிறதோ அதை முன்னெடுத்துச் செல்லத் தான் வேண்டும். சமஸ்கிருதம் ஒரு பண்பாட்டின் அடையாளம், குறியீடு. தமிழுக்கு நிகரான ஆளுமையும், ஆழமும், வளமும், பல அரிய பொக்கிஷங்களையும் கொண்டது சமஸ்கிருதம்.விஞ்ஞானம், வான சாஸ்திரம், ஆன்மிகம், கலை, இலக்கணம், இலக்கியம் அனைத்தையும்உள்ளடக்கியது.
'ரஷ்யன்'
இதை நான் சொல்லவில்லை... பல நாட்டு அறிஞர்கள் சொல்கின்றனர்.ஆஸ்திரேலியாவின் சிட்னி சமஸ்கிருத பள்ளி ஆராய்ச்சி ஆசிரியர் ரூத் கோர்டன் என்ற அயர்லாந்து சமஸ்கிருத பள்ளி பேராசிரியர் ஜான் கோட்டஸ், மாஸ்கோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் போரிஸ் சாக்கரின் என பலரும், சமஸ்கிருத மொழியின் பல்வேறு வளமையை தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் போதிக்கின்றனர்.மாஸ்கோ பேராசிரியர் சமஸ்கிருதத்தில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற நுால்களை, 'ரஷ்யன்' மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.'இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையே சமஸ்கிருத மொழி ஒரு கலாசார உறவு ஏற்படுத்தியுள்ளது' என, முனைவர் குஸ்மா ரக்ஷாமணி கூறுகிறார். தமிழகத்தின் தமிழை பிற நாடுகளில் வளர்க்க, பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணம் தந்து இருக்கை அமைத்து மொழியை வளர்க்க பாடுபடுகிறோம்.ஆனால் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு அறிஞர்கள் கூட்டாக சமஸ்கிருதத்தை பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.
மஞ்சளும், பாஸ்மதி அரிசியும், வேம்பும் நம் பாரம்பரியப் பொருளாக இருந்தாலும், நம் அக்கறை இன்மையால், அலட்சியத்தால், பிற நாடுகள் காப்புரிமை பெற்ற பின் நாம் போராடி நிரூபித்ததை மறந்துவிட முடியாது.நம் நாட்டில், 1961ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, 1,652 மொழிகள் இருந்தன. ஆனால், 1971ல், 109 மொழிகள் மட்டுமே பட்டியலிடப்பட்டன.
நுாற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கொழிந்து போயின.சமஸ்கிருதத்தை ஆரிய மொழி என்று சித்தரித்தது மட்டுமல்லாமல், அதை ஒரு ஜாதியோடு பொருத்தி அரசியல் ஆதாயம் தேடும் வேலை தொடர்ந்து இங்கு நடந்து வருகிறது.ஆனால், பள்ளிப்படிப்பில் ஓர் அங்கமாக சமஸ்கிருத மொழி இருப்பதுடன், அதில் இருக்கக்கூடிய அரிய விஷயங்களை ஆராய்ந்து, அதை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பதால் மட்டுமே தன் தொன்மை, நுட்பம் ஆகியவற்றை நாம் உணர முடியும்; அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல முடியும்.
சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குவதாக, தொடர் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.தமிழை பாதுகாக்க தமிழக அரசு ஆவன செய்யும். மலையாள மொழியை பாதுகாக்க கேரளா ஆவன செய்யும். அப்படி எந்தவொரு தனி மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாத சமஸ்கிருத மொழியை பாதுகாக்க மத்திய அரசு முயற்சி எடுப்பதில் தவறில்லையே.ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால், எல்லாருக்கும் சரிசமமாக பிரித்து அளிப்பது தான் நீதி, சட்டம். ஆனால், எந்தப் பிள்ளை நோயுற்று இருக்கிறதோ; எந்த பிள்ளை நலிவடைந்து இருக்கிறதோ அதற்கு கூடுதல் கவனம் செலுத்துவதே தர்மம்.
புள்ளி விபரங்கள்
அனைத்திந்திய உயர் கல்வி கணக்கெடுப்பின்படி, 2013 -- 14ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள பொது கல்விக்கான பல்கலைக்கழகங்கள், 308ல் இருந்து, 522 ஆக உயர்ந்தன. தொழில்நுட்பக் கல்லுாரிகள், 90லிருந்து, 177 ஆக உயர்ந்தன. பிற மொழிகளுக்கானவை கூட, 7லிருந்து, 11 ஆக உயர்ந்தன.ஆனால், சமஸ்கிருத பல்கலைக்கழகம், 11லிருந்து ஒன்றே ஒன்று உயர்ந்து, 12 ஆக மட்டுமே உள்ளது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதிலிருந்து இங்கு ஜோடிக்கப்படும் கதைகளை, அரசியல் காழ்ப்புணர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்.ஜெர்மன், ரஷ்யா போன்ற நாடுகளில், சமஸ்கிருத ஆராய்ச்சி ஏன் நடக்கிறது என்று சிந்தித்தோமா...இந்த இரண்டு நாடுகளும், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவை. எனவே, அவை நம் புராதன சமஸ்கிருத நுால்களில் உள்ள தொழில்நுட்ப கருத்துகளை புதுப்பிக்க, அதை நடைமுறைப்படுத்த முடியுமா என ஆராய்கின்றன.அதற்குச் சான்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் வேலை செய்த தொழில்நுட்ப கல்லுாரியில், வானுார்தி பொறியியல் நான்காம் ஆண்டு பயிலும் மாணவன் ஒருவன் என்னிடம், 'ஏதாவது சமஸ்கிருத பண்டிதர் தெரியுமா; தெரிந்தால் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள்' என்றான்.
ஏன் என காரணம் கேட்டபோது, 'ஒரு ஜெர்மன் ஆராய்ச்சிக் கட்டுரையாளர் சமஸ்கிருதத்தில் நம்மிடம் உள்ள புத்தகத்தில், வானுார்தி தொழில்நுட்பம் பற்றி விரிவாக கூறியுள்ளார். 'அந்த நுட்பமான சொற்களுக்குப் பொருள் தெரிந்தால் தான் சூத்திரத்தை கண்டுபிடித்து தொழில்நுட்பத்தை கணக்கிட முடியும்' என்றான்.மேலும் அந்தப் பையன், 'புஷ்பக விமானம்' என்று நம் புராணத்தில் உள்ளதை தொடர்புபடுத்தி, அதன் நடைமுறை சாத்தியக் கூறுகளைப் பற்றியும் விளக்கினான்.மேலாண்மைத் துறை பேராசிரியர் என்பதால், அவன் கூறியதை ஒரு சிறு குழந்தை யானையை பார்த்து ஆச்சரியப்படுவதை போல கேட்டு ஆச்சரியப்பட்டேன்.பின் ஒரு பண்டிதரின் தொலைபேசி எண்ணை தந்து, அவரை தொடர்பு கொள்ளச் செய்தேன். இன்றும் சமஸ்கிருதத்தில் உள்ள விஷயங்களை உணராமல் புறக்கணித்தால் நஷ்டம் நமக்கு தான். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று சொன்ன அறிஞரின் வழிவந்த இளவல்கள், இரவல் மொழியாம் ஆங்கிலத்திற்கு தரும் மரியாதையை கூட, இந்திய மொழிக்கு, அதுவும் தமிழுக்கு நிகரான தொன்மையான மொழியான சமஸ்கிருதத்திற்கு தர மறுப்பது அநாகரிகம் மட்டுமல்ல, அற்பத்தனமானதும் கூட.'புத்தம் புதிய கலைகள் பஞ்ச பூத செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே, அந்த மேன்மைக் கலைகள் தமிழி னில் இல்லை. மெல்லத் தமிழினி சாகும்.
இந்த வசை எனக்கு விடலாமோ... சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்றார் பாரதியார். அதை, தமிழகம் செய்கிறதோ இல்லையோ மத்திய அரசு செய்கிறது.தொழிற்கல்வி படிப்பு களை தாய்மொழியில் கற்க அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல் தொழில்நுட்ப புத்தகங்களை, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க நிதியும் ஒதுக்கியுள்ளது.
எல்லா மொழிகளும் வளர வேண்டும்; பல மொழிகளில் உள்ள தொன்மையான, தொழில்நுட்ப, விஞ்ஞான புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.பல மொழிகள் கற்பதை ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் பிற மொழிகளின் தன்மையை, தொன்மையை ஒருவர் உணர முடியும்.அரசு ஆவன செய்து விட்டது. நாமும் நம் எண்ணங்களை விசாலமாக்கி, அறிவை உயர்த்தி, வாழ்வில் வண்ணங்களை சேர்ப்போம்!
தொடர்புக்கு: முனைவர் ரா.காயத்ரி
கல்வியாளர்
இ - மெயில்: r.gayatrisuresh@yahoo.com