புதுடில்லி : பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறைத்துள்ளன.

இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., மற்றும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. இதையடுத்து, ௧ லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாய்; டீசலுக்கு 10 ரூபாய் குறைந்தது. மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை குறைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில், பெட்ரோலியத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் அறிவிப்பிற்குப் பின், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. தமிழகம், மஹாராஷ்டிரா, டில்லி தலைநகர் பிராந்தியம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை இன்னும் குறைக்கவில்லை.

யூனியன் பிரதேசமான லட்சத்தீவு, கேரளாவில் இருந்து வாட் வரி செலுத்தி பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்கிறது. யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல், டீசலுக்கு வரியில்லை. பஞ்சாப் அரசு வாட் வரியை குறைத்த பின், லிட்டர் பெட்ரோல் விலை, 16.02 ரூபாய் குறைந்துள்ளது.
இது, லடாக்கில் 13.43 ரூபாய்; கர்நாடகாவில் 13.35 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. கர்நாடகாவில் 19.49 ரூபாய்; புதுச்சேரியில் 19.08 ரூபாய் குறைந்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபாரில், ௧ லிட்டர் பெட்ரோல் 82.96 ரூபாய்; டீசல் 77.13 ரூபாய் என்ற அளவில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.