சென்னை கடலோர மாவட்டம் மட்டுமல்ல; கடல் நீர்மட்டத்தில் இருந்து மிக குறைவான உயரத்தில் உள்ள, அதிக மக்கள் தொகை உள்ள மாவட்டம்.
இதனால், வடகிழக்கு பருவ மழை காலம், சென்னைக்கு பேரிடர் காலமாகவே கருதப்படும். எல்லா ஆண்டுகளிலும் கன மழை இருக்காது. மழை இப்படி தான் இருக்கும் என கணிக்கவும் முடியாது. இதனால் பெருமழையை எதிர்கொள்ளும் வகையில், எப்போதும் தயார் நிலையில் இருப்பது அவசியம்.

இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பொதுவான நடைமுறை சென்னையில் கடைப்பிடிக்கப்படுகிறது. மாநகராட்சி கமிஷனரை தலைவராக கொண்டு, 52 அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே, இந்த பொதுவான நடைமுறை. இதன்படி, ஆகஸ்ட் மாதம் இந்த கூட்டம் நடக்கும். இதில், துறை வாரியாக செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பேசப்படும்.
மற்ற துறைகள் செய்ய வேண்டிய பணிகளை, மாநகராட்சி அதிகாரிகளும் கூட்டத்தில் தெரிவிப்பர். இதன்படி, அந்தந்த பணிகளை எப்போது முடிப்பது என்பது பேசப்பட்டு, செப்டம்பர் 30க்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என, கமிஷனர் அறிவுறுத்துவார். அதற்கான அறிக்கையை, மாநகராட்சிக்கு அளிக்கவும் வலியுறுத்தப்படும்.
மாநகராட்சி சார்பில், மழை நீர் வடிகால்கள் துார் வாரும் பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டு, செப்டம்பர் 30க்குள், முதல்கட்டமாக, அனைத்து வடிகால்களும் துார் வாரி முடிக்கப்படும். அதன் பிறகு, மழை பெய்யும் போது, துவக்கத்திலேயே எந்தெந்த பகுதியில் மழை நீர் தேக்கம் உள்ளதோ, அங்கு இரண்டாம் கட்டமாக வடிகால் துார் வாரப்படும்.

இதன் வாயிலாக, ஓரளவு வெள்ள பாதிப்பை தவிர்க்க முடிந்தது. அப்படியே நீர் தேங்கினாலும், ஓரிரு தினங்களில் வடிந்துவிடும். இது தான், 2020 பருவ மழை வரை நடைமுறையில் இருந்தது.ஆனால், இம்முறை இந்த நடைமுறைப்படி எந்த பணியும் நடக்கவில்லை. மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. புதிய அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்தியது. அதில் தவறில்லை. அதோடு சேர்த்து, அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யும் படலம் நடந்தது.வழக்கமாக நடைபெறும் பருவ மழை முன்னெச்சரிக்கை, அனைத்து துறை ஆலோசனை கூட்டம், இம்முறை தாமதமாக செப்டம்பர் 28ம் தேதி நடத்தப்பட்டது. அதற்கு முன் மாநகராட்சியிலும் அதிகாரிகள் இடமாற்றம் நடந்தது.
கூட்டத்தில், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மற்ற துறைகள் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டார். அந்தந்த துறை அதிகாரிகளும், பணிகளை குறித்த காலத்தில் செய்து முடித்துவிடுவதாக உறுதி அளித்தனர். ஆனால், கூட்டம் முடித்து 10 நாட்களுக்கு பின், கள ஆய்வுக்கு சென்ற போது தான், யாரும் வேலையை ஒழுங்காக செய்யவில்லை என, கமிஷனருக்கே தெரிந்தது. மற்ற துறை அதிகாரிகள் மீது, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க முடியாது. வேலையை முடித்துக் கொடுங்கள் என, அறிவுறுத்த மட்டுமே முடியும். அதை தான் ககன்தீப் சிங்கும் செய்தார்.
ஆனால், கமிஷனர் திருப்திபடும் அளவிற்கு வேலை நடக்கவில்லை. குறிப்பாக, ரயில்வே, பொதுப் பணி, நெடுஞ்சாலை துறைகளின் பணிகள் படுமோசம். தன் சொந்த துறையான மாநகராட்சி பணியும் கமிஷனர் ஆய்வில், மிக மோசமாக இருப்பது தெரிந்தது. அதே போல இரண்டு கட்டமாக வடிகால் துார் வாரும் பணி நடக்காமல், ஒருகட்ட துார் வாரும் பணியே, இந்த ஆண்டு முழுமையாக நடக்கவில்லை. குறிப்பாக, மாநகராட்சி வடிகால்கள், 1,000 கி.மீ.,க்கு கூட, துார் வாரப்படவில்லை.
இதனால், ஒரு வாரமாகியும் வெள்ளம் வடியாமல் மக்கள் தத்தளிக்கின்றனர்.கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற புதிய அரசு, பருவ மழை பாதிப்புக்களை தவிர்க்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்டுள்ளது என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE