கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்லாததால், கோவை - பொள்ளாச்சி செல்லும் பயணிகள், மேம்பாலத்தின் அருகே, ரோட்டோரம் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது.கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை இடையே, 20வது கி.மீ.,ல் கிணத்துக்கடவு பேரூராட்சி அமைந்துள்ளது.
இங்கிருந்து, 15 கி.மீ., துாரத்தில் கேரளா மாநில எல்லை அமைந்துள்ளது. ரயில்வே ஸ்டேஷன், தாலுகா அலுவலகம், கருவூலம், பத்திரப்பதிவு அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகியன இங்குள்ளன.கோவை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கானோர் தினமும், கிணத்துக்கடவு வந்து செல்கின்றனர்.கிணத்துக்கடவில் இருந்து, கிராமங்களுக்கும், கோவை, பொள்ளாச்சிக்கும் மக்கள் செல்வதற்கு வசதியாக, வாரச்சந்தை வளாகத்தில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.பஸ் ஸ்டாண்ட் திறந்து சில மாதங்கள் வரை கோவை, பொள்ளாச்சி மற்றும் பழநி வரை செல்லும் விரைவு பேருந்துகள் வந்து சென்றன. இதன்பின், பல ஆண்டுகளாக பஸ் ஸ்டாண்டுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருவதில்லை. டவுன் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. இதனால், மழை, வெயில் என பார்க்காமல், கோவை, பொள்ளாச்சி செல்லும் பயணிகள், பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே, ரோட்டோரம் காத்திருக்கும் பரிதாபம் நீடிக்கிறது. இருப்பினும், பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்வதற்குரிய நுழைவு கட்டணம் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியில் வசூலிக்கப்படுகிறது.சில தனியார் பஸ்கள், கல்லாங்காட்டுப்புதுார் பெட்ரோல் பங்க் அருகே துவங்கி, அரசம்பாளையத்தில் நிறைவு பெறும், 2.75 கி.மீ., நீளமுள்ள மேம்பாலத்தில் சென்று விடுகின்றன. இதனால், கிணத்துக்கடவில் காத்திருக்கும் பயணிகள் பஸ் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, உள்ளூர், வெளியூர் பஸ்கள், மேம்பாலம் வழியாக செல்வதற்கு தடை விதித்து, அனைத்து பஸ்களும் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்ல, பேரூராட்சி நிர்வாகமும், கிணத்துக்கடவு போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால், பயணிகள் திருப்தி அடைவர்.நெகமம் வழியாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும், பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் இருந்து, அரை கி.மீ.,துாரத்தில் அமைந்துள்ள, பேரூராட்சி பஸ் ஸ்டாண்டுக்குள் பயணிகள் நலன்கருதி வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE