சில வரி செய்திகள்| Dinamalar

சில வரி செய்திகள்

Added : நவ 14, 2021
Share
சாமியை கும்பிட்டு கொள்ளைதானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் கடந்த 9ம் தேதி இரவு நுழைந்த ஒரு திருடன், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, உண்டியலை உடைப்பதற்கு முன், அந்த திருடன் ஆஞ்சநேயரை வழிபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஷில்பா ஷெட்டி மீது

சாமியை கும்பிட்டு கொள்ளை

தானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் கடந்த 9ம் தேதி இரவு நுழைந்த ஒரு திருடன், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, உண்டியலை உடைப்பதற்கு முன், அந்த திருடன் ஆஞ்சநேயரை வழிபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஷில்பா ஷெட்டி மீது வழக்கு

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச 'வீடியோ'க்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப் பட்டு, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், தன்னிடம் இருந்து 1.51 கோடி ரூபாய் பணம் பறித்ததாக கூறி, ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் காஷிப் கான் என்பவர், போலீசிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்

.'ட்ரோன்' தகர்ப்பு தொழில்நுட்பம்

புதுடில்லி: சமீப காலமாக நம் நாட்டின் எல்லைப் பகுதியில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய வகை விமானங்களால் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இந்நிலையில் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்ப அமைப்புகளை கொள்முதல் செய்ய, ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

குற்றங்கள் 400 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி: நாட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை, என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், 2020ம் ஆண்டில், 738 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறி உள்ளதாகவும், அது, 2019ம் ஆண்டைக் காட்டிலும், 400 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் 164 குற்றங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன.

அதிவேக ரயில்கள் இயக்க ஆய்வு

புதுடில்லி: நம் நாட்டில், 'ஹைப்பர்லுாப்' எனப்படும் அதிகவேக ரயிலை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து, 'நிடி ஆயோக்' உறுப்பினர் சரஸ்வத் நேற்று கூறுகையில், ''நம் நாட்டில் ஹைப்பர்லுாப் அதிவேக ரயில் அறிமுகம் ஆவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். ஹைப்பர்லுாப் தொழில்நுட்பம் குறித்து விளக்க, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்,'' என்றார்.

அமைச்சர் மீது முட்டை வீச்சு

புவனேஷ்வர்: ஒடிசாவின் கலஹண்டி பகுதியில், 24 வயதான ஒரு பெண் ஆசிரியை கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாநில அமைச்சர் மிஷ்ராவை பதவி நீக்கி, கைது செய்யக் கோரி, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், நேற்று போராட்டம் நடந்த பகுதிக்கு அருகே, கார்களில் சென்ற மாநில அமைச்சர் ஜெகன்நாத் சராகா மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஸ்னேஹன்கினி சூரியா மீது முட்டைகளை வீசி எதிர்க்கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

பத்திரிகையாளர் உடல் கண்டெடுப்பு

பாட்னா: பீஹாரின் மதுபானி மாவட்டத்தில் சமீபத்தில் புத்திநாத் ஜா, 22, என்ற பத்திரிகையாளர், போலியாக நடத்தப்பட்டு வரும் சில மருந்தகங்களின் பெயர்களை அம்பலப்படுத்தினார். இதையடுத்து, கடந்த 9ம் தேதி, அவர் திடீரென மாயமானார். இந்நிலையில் இங்குள்ள நெடுஞ்சாலை ஓரத்தில், அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தீ வைத்து அவரை எரித்து கொன்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாகபட்டினத்தில் நிலநடுக்கம்

விசாகபட்டினம்: ஆந்திர பிரதேசத்தின் விசாகபட்டினத்தில், நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X