துபாய்: 'டி-20' உலக கோப்பையை முதன்முறையாக வென்று அசத்தியது ஆஸ்திரேலியா. பைனலில், வார்னர், மிட்சல் மார்ஷ் கைகொடுக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் கோப்பை கனவு தகர்ந்தது.

எமிரேட்சில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 7வது சீசன் நடந்தது. துபாயில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் காயத்தால் விலகிய கான்வேவுக்கு பதிலாக டிம் செய்பெர்ட் தேர்வானார். 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
வில்லியம்சன் அரைசதம்
நியூசிலாந்து அணிக்கு டேரில் மிட்சல் (11), மார்டின் கப்டில் (28) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஸ்டார்க் வீசிய 11வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசிய கேப்டன் வில்லியம்சன், மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு அனுப்பி 32 பந்தில் அரைசதம் கடந்தார். அடுத்து வந்த பிலிப்ஸ் (18) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய வில்லியம்சன், ஸ்டார்க் வீசிய 16வது ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, 22 ரன் கிடைத்தன. ஹேசல்வுட் பந்தில் வில்லியம்சன் (85 ரன், 3 சிக்சர், 10 பவுண்டரி) 'பெவிலியன்' திரும்பினார்.
நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்தது. நீஷம் (13), செய்பெர்ட் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

வார்னர் அபாரம்
உலக கோப்பை என்றாலே ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் 'ஸ்பெஷலாக' இருக்கும். கேப்டன் ஆரோன் பின்ச் (5) சறுக்கிய போதும், வார்னர், மிட்சல் மார்ஷ் சேர்ந்து மிரட்டினர். மில்னே வீசிய 4வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார் மார்ஷ். இஷ் சோதி வீசிய 9வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த வார்னர், நீஷம் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த போது பவுல்ட் 'வேகத்தில்' வார்னர் (53 ரன், 3 சிக்சர், 4 பவுண்டரி) போல்டானார்.
மறுமுனையில் அசத்திய மார்ஷ், இஷ் சோதி பந்தை சிக்சருக்கு அனுப்பி தன்பங்கிற்கு அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மேக்ஸ்வெல், மில்னே வீசிய 15வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். சவுத்தீ பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மேக்ஸ்வெல் வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. மிட்சல் மார்ஷ் (77 ரன், 4 சிக்சர், 6 பவுண்டரி), மேக்ஸ்வெல் (28) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் பவுல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ் வென்றார். தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் கைப்பற்றினார்.