சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எல்லா நாட்டுக்கும் தான் பாதிப்பு!

Updated : நவ 17, 2021 | Added : நவ 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன; அந்த விலை உயர்வானது மக்கள் மீது சுமத்தப்படுகிறது.கொரோனா பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காகவே, மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது என்ற வாதம் எல்லாம்
 இது உங்கள் இடம்

ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன; அந்த விலை உயர்வானது மக்கள் மீது சுமத்தப்படுகிறது.

கொரோனா பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காகவே, மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது என்ற வாதம் எல்லாம் முன்வைக்கப்படுகிறது.சர்வதேச சந்தை என்பது, உலக நாடுகள் அனைத்திற்கும் தானே. கொரோனா நோய், அனைத்து நாடுகளையும் தானே பாதித்தது?நம் அண்டை நாடுகளில் பெட்ரோல் விலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

நம் ரூபாய் மதிப்பில், 1 லிட்டர் பெட்ரோல் விலை நேபாளம் 66, இலங்கை 68, பாகிஸ்தான் 64, வங்கதேசம் 77, பூட்டான் 82 என்ற அளவில் உள்ளன; ஆனால், நம் நாட்டில் 100 ரூபாயை தாண்டி விட்டது.இதில் பூட்டானுக்கு, இந்தியா தான் பெட்ரோலியப் பொருட்களை விற்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

நம் நாட்டில், பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு காரணம், கலால் வரியே. இதில், கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசுக்கு 450 லட்சம் கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. இதை கடன் அல்லது 'பாண்டு'க்கு வட்டி கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது என்கின்றனர். ஆனால், இந்த விலையேற்றத்தால் நம் நாட்டில் பண வீக்கம் அதிகரித்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், நம் நாட்டில் பெட்ரோலியப் பொருட்களில் 22 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பே. அதிலும், பெட்ரோலில் தற்போது 9 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இன்னும் ஓராண்டில் இது 20 சதவீதமாகும்.இவற்றை கணக்கில் சேர்த்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயித்தால், 1 லிட்டர் பெட்ரோல் 50 ரூபாயை தாண்டாது; பணவீக்கமும் கட்டுக்குள் வரும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?


சென்னையை காப்பாற்ற முடியாது!


எம்.ஆர்.லட்சுமிநாராயணன், தாத்தையங்கார் பட்டி, நாமக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், மழை நீர் மேலாண்மை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.ஆண்டுதோறும், பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை வீணாக கடலில் கலக்க செய்வதே, தமிழகத்தில் வழக்கமாக உள்ளது.

கோடைக் காலத்தில் தண்ணீருக்காக, அண்டை மாநிலங்களுடன் மல்லுகட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.தொடர் மழை என்றாலே, சென்னைவாசிகளுக்கு திண்டாட்டம் தான். மழை நீர் வடிய வழியின்றி மாநகரை தெப்பக் குளமாக்கி விடுகிறது; மக்களை தத்தளிக்கச் செய்து விடுகிறது.

ஒரு காலத்தில், 'ஏரி மாவட்டங்கள்' என அழைக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவை, மக்கள் வாழும், 'ஏரியா மாவட்டங்களாக' மாற்றப்பட்டதால், மழை காலத்தில் அப்பகுதிகள் மிதக்கின்றன.சரியான நிர்வாக திட்டமிடல் இல்லை, சாலை உயரம் அதிகரிப்பு, மழை நீர் வெளியேற வழியில்லை போன்ற காரணங்களால், குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

ஆளுங்கட்சியினர், இதற்கு முன் ஆட்சி செய்தோரை குறை சொல்லியே, தங்கள் கடமையில் இருந்து தப்பித்து கொள்கின்றனர். இப்போதைய தி.மு.க., அரசும், அதே பழைய பல்லவியை பாடாமல், ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் இறங்க வேண்டும்.கடந்த 2015ல் வெள்ளம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடத்தை மறந்து விட்டோம். இதோ, இப்போது மீண்டும் சென்னை நகரை மிதக்க வைத்துள்ளது, பருவ மழை. இப்போதும் கூட, நீர் மேலாண்மை குறித்து பாடம் கற்கவில்லை என்றால், சென்னையை இனி காப்பாற்ற முடியாது.


'கழுமரம்' ஏற்றுங்கள்!


கா.மகேஷ், பணகுடி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அடங்க மாட்றாங்கய்யா' என்ற தலைப்பில், அன்றாடம் குறைந்தது நான்கு அரசு அதிகாரிகளாவது லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்ட செய்தி, நம் நாளிதழில் வெளியாகிறது.

கூட்டி கழித்து கணக்கு பார்த்தால், லஞ்சம் வாங்கியதாக ஆண்டொன்றுக்கு 1,000 அதிகாரிகளாவது கைது செய்யப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் 1 சதவீதம் கூட லஞ்சம் குறைவதே இல்லை. நாளுக்கு நாள் லஞ்சம் அதிகரிக்கிறது என்பது, இன்னும் கொடுமை.அதற்கு முக்கிய காரணம், நம் நாட்டில் தற்போது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் சட்டங்கள் தான்.நாம், 5வது வயதில் அணிந்த ஆடையை 50வது வயதில் அணிய இயலாது.

நம் உடலமைப்புக்கேற்ப, உடையை மாற்றிக் கொள்வோம் தானே?அது போல, நாட்டில் அமலில் இருக்கும் சட்டங்கள் அனைத்தையும், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்க வேண்டும் அல்லவா?ஆனால் நாமோ, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமலில் இருந்த அரதப் பழசான சட்டங்களையே இன்னமும் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.

நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் மூலம் லஞ்ச, -ஊழல் வழக்குகளில் சிக்குவோரை தண்டிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. தவிர நம் நீதிமன்றங்கள் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் பெரும்பாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாகவே உள்ளன.

லஞ்ச, -ஊழலில் கையும் களவுமாக பிடிபடுபவர், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, தண்டனை அளிப்பதற்குள் அவரின் ஆயுளே முடிந்து விடுகிறது.லஞ்ச, -ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர் யாராவது தலை குனிந்தபடி செல்கிறாரா?வெற்றிக் களிப்போடு, வெற்றிச் சின்னமாக இரண்டு விரல்களை காட்டியபடி, 'சட்டத்தால் என்னை ஒன்றும் செய்ய முடியாது' என்ற மமதையோடு செல்கிறார்.

இன்றைக்கு இருக்கும் சட்டத்தால், நாட்டில் நீக்கமற நிறைந்து இருக்கும் லஞ்சம், ஊழலை ஒழிக்கவே முடியாது.சரி... அப்படியென்றால் அதை எப்படி ஒழிப்பது?மன்னர் ஆட்சி காலத்தில், 'கழுமரம்' என்ற பெயரில் ஒரு தண்டனை கருவி இருந்தது தெரியுமா?

தற்போது கையும் களவுமான லஞ்சம், ஊழலில் சிக்கும் 10 நபர்களை உடனடியாக கழுமரத்தில் ஏற்றினால் போதும்... இந்நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழல் என்ற வார்த்தைகள், அகராதியில் கூட இருக்காது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G Mahalingam - Delhi,இந்தியா
15-நவ-202111:19:02 IST Report Abuse
G  Mahalingam சீனிவாஸ் அவர்களே, பெட்ரோல் டீசல் விலை ஏறிய பிறகும் விலைவாசி 2 சதவீதம் விலை உயர்ந்து உள்ளது. இப்போது பெட்ரோல் 8 ரூபாய் குறைந்து உள்ளது. இதனால் ஆட்டோகாரர் கட்டணத்தை குறைத்தரா. பருப்பு விலை 2012 ஆண்டு 230 ரூபாய் இருந்தது. அரசாங்கத்திடம் இலவசமாக அரிசி, தடுப்பூசி உதவி தொகை வேண்டும். வரியையும் உயர்த்த கூடாது.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-நவ-202106:02:08 IST Report Abuse
NicoleThomson ஸ்ரீனிவாஸ் கூகுள் கடவுள் பாக்கில் பெட்ரோல் 137, இலங்கை 184, நேபாளம் 97 என்று காட்டுகிறார் நீங்க என்னடான்னா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X