இந்திய நிகழ்வுகள்
சாமியை கும்பிட்டு கொள்ளை
தானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் கடந்த 9ம் தேதி இரவு நுழைந்த ஒரு திருடன், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, உண்டியலை உடைப்பதற்கு முன், அந்த திருடன் ஆஞ்சநேயரை வழிபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஷில்பா ஷெட்டி மீது வழக்கு
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச 'வீடியோ'க்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப் பட்டு, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், தன்னிடம் இருந்து 1.51 கோடி ரூபாய் பணம் பறித்ததாக கூறி, ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் காஷிப் கான் என்பவர், போலீசிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்
குற்றங்கள் 400 சதவீதம் அதிகரிப்பு
புதுடில்லி: நாட்டில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை, என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், 2020ம் ஆண்டில், 738 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறி உள்ளதாகவும், அது, 2019ம் ஆண்டைக் காட்டிலும், 400 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் 164 குற்றங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு எதிராக நிகழ்ந்துள்ளன
அமைச்சர் மீது முட்டை வீச்சு
புவனேஷ்வர்: ஒடிசாவின் கலஹண்டி பகுதியில், 24 வயதான ஒரு பெண் ஆசிரியை கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாநில அமைச்சர் மிஷ்ராவை பதவி நீக்கி, கைது செய்யக் கோரி, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், நேற்று போராட்டம் நடந்த பகுதிக்கு அருகே, கார்களில் சென்ற மாநில அமைச்சர் ஜெகன்நாத் சராகா மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஸ்னேஹன்கினி சூரியா மீது முட்டைகளை வீசி எதிர்க்கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
பத்திரிகையாளர் உடல் கண்டெடுப்பு
பாட்னா: பீஹாரின் மதுபானி மாவட்டத்தில் சமீபத்தில் புத்திநாத் ஜா, 22, என்ற பத்திரிகையாளர், போலியாக நடத்தப்பட்டு வரும் சில மருந்தகங்களின் பெயர்களை அம்பலப்படுத்தினார். இதையடுத்து, கடந்த 9ம் தேதி, அவர் திடீரென மாயமானார். இந்நிலையில் இங்குள்ள நெடுஞ்சாலை ஓரத்தில், அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தீ வைத்து அவரை எரித்து கொன்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக நிகழ்வுகள்
ரூ.1.47 கோடி நகை மோசடி: இருவர் 'சஸ்பெண்ட்'
ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம், பி. கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிளியூர் கிளையில், 1.47 கோடி ரூபாய்க்கு, போலி நகைகள் அடகு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக, சங்க செயலர் இளமதியன், துணை செயலர் முருகேசனை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டார்.இது தொடர்பாக, துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நகை அடகு வைத்த மக்கள், சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் என அனைவரையும் விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுமிக்கு தொந்தரவு: டாக்டர் தலைமறைவு
கரூர்-கரூரில் பள்ளி மாணவிக்குபாலியல் தொந்தரவு கொடுத்ததாக, டாக்டர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, டாக்டர் தலைமறைவாகி விட்டார்.கரூரைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த், 55; எலும்பு முறிவு டாக்டர். இவர், கரூர் பிரதட்சணம் சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். அங்கு, பசுபதிபாளையத்தைச் சேர்ந்த 38 வயது பெண், கேஷியராக பணிபுரிந்தார்.அவருக்கு தீபாவளி 'போனஸ்' குறைவாக கொடுத்ததால் வேலைக்கு செல்லவில்லை.
இந்நிலையில், மருத்துவமனை மேலாளர் சரவணன், 50, நேற்று முன்தினம் கேஷியரின் 17 வயது மகளை மொபைல் போனில் அழைத்து, 'தீபாவளி போனஸ், புத்தாடைகள் தர டாக்டர் ரஜினிகாந்த் வரச் சொல்கிறார்' என, கூறியுள்ளார்.அதை நம்பிய சிறுமியும் மருத்துவமனைக்கு சென்று, ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அப்போது, தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அவரது தாய், கரூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
ரஜினிகாந்த், சரவணன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையறிந்த ரஜினிகாந்த் தலைமறைவாகி விட்டார். சரவணனிடம் விசாரித்து வருகின்றனர். பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி, 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

பெட்ரோல் பங்க்கில் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் தீப்பிடித்த கார்
தேவகோட்டை--தேவகோட்டை பங்க்கில் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் கார் எரிந்தது.
சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை அருகே உஞ்சனை புதுவயலை சேர்ந்தவர் பாண்டி யன்62.நேற்று காலை 11:30 மணிக்கு காரில் பேரனுடன் தேவகோட்டை தியேட்டர் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு வந்தார்.பெண் ஊழியர் பெட்ரோலுக்கு பதிலாக தவறாக டீசலை போட்டார். காரை பாண்டியன் இயக்க முயன்ற போது தான் டீசல் போட்டது தெரியவந்தது. டீசலை மெக்கானிக் மூலம் எடுக்குமாறு கூறினார்.
டீசலை எடுக்க முயன்ற போது திடீரெனகாரில் தீ பிடித்தது. பாண்டியன்,பேரன் தப்பி ஓடினர். தீ மளமளவென எரிந்த நிலையில் சற்று துாரம் காரை தள்ளி விட்டனர். தீ அணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரயில்கள்; விபத்து தவிர்ப்பு
திருப்பூர்-திருப்பூரில் சரக்கு ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சரக்கு ரயில் டிரைவர் சாமர்த்தியத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருப்பூரில் இருந்து ஈரோடுக்கு நேற்று மதியம் 1:00 மணியளவில், சரக்கு ரயில் புறப்பட்டது. 'கூட்ஸ்ஷெட் டிராக்கில்' இருந்து, ஈரோடு - திருப்பூர் வழித்தட டிராக்கை கடந்து, திருப்பூர் - ஈரோடு டிராக்குக்கு சரக்கு ரயில் மாற வேண்டும்.கூட்ஸ்ஷெட் டிராக்கில் இருந்து ஈரோடு - திருப்பூர் வழித்தட டிராக்கை சரக்கு ரயில் கடந்த நேரத்தில், கண்ணுக்கு தெரியும் துாரத்தில், ஈரோடில் இருந்து திருப்பூர் நோக்கி, கோவை எக்ஸ்பிரஸ், அதே டிராக்கில் வந்தது.
அதிர்ச்சியடைந்த சரக்கு ரயில் இன்ஜின் டிரைவர், சுதாரித்து தொடர்ந்து, 'ஹாரன்' அடித்தார். இதையடுத்து, கோவை எக்ஸ்பிரஸ் வேகம் குறைத்து நிறுத்தப்பட்டது. ஸ்டேஷன் அருகில் வந்ததால், ரயிலின் வேகம் ஏற்கனவே குறைவாக இருந்தது. சரக்கு ரயில் மெதுவாக, திருப்பூர் - ஈரோடு டிராக் வழியாக வெளியேறியது. அதன்பின், கோவை எக்ஸ்பிரசுக்கு, 'கிரீன் சிக்னல்' வழங்கப்பட்டது. சாதுர்யமாக செயல்பட்ட சரக்கு ரயில் டிரைவரால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் கைது: பெற்றோருக்கு அமைச்சர்கள் ஆறுதல்
கோவை-கோவையில், ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில், தலைமறைவான பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, மாணவியின் சடலத்தை பெற்றோர் பெற்று சென்று, தகனம் செய்தனர். மாணவி குடும்பத்துக்கு, தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.கோவை, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.
பின், மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். முன்பு படித்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 35, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அவர் பள்ளியை விட்டு விலகியுள்ளார்.இந்நிலையில், மாணவி இரண்டு நாட்களுக்கு முன், அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம், மாநிலம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிக்கினார்
மாணவி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், 46, என்பவரிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 'பள்ளி முதல்வரை கைது செய்யும் வரை, சடலத்தை வாங்க மாட்டோம்' என பெற்றோர் தெரிவித்தனர். மாணவியின் தற்கொலைக்கு பள்ளி முதல்வரும் காரணம் என்ற கோணத்தில், அவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார், தனிப்படை அமைத்து தேடினர்.
பெங்களூரில் பதுங்கி இருந்த மீரா ஜாக்சனை கைது செய்து, நேற்று காலை கோவை அழைத்து வந்தனர். அவரிடம், சம்பவம் குறித்தும், மாணவி அளித்த புகார் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.சடலம் ஒப்படைப்புபள்ளி முதல்வர் கைதை தொடர்ந்து, நேற்று காலை மாணவியின் சடலத்தை பெற்றோர் வாங்கி சென்றனர். மாணவியின் வீட்டிற்கு அமைச்சர்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் சென்று அஞ்சலி செலுத்தினர்.பின், போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக ஆத்துப்பாலம் எடுத்து செல்லப்பட்டு, மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள், பொதுமக்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு சென்றனர்.உதவி எண் 14417மாணவி வீட்டுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றனர். பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மகேஷ், நிருபர்களிடம் கூறுகையில், ''இது, தனிப்பட்ட பெண்ணுக்கு நடந்தது என்று பாராமல், என் சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல் வலியை தருகிறது. இச்சம்பவத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.''மாணவி வீட்டில் கிடைத்த கடிதம் குறித்து, விசாரணை நடக்கிறது. பள்ளி மாணவ - மாணவியருக்கு 14417 என்ற உதவி எண் உள்ளது. எந்த பிரச்னையாக இருந்தாலும், இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.கல்வி அதிகாரி விசாரணைசம்பவம் குறித்து, பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டார். ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, கம்ப்யூட்டர் பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர் என்பது தெரிந்தது.
ஆனால், பள்ளியில் இவர் இயற்பியல் பாடம் எடுத்து வந்துள்ளார்.இவரை ஏன் இயற்பியல் பாடம் எடுக்க அனுமதித்தனர்? பள்ளி மாணவி புகார் அளித்தும், ஆசிரியரை தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தது ஏன் என, கல்வித் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். ரூ.1 கோடி வழங்க அ.தி.மு.க., வலியுறுத்தல்அ.தி.மு.க., கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள், மாணவி வீட்டுக்கு நேற்று சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
பின், வேலுமணி கூறுகையில், ''மாணவியின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும்,'' என்றார்.'கஸ்டடி' எடுக்க திட்டம்பள்ளியில் படிக்கும் மேலும் சில மாணவியரிடமும் இதேபோன்று ஆசிரியர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சில மாணவியரும், பெற்றோரும், போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனால், சிறையில் அடைக்கப்பட்ட மிதுன் சக்கரவர்த்தியை, 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
உலகம்
பிரிட்டன் ராணிக்கு சுளுக்கு
லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 95, கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் இரவு முழுதும் மருத்துவமனையில் கழித்த அவர், மறுநாள் அரண்மனைக்கு திரும்பினார். டாக்டர்கள் அறிவுரைப்படி அரண்மனையில் ஓய்வு எடுத்து வருகிறார். போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு படுத்தும் நிகழ்ச்சி நேற்று லண்டனில் நடந்தது. இதில் ராணி எலிசபெத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதுகில் சுளுக்கு ஏற்பட்ட காரணத்தால் அவர் பங்கேற்கவில்லை
அல்ஜசீரா' பத்திரிகையாளர் கைது
கார்டூம்: ஆப்ரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி உள்ளது. இதனால், நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்த 'அல்ஜசீரா' செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளரான அல்முசாலமி அல் கப்பாஷி என்பவரை, சூடான் ராணுவ வீரர்கள் கைது செய்துள்ளனர்.
நேபாளத்தில் 4 இந்தியர்கள் பலி
காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்திற்கு சுற்றுப் பயணமாக சென்ற இந்தியர்கள் நான்கு பேர், இங்குள்ள ராவதாஹட் மாவட்டத்தில் நேற்று கார் ஒன்றில் பயணித்தனர். அப்போது அந்த கார், சாலையோரம் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், காரில் பயணித்த நான்கு இந்தியர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.