மக்கள் நீதி மய்ய துணை தலைவர் தங்கவேலு அறிக்கை: பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், மத்திய அரசு குறைத்து உள்ளது. ஆனால், இதுவரை தமிழக அரசு இவற்றின் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.
தமிழகத்தில் இப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து, இவ்வாறு நடந்திருந்தால், மாநிலமே ஸ்தம்பிக்கும் வகையில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தியிருப்பர். இது தான் அவர்களின் அரசியல்!
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: நிலவேம்பு கஷாயம் பாரம்பரிய சித்த மருந்து. இதை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. பருவ மழைக்காலம் முடியும் வரை, காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தி குறையும் வரை, தொடர்ந்து நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணியை, தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.
உண்மை தான். அனைத்து தரப்பினருக்கும் நிலவேம்பு கஷாயம் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். இது, இந்த சீதோஷ்ணத்திற்கு மிகவும் அவசியம்!
ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: திருவள்ளுவரை மதம் சார்ந்தவராக சித்தரித்து வருகின்றனர். திருவள்ளுவர், ராஜராஜ சோழன் ஆகியோர் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள். உள்நோக்கத்தோடு, வரலாற்றை திருத்தும் முயற்சி நடந்து வருகிறது. அது கண்டனத்திற்குரியது.
இப்போது ஆட்சியிலிருப்பவர்கள், சிலரை சமாதானப்படுத்த அவ்வாறு செய்தால், அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள், அதை மாற்றுவர். கடைசியில் உண்மையான வரலாறு மறைந்தே போகும். இது தான் தமிழகத்தின் சாபக்கேடு!
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி: தி.மு.க., அரசு இதுவரை செய்தது எல்லாமே பொய்யானது, போலியானது, பிரிவினைவாதத்தின் அடிப்படையிலானது. அதை நிரூபிக்கும் வகையில், 'நீட்' தேர்வில் பழங்குடியின மாணவர்கள், 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தி.மு.க.,வின் நீட் பற்றிய பிதட்டல்கள் போலி என, மாணவச் செல்வங்கள் நிரூபித்துள்ளனர்.
'நீட்' மட்டுமின்றி கல்வி தொடர்பான விவகாரங்களில், தி.மு.க.,வின் கருத்தை மாணவர்கள் கேட்பதில்லை; அவர்கள், தங்கள் வழி தனி வழி என சிறப்பாக செயல்படுகின்றனர்!
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள, வரும் 25ம் தேதி வரை அனுமதி அளித்து, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும்.
மாநிலத்தில் இன்னமும் மழை, வௌ்ளம் பல இடங்களில் வடியாத நிலையில், பயிர் காப்பீடு காலத்தை நீட்டிக்க வேண்டியது அவசியமே!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தில் அடுத்தடுத்து, பள்ளி குழந்தைகளுக்கு நிகழும், பாலியல் அத்துமீறல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். இதற்கான நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு உடனடியாக வகுப்பதுடன், அத்துமீறல்களை தடுப்பதில் முழு அக்கறை காட்ட வேண்டும்.
வேறு என்ன... குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகளில் வழங்கப்படுவது போன்ற தண்டனை வழங்கினால் எல்லாம் சரியாகி விடும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE