கோவை:பள்ளி மாணவ, மாணவியர் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்களை, தைரியமாக 1098 என்ற எண்ணில் புகார் செய்தால் போதும். அவர்கள் குறித்த பெயர், முகவரி உள்ளிட்ட எந்த அடையாளமும் வெளியே வராமல், கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குறிப்பாக, குறிப்பிட்ட மாணவியின் புகார்தான் நடவடிக்கை எடுக்க காரணம் என்பது கூட தெரியாமல் செய்ய முடியும் என்கின்றனர் சமூக பாதுகாப்புத்துறையினர்.
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், ஒரு சிலர் தவறான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்ற கேள்விதான் அது.இது ஓர் உளவியல் சிக்கல் என்றும், பாலியல் துன்புறுத்தல் ஒரு பிள்ளையின் ஒட்டுமொத்த நடத்தையையும் மாற்றிவிடும் என்றும் கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள். குறிப்பாக, அந்நியர்களால் ஏற்படும் சிக்கல்களை கூறிவிட முடியும்.
தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என நம்பிய சிலரால் ஏற்படும், இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் பெரிதளவில் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறதாம். பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் பெற்றோர் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, பெண் பிள்ளைகள் தாயிடம் அனைத்து அந்தரங்கங்களையும் பகிர்ந்து கொள்ளும், ஓர் நட்பான சூழலை ஆரம்பம் முதலே ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
இது குறித்து, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை அலுவலர் சுந்தரிடம் கேட்டபோது, ''பள்ளி மாணவர்கள் பள்ளி மட்டுமல்ல, வீடுகள், வெளியிடங்களில், டியூசன், வந்து செல்லும் வழித்தடங்கள் என தங்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருந்தால், 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கூறலாம்.புகார் தெரிவித்த மாணவி, மாணவர்களின் பெயர் எக்காரணம் கொண்டும் வெளியில் தெரிவிக்கப்படாது. பெயரை தெரிவிக்காமலேயே புகார் பதிவு செய்யலாம். புகார் பெறப்பட்டால், அதிகாரிகள் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
காவல்துறையினர் சீருடையின்றி வந்து, சம்மந்தப்பட்ட இடங்களில் விசாரிப்பார்கள். பிள்ளைகள் இதுபோன்ற விஷயங்களில் பயப்படாமல், புகார் அளிக்க வேண்டும்,'' என்றார். உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறியதாவது: பிற சிக்கல்களை காட்டிலும், பாலியல் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது. பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பிள்ளைகளின் நடத்தை திடீரென்று ஒட்டுமொத்தமாக மாறிவிடும்.பொதுவாகவே, இதுபோன்ற பிரச்னைகளை பெண் பிள்ளைகள் வெளியில் கூற தயங்குவர். அவ்வாறு கூறினாலும், அம்மா நம்மை தப்பாக நினைத்து விடுவார்களோ, நம்மீது பிறர் தப்பு சொல்லி விடுவார்களோ, நண்பர்கள் அசிங்கமாக பேசிவிடுவார்களோ என்ற எண்ணம் அவர்களை வெளியில் கூறவிடாமல் தடுத்துவிடும்.
பள்ளிகளில் உளவியல் நிபுணர்கள் அல்லது உளவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஒருவராவது இருக்க வேண்டியது கட்டாயம். பெற்றோரை காட்டிலும் நம்பிக்கைக்குரிய ஆசிரியர்களிடம் பிள்ளைகளால் இதுபோன்ற சிக்கல்களை கூற முடியும். குறிப்பாக, பெண் குழந்தைகள் அனைத்து விஷயங்களையும் தன்னிடம் பகிர்ந்துகொள்ளும், நட்பான சூழலை தாய்மார்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்,''என்றார்.
மாணவ மாணவியரும் அச்சத்தை துாக்கிப்போட வேண்டும். தங்கள் மனதை குடையும் பிரச்னைகளை, தைரியமாக வெளியே சொல்ல முன்வர வேண்டும்!புகார் தெரிவித்த மாணவி, மாணவர்களின் பெயர் எக்காரணம் கொண்டும் வெளியில் தெரிவிக்கப்படாது. பெயரை தெரிவிக்காமலேயே புகார் பதிவு செய்யலாம். புகார் பெறப்பட்டால், அதிகாரிகள் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.பள்ளி மாணவர்கள் பள்ளி மட்டுமல்ல, வீடுகள், வெளியிடங்களில், டியூசன், வந்து செல்லும் வழித்தடங்கள் என தங்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருந்தால், 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கூறலாம்.
எது பாலியல் சீண்டல்?
பாலியல் நோக்கில் தொடுவது மட்டுமின்றி பேசுவது, ஆபாச வீடியோக்கள் காண்பிப்பது, செய்கை, உடல் பாகங்களை காண்பிப்பது என அனைத்தும் பாலியல் சீண்டல்களே. ஒரு சிக்கல் பெரிதாகும் வரை விட்டுவிடாமல், ஆரம்பத்திலேயே புகார் அளிக்க மாணவர்கள் முன்வர வேண்டும். அதற்கு பள்ளிகளில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என, குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE