பல்லடம்:புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது, வெளிநாட்டு மரங்கள் வீழ்ந்து போக, நம் நாட்டு மரங்கள் வான் நோக்கி நின்றன.சிறப்புமிக்க நமது நாட்டு மரங்கள் பலவற்றை ஆண்டுதோறும் நாம் இழந்து வருகிறோம். இயற்கையின் அற்புதங்களை ஆவணப்படுத்தும் முயற்சியாக, பழமையான மரங்களை தேடி கண்டுபிடித்து, ஆராய்ந்து வருகிறது, பல்லடத்தை சேர்ந்த தாவரவியல் ஆர்வலர் மாணிக்கம் தலைமையிலான குழு. அவ்வாறு, கண்டுபிடிக்கப்பட்ட மரங்களில் ஒன்று 'கண்ணீர் மரம்'.தாவரவியல் ஆர்வலர் மாணிக்கம் கூறியதாவது:காரணம்பேட்டை அருகே சங்கோதிபாளையம் கிராமத்தில் உள்ள 'கண்ணீர் மரம்' பல்வேறு அற்புதங்களை கொண்டுள்ளது. கடும் வறட்சியையும் தாங்கி பசுமை மாறாமல் வளரக்கூடியது.கடினமான பாலிமர் செல்களுடன் காணப்படும் இம்மரம் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. மரத்தின் இலையில் இருந்து தயாரிக்கப்படும் புகை மூலம் 'ஹிஸ்டீரியா' என்ற மன நோய் குணப்படுத்தப்படுகிறது. மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கசப்பு கலந்த இனிப்பு சாறு நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.பழங்குடி இன மக்கள் புற்றுநோய்க்கு வலி நிவாரணியாக இம்மரத்தின் வேர்களை கசாயம் தயாரித்து பயன்படுத்துகின்றனர். இறை வழிபாட்டுக்கு தேடிவரும் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மன மாற்றம், இம்மரங்களை பாதுகாப்பதற்கு உறுதுணையாக உள்ளது.மழைத்துளிகள் இலைகளில் வடிந்து சொட்டு சொட்டாக கண்ணீர் துளிகள் போல் விழுவதால் இம்மரம் கண்ணீர் மரம் என அழைக்கப்படுகிறது. இது அதிக அளவு கார்பன்-டை-ஆக்ஸைடு சேமிக்கும் திறன் பெற்றது. பறவைகளின் சொர்க்கபுரியாகவும், சிறிய பாலுாட்டிகளின் இருப்பிடமாகவும், மயில் ஆடுகளின் கால்நடை தீவனமாகவும் இதன் பழங்கள் பயன்படுகின்றன.இது போன்ற எண்ணற்ற அரிய வகை மரங்கள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன. சிறப்புமிக்க இம்மரத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.இவ்வாறு அவர் கூறினார்.150 ஆண்டு பழமையானது
சங்கோதிபாளையம் கிராமத்தில் உள்ள கண்ணீர் மரம், 6 மீ., சுற்றளவுடன், 15 மீ., மேல் உயரத்துடன், 150 ஆண்டுகளுக்கு மேல் கடந்து உறுதியுடன் நிற்கிறது. மனிதர்களின் கவனம் படாததாலேயோ என்னவோ, தற்போதுள்ள தலைமுறையும் இம்மரத்தை காணமுடிகிறது. அருகிவரும் மரங்களின் பட்டியலில் சேர்த்து, இவற்றை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE