500 ஏக்கர் மரவள்ளி; 2000 ஏக்கர் நெற்பயிர்... சேதம் மரக்காணம் பகுதி விவசாயிகள் கவலை| Dinamalar

தமிழ்நாடு

500 ஏக்கர் மரவள்ளி; 2000 ஏக்கர் நெற்பயிர்... சேதம் மரக்காணம் பகுதி விவசாயிகள் கவலை

Added : நவ 15, 2021 | கருத்துகள் (1)
Share
மரக்காணம் : மரக்காணத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களுக்கு நிரந்தர தீர்வு காண, தரைப்பாலங்களுக்கு பதில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட, கடற்கரையை ஒட்டிய பகுதியும், தாழ்வான பகுதியுமான மரக்காணத்தில் கடந்த சிலதினங்களாக கன மழை பெய்து வந்தது. பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்,
 500 ஏக்கர் மரவள்ளி; 2000 ஏக்கர் நெற்பயிர்... சேதம்    மரக்காணம் பகுதி விவசாயிகள் கவலை

மரக்காணம் : மரக்காணத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களுக்கு நிரந்தர தீர்வு காண, தரைப்பாலங்களுக்கு பதில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட, கடற்கரையை ஒட்டிய பகுதியும், தாழ்வான பகுதியுமான மரக்காணத்தில் கடந்த சிலதினங்களாக கன மழை பெய்து வந்தது. பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அனுமந்தை - வண்டிப்பாளையம் இடையே கழுவெளியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வண்டிப்பாளையம், கோட்டிக்குப்பம், நடுக்குப்பம், கிளாப்பாக்கம், ஓமிப்பேர் உட்பட 10 கிராம மக்கள் மரக்காணம் வழியாக 10 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு புதுச்சேரி செல்கின்றனர். மேலும் திண்டிவனத்தில் இருந்து வண்டிப்பாளையம் வழியாக அனுமந்தை வந்த அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காணிமேடு - மண்டகப்பட்டு இடையே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் ஓடுவதால் அப்பகுதியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் மண்டகப்பட்டு, வெள்ளகொண்ட அகரம், புதுப்பேட்டை உள்ளிட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சூனாம்பேடு வழியாக 10 கி.மீ., துாரம் சுற்றி கொண்டு புதுச்சேரி செல்கின்றனர்.மரவள்ளி, நெற்பயிர்கள் பாதிப்புமரக்காணம் அடுத்த நடுக்குப்பம், கே.என்.பாளையம், கந்தாடு, புதுப்பாக்கம், திருக்கனுார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் இந்தாண்டு 1000 ஏக்கர் மரவள்ளி பயிர் செய்துள்ளனர். கன மழையால் இந்த பகுதியில் இருந்து ஏரி, குளம் நிரம்பி வழிந்ததால் மரவள்ளி பயிர்கள் நீரில் மூழ்கியது

.இதனால் 500 ஏக்கர் மரவள்ளி பயிர் முற்றிலும் சேதமடைந்தன. அரசு நஷ்டஈடு வழங்குமா என விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோன்று, அனுமந்தை, கூனிமேடு, கோணவாயன்குப்பம், கீழ்புத்துப்பட்டு, ராயநல்லுார், நகர், சிறுவாடி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6,000 ஏக்கர் நெற்பயிர் கடந்த மாதம் நடவு செய்தனர்.ஏரி பாசனம் மூலம் 4,000 ஏக்கர் நெற்பயிர் செய்துள்ளனர். தற்போது பெய்த கன மழையால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் 2000 ஏக்கர் நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது.

இதனால் இந்த பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.நிரந்தர தீர்வு தேவைகடந்த 30 ஆண்டுகளாக வண்டிப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் மழைக்காலத்தில் 3 மாதங்கள் வரை கழுவெளி வழியாகச் செல்ல முடியாமல் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. அதனால் மேம்பாலம் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதேபோல் ஓங்கூர் ஆற்று வெள்ளம் செல்லும் மண்டகப்பட்டில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், தரைப்பாலம் கட்டிக் கொடுத்ததால் மழையின் போது தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் தரைப்பாலம் கட்டியும் பயன் இல்லாமல் உள்ளது.எனவே, நிரந்தர தீர்வாக மேம்பாலங்கள் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மக்கள் பிரநிதிகளும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X