காஞ்சிபுரம் : அடையாறு ஆறு பாயும் பகுதிகளில், 17,168 ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டம் தோல்வி அடைந்ததால், கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, 2,500 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, முழு நிதியும் ஒதுக்கப்படாமல், கிடைத்த சொர்ப்ப நிதியில் முறையாக பணிகள் நடக்காததால், ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு தொடர்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த வாரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை நின்று மூன்று நாட்கள் ஆகியும், இன்னும் பல பகுதிகளில் வெ ள்ள நீர் வடியாததால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மழை பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றான அடையாறு ஆறு பாயும் பகுதிகளில், சில நாட்களாக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகில் உள்ள ஆதனுாரில் துவங்கும் அடையாறு, செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் பாய்ந்து, மணப்பாக்கம், நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர்.,நகர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக, பட்டினப்பாக்கம் வரை, 42 கி.மீ., பயணித்து கடலில் கலக்கிறது.அடையாறு செல்லும் பகுதிகளில், 2015ம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு, ஆதனுார், முடிச்சூர் ஆகிய பகுதிகளில், 'கட் அண்ட் கவர்' எனப்படும், தரைக்கு கீழ் மிகப்பெரிய கால்வாய் அமைத்து, மழை நீர் வடிகால் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையில் ஆதனுார் பகுதியில் மழை நீர் வெளியேறுகிறது. ஆனால் வரதராஜபுரம், மாங்காடு, குன்றத்துார் என, சென்னை புறநகரில் உள்ள அனைத்து பகுதிகளும், மீண்டும் பாதிக்கப்படுகிறது. அடையாறு பாயும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது.
அதன்படி, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நான்கு தவணையில் திட்டமிடப்பட்டது. ஆனால், முதல் தவணையே சரிவர அகற்றப்படாததால், மீதமுள்ள மூன்று தவணை பணிகள் அப்படியே உள்ளன. இதனால், அத்திட்டம் தோல்வி அடைந்துள்ளது. அடையாறு பாயும் பகுதிகளில், 17,168 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற பல திட்டங்கள் வகுத்தும் அனைத்தும் தோல்வி அடைந்ததால், ஆக்கிரமிப்பு பகுதிகள் மட்டுமின்றி, அடையாறு ஆறு பாயும் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது. இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக, ஒருங்கிணைந்த வெள்ள தடுப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.அதன்படி, பாலாறு, அடையாறு, கோவளம் ஆகிய மூன்று நீர்நிலை வடிகால் பகுதிகளில், மழை நீர் வெளியேறவும், மழை நீரை முறையாக சேமிக்கவும் உட்கட்டமைப்பு ஏற்படுத்த, 2,500 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதில், வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே அரசு சார்பில் வழங்கப்பட்டது. குறிப்பாக, சொல்லப் போனால் அடையாறு வடிநிலப்பகுதியில், வெள்ளத்தடுப்பு பணியை மேற்கொள்ள, 680 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், 78 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதால், அந்த நிதியை பயன்படுத்தி ஓரளவு பணிகள் செய்து முடிக்கப்பட்டன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையின் புறநகர் பகுதிகளில் முழுமையாக வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான, 2,500 கோடி ரூபாயை பெற, டெல்லியில் உள்ள நிதி ஆயோக் துறையின், திட்ட கமிஷன் வரை இந்த அறிக்கை சென்றது.
ஆனால், நிதி கிடைக்கவில்லை. தாம்பரம் அருகில் உள்ள ஆரம்பாக்கம் மற்றும் ஒரத்துார் ஏரியை இணைத்து, 55 கோடி ரூபாயில் புதிய நீர்த்தேக்கம், 2018ல் உருவாக்க திட்டமிடப்பட்டது.ஆனால், அங்கு நில எடுப்பு பணி அப்படியே உள்ளது. 70 ஏக்கர் தரிசு நிலம் ஒரத்துார் அருகே எடுக்க வேண்டியுள்ளது. அதற்கு பதிலாக, அருகில் உள்ள 70 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு தரப்பட உள்ளது. ஆனால், நில எடுப்பு பணிக்கு சில துறைகள் ஒத்துழைப்பு தராததால், ஒரத்துார் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மண்ணிவாக்கம் ஏரி, மணிமங்கலம் ஏரிகளில் ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு, மின்சார இணைப்பு, குடிநீர் வசதி, சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்ட கூடாது.அங்குள்ள ஆக்கிரமிப்புகளின் காரணமாகவே, சென்னையில் உள்ள முறையான குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.'கூகுள் எர்த்' தரவுகளால் அதிர்ச்சிஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது, சென்னை மற்றும் புறநகரில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளே இதற்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். உதாரணமாக, சென்னை நன்மங்கலம், ரெட்டேரி, கொரட்டூர் ஏரிகளை, 'கூகுள் எர்த்' மூலம் பார்க்கும் போது, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கும், தற்போதுள்ள நிலைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. ஏரிகளின் நீர்நிலைப்பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் முளைத்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, அவற்றிற்கு கட்டுமான அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE