புதுடில்லி: சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக பதவி நீட்டிப்பு செய்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக் காலம் தற்போது 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் திருத்தச் சட்டம் (2021) என்ற பெயரில் மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்., தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்ததாவது: மோடி அரசு தனது விஸ்வாசிகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவற்றைச் சட்டவிரோதமாக அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கவிழ்க்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கப் பிரிவும், சிபிஐ அமைப்பும் சோதனை நடத்துவதை விதியாக வைத்துள்ளன.
இந்த இரு விஸ்வாசிகளுக்கும் அதிகாரம் அளித்து, 5 ஆண்டுகள் பதவிக் காலம் அளித்துள்ளது மத்திய அரசு. இந்தச் செயல் எதிர்ப்பவர்களின் குரலை அடக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இயல்பாகவே ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும். இப்போது நேரடியாகவே 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE