கோவை :தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. கோர்ட் உத்தரவுப்படி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் 'சிசிடிவி' பொருத்துவது தொடர்பாக, தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில், நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது.
இப்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணி நடக்கிறது. அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பரீட்சார்த்த முறையில், ஒவ்வொரு இயந்திரத்திலும், தலா, 1,000 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டிருக்கின்றன. அடுத்த வாரம், வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இம்மாத இறுதியில், உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியிட வாய்ப்புள்ளதாக, தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டம், மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் 17ம் தேதி (நாளை) நடக்கிறது. புகைப்படத்துடன் கூடிய வார்டு வாரியான வாக்காளர் பட்டியல், காலியாக உள்ள இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்தல், மண்டல அதிகாரி நியமித்தல், ஓட்டு எண்ணிக்கை மையத்தை இறுதி செய்தல், கோர்ட் உத்தரவுப்படி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் 'சிசிடிவி' பொருத்துவது, பதற்றமான ஓட்டுச்சாவடிகளை அடையாளப்படுத்துல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
மேலும், சப்-கலெக்டர், உதவி கலெக்டர், இணை இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரிகளை, ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு 'அப்சர்வர்'களாக நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE