அவிநாசி: ''இலவச திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்,'' என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இவர் கூறியதாவது:சம்பா நடவு பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளன. சில பயிர்களுக்கு, ஒட்டு மொத்த வருவாய் கிராமம் முழுக்க சேதமடைந்தால் தான் பயிர்க்காப்பீடு வழங்கப்படுகிறது; இத்திட்டத்தை, தனி நபர் காப்பீடு அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது இலவசம், மானியம், தள்ளுபடி போன்றவை தான். அதன் வாயிலாக, லஞ்சம், முறைகேடு தான் அதிகரிக்கிறது. நீர்பாசன அரசாணை, விதிமுறைப்படி, பழைய பவானி ஆற்றுநீர் பாசனங்களில் இருந்து, ஆண்டுக்கு, 8.14 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட வேண்டும்; ஆனால், 24 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், வழித்தடத்தில் உள்ள சாய, தோல் ஆலைகள் தான் பெருமளவில் பயன்படுகின்றன. முறையற்ற நீர் நிர்வாகத்தால், சாகுபடி இழப்பு ஏற்படுகிறது.பாண்டியாறு -- மாயாறு திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, தமிழகத்துக்கு, 14 டி.எம்.சி.. தண்ணீரை பெற முடியும். அத்திக்கடவு -- அவிநாசி திட்டப்பணியில் வேகம் குறைந்துள்ளது. இதுபோன்ற புதிய திட்டங்களின் நீர் நிர்வாகத்தை முறைப்படி மேற்கொள்ள வேண்டும்.சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட, ஆக்கிரமிப்புதான் காரணம். 1947க்கு முன், தமிழகத்தில், 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்தன. அவற்றில், 7,000ம் நீர்நிலைகள், தற்போது, ஆக்கிரமிப்பால் மாயமாகியுள்ளன; நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும்.வரும், ஜன., 21ம் தேதி, மாநிலத்தில் கள் இறக்கி, வர்த்தகம் செய்ய உள்ளோம். காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால், கள், தடை செய்யப்பட்ட பொருள் என்பதை, அரசியலமைப்பு சட்டப்படி நிரூபிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE