நடிகர் சூர்யாவுக்கு எதிராக அணி திரளும் அமைப்புகள்!

ஜெய் பீம் திரைப்படம், சர்ச்சைகளில் சிக்கி இருப்பது தெரிந்த விஷயம். வன்னியர் சமுதாயத்தை அப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக, அச்சமுதாய அமைப்புகள் போர்க்கொடி துாக்கி உள்ளன.
அப்படம் தொடர்பாக, நடிகர் சூர்யாவுக்கு, ஒன்பது கேள்விகளை முன்வைத்து, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, நீண்ட கடிதம் எழுதினார். 'கொலை செய்த போலீஸ் அதிகாரி அந்தோணிசாமி பெயரை ஏன் சினிமாவில் வைக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்' என, சூர்யாவுக்கு கெடு விதித்தார்.
சூர்யாவும், அன்புமணிக்கு எழுதிய பதில் கடிதத்தில், 'பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம்' என, அன்புமணியிடம் கேட்டுக்கொண்டார். இருவரின் அறிக்கை மோதல் தீவிரமாகி உள்ளது. 'இருவரிடம் சமரச பேச்சு நடத்த முன் வரவேண்டும்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால், சீமான் ஆலோசனையை சூர்யா பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, வன்னியர் சமுதாயத்தில் பிரிந்து கிடந்த அனைத்து அமைப்புகளும், அன்புமணிக்கு ஆதரவு அளித்துள்ளன; சூர்யாவுக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன!
தலைமை தேர்தல் அதிகாரி இப்படி இருந்தால் எப்படி?

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இம்மாதம் 1ல் துவங்கி, 30 வரை நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் மேற்கொள்ள, நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி முதல் இரண்டு நாட்கள் முகாம், 13, 14ல் நடந்தது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் கன மழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதை அகற்றும் பணியில், அனைத்து துறை பணியாளர்களும் ஈடுபட்டனர்.
எனவே, வாக்காளர் சிறப்பு முகாமை ஒத்தி வைக்கும்படி, சென்னை மாநகராட்சி சார்பில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர்; அதற்கு பதில் இல்லை. கடந்த 12ல் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை. அதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகமே, முகாம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி எப்போதும் தொடர்புக்கு அப்பால் இருந்தால், எப்படி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முறையாக நடக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்!
பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., தொகுதிக்கு ஒரு வார்டு!

தமிழகத்தில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை, அரசியல் கட்சிகளும் துவக்கி உள்ளன.
அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ., தரப்பில், 'சென்னை மாநகராட்சியில் எத்தனை வார்டுகள் ஒதுக்குவீர்கள்' என, அ.தி.மு.க., தரப்பிடம் கேட்டுள்ளனர். அவர்கள், சட்டசபை தொகுதிக்கு ஒரு வார்டு மட்டும் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு, பா.ஜ., தரப்பில் பேசியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பா.ஜ., நிர்வாகிகளில் சிலர், குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, தனித்து போட்டியிடுவோம் எனக் கூறி உள்ளனர்.
ஆனால், பெரும்பாலானோர் அதை மறுத்து, கூடுதலாக ஒரு சில வார்டுகளை பெற்று, கூட்டணியிலேயே போட்டியிடுவோம் எனக் கூறி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE