சென்னை-சென்னையில் 'அம்மா' உணவகங்களில் வழங்கப்பட்ட இலவச உணவு, நேற்று முதல் நிறுத்தப்பட்டது. உணவு சாப்பிட வந்தோரிடம் கட்டணம் வசூலித்து, உணவு விற்பனை செய்யப்பட்டது.சென்னையில் தொடர் கன மழையால், 540 இடங்களில் மழை நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக, அம்மா உணவகங்களில் நவம்பர் 10ம் தேதி முதல், மூன்று வேளை உணவு, மழை முடியும் வரை இலவசமாக வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதன்படி, 403 அம்மா உணவகங்களில்,நேற்று முன்தினம் வரை, ஐந்து நாட்கள் மூன்று வேளை உணவு, இலவசமாக வழங்கப்பட்டது. இதில், 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 பேர் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக, 13 லட்சத்து 29 ஆயிரத்து 135 இட்லியும், 5 லட்சத்து 69 ஆயிரத்து 422 சப்பாத்தியும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.மழை நின்றுள்ளதாலும், பெரும்பாலான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்துள்ளதாலும், அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இட்லி 1 ரூபாய்; பொங்கல், சாம்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை சாதம் ஆகியவை தலா 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்; இரண்டு சப்பாத்தி 3 ரூபாய் என்ற விலையில், வழக்கம் போல விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இலவசமாக வழங்கப்பட்ட உணவுகள் விபரம்:உணவு விபரம் - வழங்கப்பட்டது (எண்ணிக்கையில்)இட்லி - 13,29,135பொங்கல் - 1,48,287சாம்பார் சாதம் - 1,56,764கறிவேப்பிலை சாதம் - 54,628லெமன் சாதம் - 85,111தயிர் சாதம் - 51,272சப்பாத்தி - 5,69,422
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE