பீஜிங் : பருவ நிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ளும் வகையில், நிலக்கரி பயன்பாடு குறித்த நம் நாட்டின் கருத்துக்கு அண்டை நாடான சீனா ஆதரவு அளித்துள்ளது.
ஐ.நா.,வின் பருவ நிலை மாறுபாடு தொடர்பான, சி.ஓ.பி., - 26 மாநாடு, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்தது. இதில் இந்தியா வலியுறுத்தியதன் அடிப்படையில், 'நிலக்கரி பயன்பாட்டை திடீரென முற்றிலுமாக நிறுத்தாமல் படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்' என, ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியான் நேற்று கூறியதாவது:பருவ நிலை மாறுபாடு பிரச்னையில் வளர்ந்த நாடுகள் முதலில் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்த வேண்டும். மாசில்லா எரிபொருளுக்கு மாறுவதற்கு, வளர்ந்து வரும் நாடுகளுக்கும் அவை பொருளாதார ரீதியிலும் உதவ வேண்டும்.
தற்போது உள்ள எரிபொருள்கள் ஆதாரம் மற்றும் தேவையை ஈடு செய்யும் வகையில், மாசில்லா எரிபொருளுக்கு மாறுவதற்கு வளர்ந்து வரும் நாடுகளுக்கு அவகாசம், வாய்ப்பு தர வேண்டும். இதைத் தான் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அதை நாங்களும் ஆமோதிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE