பொறாமை, எரிச்சல் இல்லாமல் இருக்க என்ன வழி?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

பொறாமை, எரிச்சல் இல்லாமல் இருக்க என்ன வழி?

Added : நவ 16, 2021
பொறாமை, பேராசை, எரிச்சல், கோபம் இவையெல்லாம் மனிதர்களுக்கு ஏன் வருகிறது? இந்த உணர்ச்சிகளை எல்லாம் உருவாக்காமல் இருப்பது ஒருவருக்கு சாத்தியமா? இந்த உணர்வுகள் நம்மை பீடிக்காமல் ஆனந்தமான நிலையில் வாழ்வை அனுபவிப்பதற்கு ஒருவர் பெறவேண்டிய புரிதல் என்ன என்பதையெல்லாம் ஆராய்கிறது சத்குருவின் இந்த உரை!சத்குரு:பொறாமை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். பொறாமை என்றால்
பொறாமை, எரிச்சல் இல்லாமல் இருக்க என்ன வழி?

பொறாமை, பேராசை, எரிச்சல், கோபம் இவையெல்லாம் மனிதர்களுக்கு ஏன் வருகிறது? இந்த உணர்ச்சிகளை எல்லாம் உருவாக்காமல் இருப்பது ஒருவருக்கு சாத்தியமா? இந்த உணர்வுகள் நம்மை பீடிக்காமல் ஆனந்தமான நிலையில் வாழ்வை அனுபவிப்பதற்கு ஒருவர் பெறவேண்டிய புரிதல் என்ன என்பதையெல்லாம் ஆராய்கிறது சத்குருவின் இந்த உரை!

சத்குரு:


பொறாமை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். பொறாமை என்றால் உங்களுக்குப் பிடித்த ஆனால் உங்களிடம் இல்லாத ஒரு பொருள் மற்றவரிடம் இருக்கும்போது ஏற்படும் உணர்வு. உங்களிடம் இருப்பதைவிட அதிகமாக மற்றொருவரிடம் இருக்கும்போது ஏற்படுவது அல்லது உங்களுக்குள் இருக்கும் ஒருவித குறைபாட்டினால், இன்னொருவரைப் பார்த்தால் தன்னைப் பற்றிய போதாமை உணர்வு மேலோங்குவதுதான் எரிச்சல் அல்லது பொறாமை.

நீங்கள் ஆனந்தமான உணர்வில் இருந்தால் யாரையும் பார்த்து பொறாமைப்பட மாட்டீர்கள். உங்களை விட இன்னொருவரிடம் ஏதோ ஒன்று அதிகம் உள்ளது போலவும் நீங்கள் ஏதோ ஒருவிதத்தில் குறைந்தவர் போலவும் உணர்வதால்தான் இந்த பொறாமை உணர்வு வருகிறது. உங்களைவிட உயர்ந்தவர் ஒருவர் இருக்கும் இடத்தில்தான் உங்களிடம் பொறாமை இருக்கும். இங்கு நீங்கள் மட்டும் இருந்தால் உங்களுக்கு பொறாமை உணர்வு இருக்காது.
நல்ல குணம் பொருந்தியவராக இருக்க வேண்டும் என்ற தூண்டுதல் இருப்பதால் இப்புவியில் சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் என்ற தூண்டுதல் எப்போதும் இல்லை. நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்றே எப்போதும் இந்த சமூகம் ஊக்குவிக்கிறது. ஆனால் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தம்மை நல்லவன் என்று நம்பிக்கொண்டிருப்பவருடன் வாழ்வது மிகவும் கடினம். அவர் நல்லவர்தான், ஆனால் கடினமான மனநிலையுடன் இருப்பார். நல்லகுணம் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் பரிதாபம், அனுதாபம் போன்ற தேவையற்ற விஷயங்களை மனிதனிடம் ஊக்குவிக்கின்றது. உங்களால் முடிந்தால் அடுத்தவருக்கு அன்பு ஒன்றையே அர்ப்பணியுங்கள். அப்படி முடியாவிட்டால் அடுத்தவரை சிறிது கண்ணியத்துடனாவது நடத்துங்கள். அதுவே மிகச் சிறந்தது.

இந்த ஒரு மணி நேரமாக நீங்கள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், நான் உங்கள் மீது மிகவும் அனுதாபத்துடன் இருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியவந்தால், அதை விரும்புவீர்களா? ஒருவர் எத்தனைதான் ஏழையாக இருந்தாலும், எத்தனைதான் ஆதரவற்றவராக இருந்தாலும், அவர் இதை ஏற்றுக்கொள்வாரா? ஏற்றுக்கொள்ள மாட்டார். ஒருவன் பசியில் மற்றவரிடம் பிச்சை எடுப்பது வேறு விஷயம். நமது மனத்தில் பரிதாபம், அனுதாபம் போன்ற உணர்வுகளுக்கு இடம் கொடுத்திருப்பதால் தான் அதன் எதிர்மறை குணங்களான எரிச்சலும் பொறாமையும் கூடவே நிகழ்கிறது. அந்த ஒன்று இல்லையென்றால் இதுவும் இல்லாமல் இருக்கும். இந்த எரிச்சல் மற்றும் பொறாமை இருப்பது தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய நிலையல்ல. எவன் ஒருவன் மகிழ்ச்சி அற்ற நிலையை தனக்குள் உருவாக்குகிறானோ அவன் அறிவற்ற மனிதனாகவே இருப்பான்.

இந்த உலகில் உண்மையில் விவேகம்தான் தேவைப்படுகிறது. விவேகமுள்ளவர்கள் தான் தேவை, நல்ல மனிதர்கள் அல்ல. ஆனால் இந்த சமுதாயத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து, நல்லவனாக இரு என்றே சொல்லி வளர்க்கிறோம். விவேகத்துடன் இரு என்று அவனுக்கு சொல்லித் தருவதில்லை. எப்பொழுதும் நல்லதைப் பற்றி பேசுகிறோம். அப்படியென்றால் அடிப்படையில் படைத்தவன் ஏதோ தவறு செய்திருப்பதைப் போலவும் நாம் அதை சரி செய்ய முனைவதாகவும் நம்புகிறோம். படைத்தவன் தவறு செய்திருந்தால், நிச்சயமாக உங்களால் சரி செய்ய முடியாது. அந்த அளவு அறிவாவது உங்களுக்கு இருக்க வேண்டும். படைத்தவன் குழப்பம் செய்திருந்தால், நீங்களும் அந்த குழப்பத்திலிருந்துதான் வந்தவர் என்பதால் உங்களால் ஒன்றும் சரி செய்ய முடியாது.

எதோ ஒன்று சரியாக வேலை செய்யவில்லை என்றால், நாம் சரியான செயல் செய்யவில்லை என்ற புரிதல் வேண்டும், அவ்வளவுதான்! மக்கள் இந்தளவுக்கு புரிந்துகொண்டால், அவர்கள் வாழ்க்கையில் பல விஷயங்கள் எளிதாக நடக்கும். என் வாழ்வில் ஏதோ சரியாக நடக்கவில்லை என்றால் நிச்சயமாக நான் சரியான செயல் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையைப் புரிந்து உள்வாங்கிக் கொண்டால், எல்லோருக்கும் தேவையான வழிகள் பிறக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X