கரூர்: 'பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மருத்துவ கல்லூரி ஆர்.எம்.ஓ.,விடம், 'ரவுடி மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க' என்ற கரூர் கலெக்டர் பிரபுசங்கரின் காட்டமான பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. அப்போது, வெங்கமேட்டை சேர்ந்த பரிதா பேகம் என்பவர், 'தன், 6 வயது மகன் அஹமதுல்லாவுக்கு, இதயம் இடம் மாறி வலது புறம் உள்ளது. இதற்கு மேல் சிகிச்சை செய்ய பொருளாதார வசதி இல்லாததால், அரசு உதவி செய்ய வேண்டும்' என, மனு அளித்தார். அப்போது, கூட்டத்திற்கு வந்த அரசு மருத்துவ கல்லூரி ஆர்.எம்.ஓ., குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை பெற்ற அவர், பரிதா பேகத்துக்கு சரியான பதில் தரவில்லை என, கூறப்படுகிறது. இதுகுறித்து, கலெக்டர் பிரபு சங்கரிடம் சென்று பரிதா பேகம் முறையிட்டார். உடனடியாக ஆர்.எம்.ஓ., குமாரை அழைத்து விசாரித்தார். கலெக்டரிடமும் அவர் அலட்சியமாக பதிலளித்தார். டென்ஷனான கலெக்டர் பிரபு சங்கர், 'அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு முறையாக பதிலளிக்க வேண்டும். என்னிடமே, இப்படி பேசும் போது, நோயாளிகளிடம் எப்படி பேசுவீங்க என தெரியுது. ஏற்கனவே, இது சம்பந்தமாக, உங்கள் டீன் கிட்டே பேசி இருக்கிறேன். ஆனால், நான் என்ன சொல்ல வரேன் என்கிறத கேட்கமாட்டீங்கிறீங்க இப்படி, ரவுடி மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க. முறையாக பதில் சொல்லமுடியலன்னா, கூட்டத்திற்கு வராதீங்க' என, ஆர்.எம்.ஓ., குமாரிடம் காட்டமாக பேசினார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.