என்ன செய்ய போகிறார் முதல்வர்?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

என்ன செய்ய போகிறார் முதல்வர்?

Added : நவ 16, 2021
Share
என்ன செய்ய போகிறார் முதல்வர்?ஆர்.பாலாஜி, பாபநாசம், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்' என்றெல்லாம் புளுகி, மக்களை மூளைச்சலவை செய்து ஆட்சியில் அமர்ந்தோர், சொல்லாததையும் செய்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, மழை


என்ன செய்ய போகிறார் முதல்வர்?ஆர்.பாலாஜி, பாபநாசம், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்' என்றெல்லாம் புளுகி, மக்களை மூளைச்சலவை செய்து ஆட்சியில் அமர்ந்தோர், சொல்லாததையும் செய்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, 2,000 ரூபாய் வழங்க ஆணையிட்டார். சென்னை எம்.ஜி.ஆர்., நகரில் அந்த நிவாரணத் தொகையை வாங்க முண்டியடித்தோரில், 42 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.அடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்த போது, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அறிக்கை விட்டார்.இப்போது ஸ்டாலின் முதல்வராக உள்ளார். தற்போது பெய்த வரலாறு காணாத கன மழையில், தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், 2,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்கிறார், முன்னாள் முதல்வர் பழனிசாமி. 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறி இருக்கிறார்.காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - பா.ஜ., - வி.சி., போன்ற இன்ன பிற கட்சிகள், மக்களுக்கு அரசு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஆலோசித்து வருகின்றன.முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்ய போகிறார்?எதிர்க்கட்சியாக இருந்த போது கோரிய, 5,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப் போகிறாரா? இல்லை, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோரியுள்ளது போல, 2,000 ரூபாய் வழங்கப் போகிறாரா?
அந்த நிவாரணத் தொகையை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கப் போகிறாரா; இல்லை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கப் போகிறாரா?அதிலும் ஐந்து வித குடும்ப அட்டைகளில், அரிசி கார்டு வைத்திருப்போருக்கு மட்டும் வழங்கப் போகிறாரா? சொன்னது, சொல்லாதது என்ன செய்ய போகிறார் முதல்வர் ஸ்டாலின்?


வாரிசுக்காக வழி விடாதீர்!எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., முக்கிய பதவிகளில் வயதானோரை அமர்த்துவதில்லை என்ற முடிவு சரியானதே!முதுமை காரணமாக, உடல் ரீதியாக சில பிரச்னைகள் எழும். ஞாபக மறதி, செவித் திறன் இழப்பு, பார்வைக் குறைபாடு, பேச்சில் தடுமாற்றம் போன்றவை ஏற்படும்; இது இயற்கை.எனவே, 75 வயதுக்கு மேற்பட்ட நபரை, கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அமர்த்துவதில்லை என்ற பா.ஜ.,வின் முடிவு வரவேற்கத்தக்கது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முடிவை எடுக்க வேண்டும்.முதியோரின் அனுபவங்களை அறிந்து, களத்தில் இறங்கி செயலாற்ற, இளைஞர்களே அவசியம். அரசியலில் ஈடுபட இளைஞர்கள் முன்வருவது, நாட்டின் நலனுக்கு உகந்தது.தி.மு.க.,வில் இருக்கும் மூத்த தலைவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் போன்றோருக்கு ஓய்வு கொடுக்கலாம். அவரை போன்றோர் பலர் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் ஓய்வின்றி உழைக்க வேண்டிய அவசியமில்லை.இந்த தள்ளாத வயதிலும், முல்லை பெரியாறு அணையைப் பார்வையிடச் செல்கிறார். அப்போது அவர், 'என் 80வது வயதில் இங்கு வந்துள்ளேன்' என்று வருத்தத்துடன் கூறுகிறார்.மேலும் அவர், '10 ஆண்டுகளில் ஒருமுறை கூட அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பன்னீர்செல்வம், முல்லை பெரியாறு அணைக்கு செல்லவில்லை' என்றார்.அதற்கு விளக்கம் அளித்த பன்னீர்செல்வம், 14 முறை முல்லை பெரியாறு அணைக்கு சென்று வந்துள்ளதாக தெரிவித்தார்.இந்த பதிலை எதிர்பார்க்காத துரைமுருகன், 'அணையின் நீரை தொட்டு விட்டு வந்திருக்கிறாரே தவிர, அணையை கண்டு விட்டு வரவில்லை' என கூறத் துவங்கியுள்ளார்.
இது துரைமுருகனின் நிலையை விளக்குகிறது.தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், கட்சிக்காக பல்லாண்டுகள் உழைத்த, பதவி சுகத்தை அனுபவித்த நபர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். கட்சிக்காக உழைத்து, எந்த பதவியிலும் அமராமல் இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
வயது முதிர்ந்த அரசியல் தலைவர்கள், தாங்களே முன்வந்து இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். முக்கியக் குறிப்பு என்னவெனில், அந்த பதவியை தங்கள் வாரிசுக்கு கொடுக்க கூடாது!


வரலாற்றை திரிக்காதீர்!கோ. ரெஜிக்குட்டன், எறும்புக்காடு, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில விஷயங்கள் கசப்பாக இருந்தாலும், உண்மையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில், 18ம் நுாற்றாண்டில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய தேவசகாயம் பிள்ளைக்கு, ஐரோப்பிய நாடான இத்தாலியின் வாட்டிகன் தேவாலயம் புனிதர் பட்டம் வழங்க உள்ளது.திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிடம் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் நீலகண்ட பிள்ளை. கிறிஸ்துவத்தின் கொள்கையை ஏற்று, அவர் மதம் மாறினார்.நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில், பங்குத் தந்தை பரஞ்ஜோதி நாதர் என்ற பாப் தீஸ்க் புட்டாரி, நீலகண்ட பிள்ளைக்கு ஞானஸ்நானம் செய்து, 'லாசரஸ்' என பெயர் சூட்டினார்.'லாசரஸ்' தமிழில் தேவசகாயம் என்றழைக்கப்பட்டார். கணக்குப்பிள்ளையாக இருந்த இந்த தேவசகாயம் மீது பல முறை ஊழல், மதம் சார்ந்த பாரபட்சம் முதலிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.கடந்த 1749 பிப்ரவரி 23ல் தேவசகாயம் கைது செய்யப்பட்டார். உதயகிரிக்கோட்டையில் விசாரணை நடந்தது. குற்றம் ஊர்ஜிதமானதால், ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலைக்கு அழைத்து செல்லப்பட்டு, 1752 ஜனவரி 14ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.இன்னும் இதை விரிவாக அலசினால், திடுக்கிடும் பல உண்மைகள் தெரியவரும்.தேவசகாயத்தை புனிதராக காட்டும் முயற்சியை, 20 ஆண்டுகளுக்கு முன்னரே சில வரலாற்று ஆசிரியர்கள் தவறு என கூறியுள்ளனர்.ஏற்கனவே கிறிஸ்துவருக்கும், ஹிந்துக்களுக்கும் குமரி மாவட்டத்தில் பனிப் போர் நடந்து வரும் இந்த வேளையில், இது போல் வரலாற்றை தவறாக திரித்து பிரச்னையை உருவாக்க வேண்டாம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X