பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகள் ஆய்வு

Added : நவ 16, 2021
Share
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் என மொத்தம், 36 பள்ளிகள் உள்ளன. கொரோனா ஊரடங்குக்கு பின், நவ., 1ம் தேதி முதல் பள்ளிகள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் என மொத்தம், 36 பள்ளிகள் உள்ளன. கொரோனா ஊரடங்குக்கு பின், நவ., 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன.இந்நிலையில், பருவமழை பெய்வதால் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாளுக்கு, 10 பள்ளிகள் வீதம் என, சுழற்சி அடிப்படையில், மூன்று நாளுக்கு ஒரு முறை பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதால், அனைத்து பள்ளிகளிலும் டெங்கு தடுப்பு மற்றும் கொசு பெருக்கம் தவிர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.டெங்கு தடுப்பு பணியாளர்கள், பரப்புரையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று, கொசு பெருக்கம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, 'அபேட்' மருந்து ஊற்றுகின்றனர்.மேலும், மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி ஏற்பட வாய்ப்புள்ள தேவையற்ற கலன்களை அகற்றுதல், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள் ஆகியவை பள்ளி வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு டெங்கு தடுப்பு குறித்தும், காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளி மாணவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க ஆசிரியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வகை வைரஸ் காய்ச்சல், டெங்கு, கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், அந்த மாணவரை தனிமைப்படுத்தி, அந்த மாணவருக்கு விடுப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பள்ளி வளாகத்தில் வாரம் இருமுறை ஆய்வு செய்து, மழைநீர் மற்றும் நன்னீர் தேங்காத வகையில் பராமரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மழை கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள், ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டன.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X