பருச்:குஜராத்தில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களை முஸ்லிமாக மத மாற்றம் செய்ததாக, லண்டனில் வசிப்பவர் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பருச் மாவட்டம் அமோத் தாலுகா கன்காரியா கிராமத்தைச் சேர்ந்தவர் பெப்டவாலா ஹாஜி அப்துல்.தற்போது பிரிட்டன் தலைநகரான லண்டனில் வசிக்கும் இவர், தன் கிராமத்தில் உள்ள ஹிந்து பழங்குடியினரை மத மாற்றம் செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டி அளித்து உள்ளார்.
அதை பயன்படுத்தி இங்குள்ள சிலர், கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின ஏழை ஹிந்துக்களுக்கு நேரடியாக பணம் வழங்கியதுடன், அவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளையும் செய்துள்ளனர்.இதன் வாயிலாக பழங்குடியின மக்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.இதன்பின் 37 குடும்பங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை முஸ்லிமாக மத மாற்றம் செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக லண்டனில் வசிக்கும் ஹாஜி அப்துல் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.