பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி சுகாதாரப்பிரிவில், சுகாதார ஆய்வாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், சுகாதாரப்பணிகளில் தொய்வு ஏற்படும் சூழல் உள்ளது. இதேபோன்று நகரமைப்பு ஆய்வாளர் பணியிடமும் கடந்த, இரண்டு மாதங்களாக காலியாக உள்ளது. இதனால், பணிச்சுமை அதிகரித்து அதிகாரிகள் திணறுகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள, 73 நிரந்தர துாய்மை பணியாளர்கள், 267 ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். குப்பை எடுத்துச் செல்ல, 12 வண்டிகள் பயன்படுத்துகின்றனர்.இவர்களது பணிகளை கண்காணிக்க, எட்டு மேற்பார்வையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து சுகாதாரப்பணிகள் கவனிக்க, 10 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.மொத்தம், 10 டிவிஷனாக பிரிக்கப்பட்டு, ஒரு சுகாதார ஆய்வாளருக்கு, 3 - 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டன.துாய்மை பணிகளை கண்காணிப்பு செய்து நகர துாய்மையாக இருக்க அரசு சுகாதார ஆய்வாளர்களை நியமித்தது.இதன் வாயிலாக பணிகளை எளிதாக கண்காணித்து, நடவடிக்கை மேற்கொள்ள முடிந்தது. பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் பணி தாமதம் ஆகாமல் வழங்க முடிந்தது.இந்நிலையில், சுகாதார ஆய்வாளர்கள் பணியிடம் காலியானால், அவர்களுக்கு மாற்றாக புதிய ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவதில்லை.தற்போது பணியில் உள்ள ஐந்து சுகாதார ஆய்வாளர்களுக்கு தலா, இரண்டு டிவிஷன் வீதம் ஒதுக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.பணிச்சுமைபொள்ளாச்சி நகராட்சி வளர்ந்து வரும் நகரமாக உள்ளதால், உரமாக்கல் மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. குப்பை தரம் பிரித்து உரம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இவை முறையாக நடக்கிறதா என சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும்.டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு, 86 தற்காலி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பணிகளை பார்வையிட்டு போதிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.இது தவிர, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்புதல், அப்பகுதியில் கிருமிநாசினி தெளித்து, அவர்களது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.திணறல்குறைதீர் கூட்டம், முதல்வர் தனிப்பிரிவுகளில் இருந்து வரும் புகார்களுக்கு பதில் அளித்தல் உள்ளிட்ட பணிகளை, சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.மழை காலங்களில் வடிகால் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை குறித்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.பணிகள் அதிகளவு இருந்தாலும் ஆட்கள் பற்றாக்குறையால், சுகாதார ஆய்வாளர்கள் திணறுகின்றனர். இதனால், பணிகளை முறையாக கண்காணிப்பு செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. நகர துாய்மை பணிகள் முழுமையாக நடைபெறுவதில் சுணக்கம் ஏற்படுகிறது.மாநகராட்சி அந்தஸ்த்துக்கு உயர உள்ள, பொள்ளாச்சி நகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் பணிச்சுமையை குறைக்க காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். துாய்மை பணியாளர்கள் பணியிடங்கள் நிரந்தரப்படுத்தி, போதுமான ஆட்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.நகரமைப்பில் சிக்கல்நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் மூன்று பேரும், கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் பணி மாறுதல் பெற்றனர். அதற்கு பின், ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால், அப்பணியிடங்களுக்கும் காலியாக உள்ளது. வீடு கட்ட, கட்டட வரைபட அனுமதி உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.குறைகளை தீர்ப்பார்களா?பொள்ளாச்சி நகராட்சியில் எவ்வித வளர்ச்சி பணிகளும் நடக்காமல் முடங்கியுள்ளது. பாதாள சாக்கடை திட்டம், நகராட்சி ரோடு பணிகள், நெடுஞ்சாலை ரோடுகள் விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலை பணிகள் முடங்கியுள்ள.இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் அதிகாரிகளின்றி ஸ்தம்பித்துள்ளது. நகர உள்ளாட்சி தேர்தலுக்காக, மக்கள் சபை கூட்டம் நடத்தி குறை கேட்கும் அமைச்சர், பிரச்னைகளை தீர்க்க முக்கியத்துவம் கொடுத்தால், மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE