தட்சிணகன்னடா:மங்களூரு சர்வதேச விமான நிலைய பகுதியில் அலையும் சிறுத்தையை பிடிக்க, மங்களூரு வனத்துறையின் மூலம் நான்கு கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் விமான தரை தளத்தில் சில நாட்களுக்கு முன், சிறுத்தை நடமாட்டத்தை பயணியர் பலரும் பார்த்துள்ளனர். அவர்களின் புகார் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மங்களூரு வனத்துறை அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் ஆய்வு செய்தனர்.
மங்களூரு எல்லை வன அதிகாரி பிரசாந்த்பாய் கூறியதாவது:விமான நிலையத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றுவதற்கும், சாக்கடை கால்வாய்களை பராமரிப்பதற்கும் நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சுவரை சுற்றியுள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளது.விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் நான்கு இடங்களில் சிறுத்தையை பிடிப்பதற்கான கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தை சுற்றிலும் வனப்பகுதியாக உள்ளது. சில நாட்களுக்கு முன், வளர்ப்பு நாய்கள் காணாமல் போவதாக பலர் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து விமான நிலையம் வெளிப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏழு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.