இந்திய நிகழ்வுகள்:
லலித் கோயல் கைது
புதுடில்லி: பிரபல ரியல் எஸ்டேட் குழும நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான லலித் கோயல் மீது அமலாக்கத் துறையினர் பண மோசடி வழக்கு பதிவு செய்தனர். 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்ட அவர் சமீபத்தில், டில்லி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
வியாபாரிகள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹைதர்போரா சாலையில், நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதில் இரு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய வியாபாரிகள் முகமது அல்தாப் பட், முடாசிர் ஆகியோர் கொல்லப்பட்டனர். காயமடைந்த பொதுமக்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பல் டாக்டரான முதாசிர் குல் நேற்று இறந்தார். இதற்கிடையே என்கவுன்டரில் அப்பாவி மக்கள் பலியாவது வருத்தம் அளிப்பதாக, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
14 மாநிலங்களில் சி.பி.ஐ., சோதனை
புதுடில்லி: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக 83 பேர் மீது, 23 வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்திருந்தது. இந்த வழக்குகள் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், பீஹார், ஒடிசா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய 14 மாநிலங்களில் 76 இடங்களில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அமேசானில் கஞ்சா; இரண்டு பேர் கைது
இந்துார்: மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு அமேசான் வாயிலாக கஞ்சா அனுப்பப்பட்டது. பிந்த் மாவட்ட போலீசார், 20 கிலோ கஞ்சா அடங்கிய பார்சலை பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு, 1கோடியே 10 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது.
இந்த கடத்தல் வியாபாரத்தில் அமேசான் நிறுவனத்துக்கு 66 சதவீத கமிஷன் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து இந்திய தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கி யானை பலி
பாலக்காடு: பாலக்காட்டில், மின்சாரம் தாக்கி யானை பலியானது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு மாவட்டம், மலம்புழா ஆனக்கல் அருகே உள்ள எலாக் வனப்பகுதி ஒட்டிய தோப்பில், குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் நடத்திய ஆய்வில், மோட்டார் ஒயரை இழுத்த போது மின்சாரம் தாக்கி, 3 வயதான யானை பலியானது தெரியவந்தது. மின்வாரியத் துறையினரும், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.கால்நடை மருத்துவர் தலைமையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
தமிழக நிகழ்வுகள்:
ஜீப் கவிழ்ந்து விபத்து; 7 தொழிலாளர்கள் காயம்
குன்னுார்: குன்னுார் கேத்தி பாலடா அருகே, கோலனி மட்டம் பகுதியில், தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
குன்னுார் பகுதி கேத்தி பாலடா அருகே கோலனிமட்டம், செலவிப்நகர் பகுதியில், பொக்லின் பயன்படுத்தி, சாலையோர தோட்டத்தில் காளான் கழிவு மூட்டைகள் எடுக்கும் பணி நடந்தது. இந்நிலையில். கனமழையால், அப்பகுதி சாலை சேறும் சகதியுமாக மாறியதால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டது.நேற்று காலை இந்த பகுதியில் இருந்து, டிரைவர் தயா என்பவர், ஜீப்பில், 12 பெண் தொழிலாளர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
அதிவேகத்தில் சென்றதால் ஜீப் சேற்றில் சிக்கி, சாலையோரம் உள்ள தோட்டத்தில் காளான் கழிவுகளுக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அப்பகுதி மக்கள், தொழிலாளர்களை மீட்டனர். இதில், காயமடைந்த கவிதா, 40, சரஸ்வதி 44, புஸ்பராணி 50, லதா 54, முத்து லட்சமி, 37, யசோதா 40, சாந்தி, 55 ஆகியோர் கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அதில், மூவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லவ்டேல் போலீசார் விசாரிக்கின்றனர்.

குழந்தைக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
கோத்தகிரி: கோத்தகிரி அருகே, இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சோலுார் மட்டம் அருகே வசித்து வருபவர் புஷ்பராஜ், 71. கூலி தொழிலாளியான இவர், இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.குழந்தையின் பெற்றோர் சோலுார்மட்டம் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், புஷ்பராஜை, குன்னுார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த மகளிர் போலீசார், புஷ்பராஜை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, குன்னுார் கிளை சிறையில் அடைத்தனர்.
பல்லி விழுந்த உணவு; 13 குழந்தைகள் மயக்கம்
ஆம்பூர்: பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் மயங்கி விழுந்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சோமலாபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, 120 குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று மதியம் 12:00 மணிக்கு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. பிற்பகல் 3:30 மணிக்கு, 13 குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.உடனடியாக, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், பயந்து போன மற்ற குழந்தைகளை, அவர்களின் பெற்றோர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விட்டனர்.
ஆம்பூர் சுகாதாரத் துறையினர், அந்த குழந்தைகள் வீடுகளுக்கு சென்று முதலுதவி அளித்தனர்.அங்கன்வாடி மைய ஆசிரியர் அஞ்சலி, சமையலர் மல்லிகா ஆகியோரிடம், மாவட்ட அங்கன்வாடி திட்ட இயக்குனர் கோமதி நடத்திய விசாரணையில், மதிய உணவில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது தெரிந்தது. தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
பெருந்துறை: இளைய மகள் காதல் திருமணத்தால் மனமுடைந்த தாய், மூத்த மகள், பேத்தியுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கோட்டைக்காட்டைச் சேர்ந்தவர் மல்லிகா, 58; கணவர் இறந்து விட்டார். மூத்த மகள் அமுதா, 34; கணவரை பிரிந்து, ஐந்து ஆண்டுகளாக தாயுடன் வசித்து வந்தார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் தனன்யா, 9; ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மல்லிகாவின் இளைய மகள் பூவிழிசெல்வி, 30; நேற்று முன்தினம் காதல் திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த மல்லிகா, அமுதா அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மகள் அமுதா, பேத்தி ஆகியோருடன், மல்லிகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமிக்கு திருமணம்; மூன்று பேர் கைது
தர்மபுரி: மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய், மணமகன், அவரது தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி அடுத்த புழுதிகரையைச் சேர்ந்தவர், கணவனை இழந்த, 37 வயதான பெண். இவர் பிளஸ் 1 படித்து வரும், தன் 16 வயது மகளுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, கவுரம்மாள், 45, என்பவரின் மகன் கார்த்தி, 25, என்பவருக்கு நேற்று முன்தினம் கட்டாய திருமணம் செய்து வைத்தார். புழுதிகரை வி.ஏ.ஓ., புஸ்பநாதன் புகார்படி, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், மாணவியின் தாய், மணமகன் கார்த்தி, அவரது தாய் கவுரம்மாள் ஆகியோரை கைது செய்தனர். மாணவியை மீட்டு, தர்மபுரி அடுத்த குறிஞ்சி நகர் வள்ளலார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய இரு பெண் உடல்கள் மீட்பு
சிவகாசி:சிவகாசியில் பட்டாசு கம்பெனியில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் சிக்கிய இரு பெண் உடல்கள் மீட்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி காலனியில் மதுரை, கோரிப்பாளையத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் பட்டாசு பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் இங்கு நடந்த வெடி விபத்தில், இருவர் காயத்துடன் தப்பினர். அங்கிருந்த இரண்டு மாடி கட்டடம் தரைமட்டமானதால் அங்கு பணியில் இருந்த ஹமீதா, 55; கார்த்தீஸ்வரி, 33 ஆகிய இரு பெண்கள் கட்டடத்திற்குள் சிக்கி இருப்பதாக காயம் அடைந்தவர்கள் தெரிவித்தனர்.
ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக, நேற்று முன்தினம் இரவு 9:30 மணி வரை மீட்பு பணி நடந்தது. நேற்று காலை 8:00 மணி முதல் மீண்டும் மீட்பு பணி துவங்கியது. 25 மணி நேர தேடலுக்கு பின், நேற்று மாலை 4:45 மணிக்கு இடிபாடுகளில் சிக்கிய இரு பெண்களின் உடலும் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டன.'கட்டட உரிமையாளர்ராமநாதன், அவரது மனைவி பஞ்சவர்ணம் குறித்த தகவல் இல்லை. அவர்கள் தலைமறைவாகி இருக்கலாம்' என போலீசார் தெரிவித்தனர்.
பா.ம.க., நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு; ஒருவர் காயம்
மதுரை: மதுரையில் பா.ம.க., நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை, சிந்தாமணி ரோடு ராஜம்மாள் நகரில் வசிப்பவர் மாரிசெல்வம்; பா.ம.க., இளைஞரணி மாநில செயலர். இவர் நேற்று காலை, உடல் வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், காலை 9:00 மணிக்கு பைக்கில் முக கவசம் அணிந்து இருவர் வந்தனர். அப்போது மாரிசெல்வத்தை பார்க்க வந்த சேகர் என்பவரிடம் 'மாரிசெல்வம் எங்கே' என கேட்க, அவர் வீட்டிற்குள் சென்று பார்த்து வருவதாக கூறி உள்ளே சென்றார். அப்போது, வீட்டு சுவரில் ஒரு நாட்டு வெடிகுண்டை இருவரும் வீசினர். சத்தம் கேட்டு சேகர் வெளியே வந்தபோது, மற்றொரு குண்டை சுவர் மீது வீசியதில் அதன் சிதறல் பட்டு, சேகர் காயமுற்றார். கீரைத்துரை போலீசார் விசாரிக்கின்றனர்.
திருமாவளவனை கண்டித்து சிவனடியார்கள் போராட்டம்
திருப்பூர்: ஹிந்து மதத்தை அவதுாறாக பேசி வரும் திருமாவளவனை கண்டித்து, திருப்பூரில் சிவனடியார்கள் நுாதன போராட்டம் நடத்தினர்.
சில நாட்களுக்கு முன், ஹிந்து மத வழிபாடுகள் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவதுாறாக பேசியுள்ளார்.இதற்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவ்வகையில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன், அனைத்து சிவனடியார் திருக்கூட்டத்தினர், தேவாரம், திருவாசகம், சிவபுராண பாடல்களை பாராயணம் செய்து, திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து, நுாதன முறையில் போராட்டம் நடத்தினர். பின், திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் திருமாவளவன் மீது புகார் அளித்தனர்.
கிணற்றுக்குள் பாய்ந்த ஜீப்; தந்தை, மகள் பரிதாப பலி
தர்மபுரி: ஜீப் கிணற்றில் பாய்ந்ததில், தந்தை, மகள் பலியாகினர். தாய் உயிருடன் மீட்கப்பட்டார்.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்தவர் வீரன், 40; பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமா, 35; மகள் சுஷ்மிதா, 13; ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் மேட்டூர் வந்த வீரன், குடும்பத்தினருடன் பொலீரோ ஜீப்பில், பெங்களூரு புறப்பட்டார். மதியம் 2:45 மணிக்கு தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பொன்னேரியில் உள்ள தாபாவில் மதிய உணவு சாப்பிட்டு புறப்பட்டனர்.
அப்போது, வீரனின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், அருகில் இருந்த 65 அடி ஆழ விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது. அப்போது ஜீப் கதவு திறந்ததால் உமா, கிணற்று நீரில் விழுந்து தத்தளித்தார். அவரை அருகே இருந்த சிலர் மீட்டனர். ஜீப்பில் இருந்த வீரனும், மகள் சுஷ்மிதாவும் காருடன் கிணற்றில் மூழ்கினர். இரவு, 8:45 மணிக்கு இருவரது சடலங்களும் மீட்கப்பட்டன.
2 போலீசாருக்கு கத்திக்குத்து
கொடைக்கானல்: கொடைக்கானலில் விசாரணைக்குச் சென்ற 2 போலீசாரை கத்தியால் குத்தி தப்பியவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தெரசா நகரை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் 35. போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள இவர் கோயம்புத்தூரில் வசிக்கிறார். நேற்று மாலை மூஞ்சிக்கல்லில் பைக்கில் வேகமாக சென்றார். எதிரே வந்த பெண் போலீசாரின் வாகனத்தில் இடிப்பது போல் சென்றுள்ளார்.
இதுபற்றி கேட்ட பெண் போலீசாரிடம் மிரட்டல் தொனியில் பதிலளித்துள்ளார். சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் தெரிவித்தனர்.இதையடுத்து போலீசார் சின்னசாமி 45, சீனிவாசன் 38, இருவரும் தெரசா நகர் வீட்டில் இருந்த சையது இப்ராஹிமை விசாரிக்க சென்றனர். அப்போது சையது இப்ராஹிம், கத்தியால் போலீஸ்காரர் சின்னசாமியை கழுத்தில் தாக்கினார்.
தடுக்கச் சென்ற சீனிவாசனுக்கும் கையில் காயம் ஏற்பட்டது. இருவரும் காயத்துடன் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். தப்பியோடிய சையது இப்ராஹிமை மலைஅடிவாரம் காமக்காபட்டி சோதனை சாவடியில் மடக்கிய, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விபசார புரோக்கர்களிடம் லஞ்சம் 2 இன்ஸ்பெக்டர் வீடுகளில் 'ரெய்டு'
சென்னை:விபசார புரோக்கர்களிடம் லஞ்சம் பெற்று, அதற்கு உடந்தையாக செயல்பட்ட, இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட், காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன், புழுதிவாக்கம் காவலர் குடியிருப்பில் வசிக்கிறார்.இவர்கள் இருவரும், 2018 ஜனவரி 8ம் தேதியில் இருந்து, மே மாதம் 15ம் தேதி வரை, விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றினர். அப்போது, நட்சத்திர ஓட்டல்களில் விபசாரம் நடத்திய புரோக்கர்களிடம், விபசாரம் தடையின்றி நடக்க பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், கைது செய்யப்பட்ட அழகிகளை விடுவிக்கவும், லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய பெண் உயரதிகாரி ஒருவர் அளித்த புகாரில், அவர்கள் இருவரின் மீதும் விசாரணை நடந்து வந்தது. இதில், இருவரும் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால், லஞ்ச தடுப்பு சட்டத்தின் கீழ், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சங்கர் தலைமையிலான போலீசார், இருவர் மற்றும் உறவினர் வீடுகள் என, ஐந்து இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்; காலை, 9:00 முதல் மாலை 6:00 மணி வரை நடந்த சோதனையில், புழுதிவாக்கத்தில் உள்ள, இன்ஸ்பெக்டர் சரவணன் வீட்டில் 2.50 லட்சம் ரூபாய்; வங்கி வைப்பு நிதி 18.50 லட்சம் ரூபாய் மற்றும் எட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, கீழ்ப்பாக்கம் சாம் வின்சென்ட் வீட்டில், 17 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த ஆவணங்களும் இருப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE