தமிழ்நாடு

குடிநீர் ஏரிகளில் இருந்து நீர் திறப்பு... அதிகரிப்பு! கன மழை எச்சரிக்கையால் நடவடிக்கை; வெள்ள தடுப்பு பணிகளும் தீவிரம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, குடிநீர் ஆதாரமாக திகழும் முக்கிய நீர்நிலைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கன மழையால் வெள்ளப்பெருக்குஏற்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, குடிநீர் ஆதாரமாக திகழும் முக்கிய நீர்நிலைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கன மழையால் வெள்ளப்பெருக்குஏற்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மழை நீர் தேங்கிய இடங்களில் இம்முறை கூடுதல் கவனம் செலுத்த, சென்னை மாநகராட்சி கமிஷனர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேங்கும் மழை நீரை உடனுக்குடன் அகற்ற, அதிக திறன் கொண்ட மோட்டார்களும் தயார் நிலையில் உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாத இறுதி யில் துவங்கிய வடகிழக்கு பருவ மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வாரம் அதிக கனமழை பெய்தது.இதனால், சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்து,

நீர் மட்டமும் மளமளவென உயர்ந்தது. உபரிநீர் வெளியேற்றம்இதையடுத்து, பாதுகாப்பு காரணங்கள் கருதி, மேற்கண்ட ஐந்து நீர்த்தேக்கங்களில் இருந்தும், உபரிநீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கத்தில் முதலில், 250 கன அடியில் துவங்கி, படிப்படியாக, 500, 1,000, 1,500, 2,000 கன அடியாக உபரி நீர் திறப்பு உயர்த்தப்பட்டது.செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், சில நாட்கள் தொடர்ந்து சராசரியாக, 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.அதே போல், புழல், பூண்டி, சோழவரம் நீர்த்தேக்கங்களிலும், உபரிநீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்பட்டது.

தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியதால், அதற்கு வரும் உபரி நீர் முழுதும் தொடர்ந்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் 10ம் தேதிக்கு பின், மழை அளவு படிப்படியாக குறைந்து, சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுவதால், நீர்நிலைகளுக்கான வரத்தும் குறைந்தது.இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, 250 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. பூண்டி, புழல், சோழவரத்திலும், உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால்,

கரையோரங்களில் வசிக்கும் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று கன மழையும், நாளை, அதிக கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திடீரென மழை கொட்டி தீர்க்கும்பட்சத்தில், குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

அதில் இருந்து ஒரே நேரத்தில் அதிகப்படியான உபரி நீரை திறப்பதால், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை, ஆரணியாறு கரையோர பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து கூடுதல் உபரிநீர் வெளியேற்றும் பணிகளை நீர்வளத் துறையினர் துவங்கியுள்ளனர். ஆந்திராவின் அம்மப்பள்ளி அணையில் இருந்தும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும் வரும் நீரின் வரத்து பூண்டி ஏரிக்கு அதிகரித்துள்ளது. எனவே, பூண்டியில் இருந்து வினாடிக்கு 7,046 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கத்தில் இருந்து வினாடிக்கு 1,151 கன அடி, புழலில் இருந்து வினாடிக்கு 1,195 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சோழவரத்தில் இருந்து வினாடிக்கு 215; தேர்வாய் கண்டிகையில் இருந்து வினாடிக்கு 188 கன அடி நீர் திறக்கப்பட்டுஉள்ளது.

'ரெட் அலெர்ட்'ஏரிகளுக்கு வரும் நீரின் அளவை, நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா உத்தரவுப்படி, கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இரவு நேர பாதிப்புகளை தவிர்க்க, நேற்று மாலை 6 மணிக்கு பிறகும், இன்று அதிகாலை 6 மணிக்குள்ளும், கூடுதல் உபரி நீரை திறக்க அரசு தடை விதித்துள்ளது.ஏரிகளுக்கு வரும் நீரின் வரத்தை பொறுத்து, இன்று காலை 6 மணிக்கு பிறகு உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படவுள்ளது.சென்னைக்கு மீண்டும் 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன், காணொலி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், சென்னையில், மீண்டும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, அந்தந்த மண்டல அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

ஏரிகள் - நீர் திறப்பு செம்பரம்பாக்கம் - 1,151புழல் - 1,195பூண்டி - 5,786 சோழவரம் - 215 தேர்வாய்கண்டிகை - 188கமிஷனர் உத்தரவுசென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: மழை நீர் தேங்கிய இடங்களில், நீர் செல்லாமல் இருந்ததற்கான அடைப்புகளை நீக்க, அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், தேவையான இடங்களில் முன்கூட்டியே, ஜே.சி.பி., வாகனம், மோட்டர் பம்புகள், வாகனங்கள் போன்றவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொறியாளரும், 10 பணியாளர்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  தற்போது, 20க்கும் மேற்பட்ட சமயற்கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. தேவையான மளிகை பொருட்களும் உள்ளன. 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.  40க்கும் மேற்பட்ட இடங்களில், மீனவர்களுடன் கூடிய படகுகள், இன்று முதல் தயார் நிலையில் நிறுத்தப்படும்.

தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, உடனடியாக பிளிச்சீங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரை வழங்கப்படும். சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தண்ணீர் தேங்கிய இடங்களில், லாரிகள் வாயிலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் அதிகாரிகள், அந்தந்த மண்டலங்களில் முகாம் அமைத்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின், 1913 என்ற எண், 24 மணி நேரமும் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.நீர் இருப்பு நிலவரம்திருவள்ளூர் மாவட்டத்தில் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி., ஆகும். தற்போது, ஐந்து ஏரிகளிலும் சேர்த்து 9.96 டி.எம்.சி., நீர்இருப்பு உள்ளது. அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் 2.98 டி.எம்.சி., புழலில் 2.84, பூண்டியில் 2.76 டி.எம்.சி., நீரும் இருப்பு உள்ளது. சோழவரத்தில் 0.79 டி.எம்.சி.,யும், தேர்வாய் கண்டிகையில் 0.50 டி.எம்.சி.,யும் உள்ளது. வடகிழக்கு பருவமழை டிச., மாதம் இறுதிவரை நீடிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, 10 டி.எம்.சி.,க்கும் குறைவாக ஏரிகளில் நீர் இருப்பு பராமரிக்கப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நிரம்பி வழிகிறது. அதிலிருந்து தொடர்ந்து ஒரு வாரமாக உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X