மேட்டூர்: ''முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், 1979ம் ஆண்டில் ஒரு நள்ளிரவில் என்ன நடந்தது? என்பது இன்னமும் புரியவில்லை'' என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேட்டூர் அணையை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து திப்பம்பட்டியில், உபரி நீர் பாசன திட்டத்தில், ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து கூறியதாவது: மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்பும், 565 கோடி ரூபாய் திட்டத்தை நானே ஆரம்பித்து, துவக்கி வைத்துள்ளேன் என்றுதான் முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். முடித்து வைப்பேன் என கூறவில்லை. திட்டத்தை தி.மு.க., அரசுதான் முடித்து வைத்து, நீரை திறந்து வைத்துள்ளது. இந்த திட்டத்துக்கு இன்னும் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
நள்ளிரவில் தலைவலி: திரேதாயுகத்தில் இருந்து முல்லை பெரியாறு விவகாரம் நீடிக்கிறது. கேரளா அரசுடன் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தையில், ஒரு அடி கூட முன்னேற்றத்தை காணவில்லை. ஒவ்வொரு அடிக்கும் உச்சநீதிமன்றத்தில்தான் தீர்ப்பு பெற்றிருக்கிறோம். அணையை மூன்று கட்டமாக பலபடுத்த வேண்டும் என அவர்கள் கூறினார்கள். கடந்த, 1979ம் ஆண்டு ஒரு நள்ளிரவில் முல்லை பெரியாறு அணை தலைவலி துவங்கியது. அப்போதைய மத்திய நீர் ஆணைய தலைவர் தாமஸ், அணையை பார்வையிட்டு பலமாக இருக்கிறது. பயப்பட தேவையில்லை என, அணை மீது நின்று நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
திடீர் மாற்றம்: அடுத்த நாள் அங்குள்ள அதிகாரிகளை திருவனந்தபுரத்துக்கு வரவழைத்தார். முல்லை பெரியாறு அணையில், 152 அடி தேக்க வேண்டிய நீரை, 136 அடிக்கு மேல் தேக்க கூடாது. அவசரமாக செய்ய வேண்டியது, மெதுவாக செய்ய வேண்டியது, நீண்டகாலம் செய்ய வேண்டியது என மூன்று விதமாக அணையை பலப்படுத்தும் தொழில் நுட்பத்தை வழங்குகிறோம். அதில் இரண்டு தொழில் நுட்பத்தை நிறைவேற்றினால், 142 அடி நீரை சேமிக்கலாம். அடுத்து, 152 அடி வரை நீரை சேமிக்கலாம் என கூறினார்கள். அதை நம்பி நாங்கள் அதற்கான பணிகளை செய்தோம். நான், 15 ஆண்டுகள் இந்த துறையை கவனித்துள்ளேன். பலமுறை கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். இன்னமும் எனக்கு புரியாத விஷயம், முதல்நாள் அணை பலமாக இருக்கிறது எனக்கூறிய, மத்திய நீர் ஆணைய தலைவர் அடுத்த நாளே, 136 அடிக்கு மேல் நீரை தேக்க கூடாது என கூறினால், முதல் நாள் இரவில் ஏற்பட்ட மாற்றம் என்ன?
முதல்வர் அனுமதி உண்டா: அடுத்து ஒரு அணையில், 152 அடி வரை தேக்க வேண்டிய நீரை, 136 அடி வரைதான் தேக்க முடியும் என்றால், அது முதல்வர் அனுமதியின்றி ஒத்துக்கொள்ள முடியாது. அப்படி தேக்க வேண்டும் என்றால் அமைச்சர்கள் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். எந்த அமைச்சர்களும் கையெழுத்து போடவில்லை. அப்போது எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தார். கடந்த, 1989ல் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அப்போது அணையை பலப்படுத்த மூன்று கட்ட தொழில்நுட்பங்களையும், தமிழக அரசு நிறைவேற்றிய பின், மீண்டும் கூடுதலாக நீரை தேக்க ஒத்துக்கொள்ள மாட்டோம் எனக்கூறி விட்டனர். இது தொடர்பாக கேரளா பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கூடுதல் நீரை சேமிக்க, தமிழக அரசும் ஒரு வழக்கு போடப்பட்டது. ஒரு விவகாரத்திற்காக இரு மாநில நீதிமன்றத்தில் வழக்கு நடக்க வேண்டாம் என்பதற்காக, நாங்கள்தான் அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதை தொடர்ந்து அணையில், 142 அடி வரை நீரை நிறுத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியது.
கேரள அரசு சட்டம்: அப்போது கேரளா அரசு ஒரு சட்டம் போட்டது. கேரளாவுக்குள் இருக்கும் அணைகளில், நீரை தேக்குவது குறித்து மாநில அரசே முடிவு செய்யும் என்பதுதான் அந்த சட்டம். அதில் முல்லை பெரியாறு அணை பெயரையும் குறிப்பிட்டு, 136 அடி மட்டுமே நீரை தேக்க வேண்டும் என கூறி விட்டனர். அதன் பின் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. எப்போது தி.மு.க., ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது அணை குறித்து வெளிப்படையாக தெரிவிக்கிறோம்.
புது அணைக்கு அனுமதியில்லை: புது அணை கட்ட அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அணை கட்ட அ.தி.மு.க., வாக இருந்தாலும் சரி, தி.மு.க.,வாக இருந்தாலும் சரி யாரும் ஒத்து கொள்ளமாட்டோம். மேகதாது அணை கட்ட, கர்நாடகா அரசு திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால், தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாதென, மத்திய நீர் ஆணையம் தடை விதித்து விட்டது. முல்லை பெரியாறு அணையில் நவ.,20ல், 141 அடி நீரை தேக்க வேண்டும் என அளவீடு உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். ஏரிகளை முறையாக தூர்வாரவில்லை என முன்னாள் முதல்வர் கூறுகிறார். அதையேதான் நாங்களும் கூறுகிறோம். சேலம் மாவட்டத்தில் தோனிமடுவு அணை கட்டும் திட்டம் தொடர்பாக எனக்கு எந்தவித தகவலும் வரவில்லை. காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் பேச்சு வார்த்தையிலேயே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து எம்.காளிப்பட்டி ஏரியில் நிரம்பிய, மேட்டூர் அணை உபரி நீருக்கு, அமைச்சர் துரைமுருகன் மலர் தூவினார். இதையடுத்து உபரி நீர் ராயப்பன் ஏரி, சின்ன ராயப்பன் ஏரி, மானத்தாள் ஏரியில் நிரப்பப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின் போது மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், தி.மு.க., மாநகர் மாவட்டம், சேலம் மேற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வகணபதி, சிவலிங்கம், சேலம் எம்.பி., பார்த்திபன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் கோபால், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE