மழை பாதிப்புகளை தவிர்க்க நீண்டகால திட்டம் தேவை!| Dinamalar

மழை பாதிப்புகளை தவிர்க்க நீண்டகால திட்டம் தேவை!

Added : நவ 17, 2021
Share
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இம்மாதம் 6ம் தேதி முதல், 11ம் தேதி வரை பெய்த கனமழையால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வசிப்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.சென்னையில் மட்டும் ஐந்து நாட்களில், 46 செ.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்,
 மழை பாதிப்புகளை தவிர்க்க  நீண்டகால திட்டம் தேவை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இம்மாதம் 6ம் தேதி முதல், 11ம் தேதி வரை பெய்த கனமழையால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வசிப்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சென்னையில் மட்டும் ஐந்து நாட்களில், 46 செ.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மாநகரின் பல பகுதிகளில் வசிப்பவர்களது இயல்பு வாழ்க்கை இன்று வரை சீராகவில்லை. இதற்கு முன், 2015ல் பெரும் வெள்ள பாதிப்பை சென்னை மாநகரம் சந்தித்த போது, மீண்டும் அதுபோன்ற நிலைமை உருவாகக் கூடாது என பலரும் நினைத்தனர். அதற்கேற்ற வகையில், அரசு இயந்திரங்கள் செயல்படும் என்றும் நம்பினர்.

ஆனாலும், நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. மழை நீர் வடிகால்களை துார்வாரும் பணி, சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் வீதி கள் தோறும் தேங்கி நிற்கும் வெள்ள நீரை பார்க்கையில், பிரச்னையை தீர்ப்பதில் போதிய அளவில் முன்னற்றம் காணப்படவில்லை என்றே தோன்றுகிறது. இல்லையெனில், கால்வாய்களை சீர் செய்யும் பணி பெயரளவிற்கே கண்துடைப்பாக நடந்திருக்க வேண்டும்.

பருவமழை பாதிப்பால் மக்கள் படும் அவதியை பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதிகளே, 'சென்னையில் கோடை காலத்தில் தண்ணீரை தேடி ஓடும் நிலைமை யும், மழை காலத்தில் தண்ணீரை கண்டு ஓடும் நிலைமையும் உள்ளது' என கவலையுடன் கூறியுள்ளதை, ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த 2000ம் ஆண்டுக்கு பின், சென்னை மாநகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. புறநகர் பகுதிகளில் பெரிய அளவில் குடியிருப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக அடுக்குமாடி வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சென்னையிலும் முன்னர் தனி வீடுகளாக இருந்த இடங்கள் எல்லாம், தற்போது பல அடுக்கு மாடி வீடுகளாகி விட்டன. ஆனால், அதற்கேற்ற வகையில், பாதாள சாக்கடை வசதிகளும், கழிவு நீர் வெளியேறும் வசதிகளும் மாற்றப்படவில்லை.

வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என அரசு உத்தரவிட்டிருந்தாலும், அவை முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி விட்டால், அத்துடன் பிரச்னை தீர்ந்து விட்டது என ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நினைக்கின்றனர்; அந்த நிலைமை மாற வேண்டும்.

மழை நீர் கால்வாய்கள், பாதாள சாக்கடைகள் செல்லும் வழிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவற்றை அகற்றுவதில் அரசு கடுமை காட்ட வேண்டும். தற்போதுள்ள மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, பாதாள சாக்கடைகளையும், கழிவு நீர் கால்வாய்களையும் அகலப்படுத்த வேண்டும் மற்றும் மேம்படுத்த வேண்டும். அப்போது தான் தண்ணீர் தேக்கமின்றி வெளியேறும். ஏரிகள், குளங்கள், நீர்வரத்து கால்வாய்கள் எல்லாம், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்திற்கு முன் முறையாக துார்வாரப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும், வெள்ள நீர் வெளியேறாமல் பல பகுதிகளில் தேங்கியிருப்பதற்கு, நீர் நிலைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களை, மக்கள் குப்பை கொட்டும் இடங்களாக மாற்றியதே முக்கிய காரணம். இந்த விஷயத்திலும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

அத்துடன், குறிப்பிட்ட தடிமன் உள்ள பிளாஸ்டிகள் பைகள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ள போதும், அதை முழுமையாக அமல்படுத்தாததால் அவற்றின் பயன்பாடு தொடர்கிறது. அவற்றாலும், பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுகிறது. சென்னை மாநகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சீரமைக்கவும், 2005 முதல் தற்போது வரை, அரசும், மாநகராட்சியும், 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, புள்ளி விபரங்கள் தெரிவித்தாலும், நிலைமை என்னமோ மேம்பட்டதாக தெரியவில்லை.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் அமல்படுத்தப்பட்ட தி.நகர் போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் தேங்குவது தொடர்கிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். அதற்கு தற்போதைய அரசாவது முனைப்புடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

எவ்வளவு மழை பெய்தாலும், பாதிப்புகளை சந்திக்காத வகையில், மக்கள் எப்போது தங்களின் இயல்பு வாழ்க்கையை தொடர முடிகிறதோ, அப்போது தான் சென்னை சிங்கார சென்னை என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X